ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...

டெல்லியில்..

நான் சுற்றுலாத்துறையில் பணிபுரிந்த காலத்தில், டெல்லிக்குச் சென்றிருந்த போது, அங்கே எனது நண்பர் முரளி அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். முரளி, சென்னையில் அம்பாசடர் பல்லவா ஓட்டலின் மூத்த நிர்வாகியாக இருந்தவர். டெல்லியில் அம்பாசடர் ஸ்கை செ·ப் ஓட்டலில் பொது மேலாளராக அப்போது பணியாற்றி வந்தார். அந்த ஓட்டலின் சமையல் அறையையும் ஆய்வுக்கூடத்தையும் பார்வையிட அவர் என்னை அழைத்திருந்தார்.

இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையப் பயணிகளுக்கு அவர்கள் உணவு வழங்குவது எனக்குத் தெரியும். உணவைத் தட்டுகளில் வைத்துக் கட்டி எடுத்துப் போய் விமானப் பயணிகளுக்குப் பரிமாறுவார்கள் என்று நினைத்துக் கொண்ருந்தேன். ஆனால் விமானப்பயணிகளுக்கு அப்படியல்ல என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன். உணவு புதிதாக வடிவமைக் கப்பட்ட ஒரு சாதனத்தில் தரமான, சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு, பராமரிக்கப் படுகிறது. கையாளும் ஊழியர்கள் உடல்நலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சமையல் ஒரே தரமும், சுவையும் கொண்ட தாக இருக்க வேண்டும். இது போன்று பல கடுமையான விதிமுறைகள் உள்ளன.

புதிய சமையல் பகுதிக்குள் நாங்கள் நுழையுமுன் வெள்ளை மேல்சட்டையும், தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்து கொண்டோம். கைகளை வெறும் நீரிலும் பிறகு குளோரின் கலந்த நீரிலும் கழுவிக்கொண்டு, அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைவது போல் நுழைந்தோம். ஒருநாளில் இருபத்து நான்கு மணி நேரமும் நவீன சாதனம் இயங்குகிறது. சில விமானப்பயணிகளுக்கு மதிய உணவும், சில பயணிகளுக்கு இரவு உணவும், மற்றும் காலைச் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. எல்லா காய்கறிகளும் குளோரின் கலந்த தண்ணீரில் இருமுறை சுத்தம் செய்யப் படுகின்றன. தண்ணீரில் குளோரின் உள்ளதா என்று சோதனை செய்யப் படுகிறது. நல்ல கனிமமுள்ள குடிநீர்தான் பயன்படுத்தப்படுகிறது. இமாலயத்திலிருந்து வரவழைக்கப்படும் தண்ணீருக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். வெட்டுக் கத்திகள் கொதிக்கும் வெந்நீரில் சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விமான நிறுவனத்துக்கானவையும் குறிப்பிட்ட தனி இடங்களில் வைக்கப்படுகின்றன. சமைத்த உணவு ஒன்பது டிகிரி வெப்பநிலையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. அதே வெப்ப அளவு உள்ள வாகனத்தில் அது விமானத்துக்குச் செல்கிறது.

வெவ்வேறு நாட்டுப் பயணிகளுக்கும் ஏற்றவாறு பொருத்தமான ரொட்டிகள் செய்யப்படுகின்றன. ஜப்பானிய உணவு அங்கிருந்து தருவிக்கப்பட்டு, ஜப்பானியப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. சமையல் அறைக்குள் நுழைவதற்கு முன் எங்களுக்கு, மிகவும் விலை உயர்ந்த கோழிக் கறி வகைகள் பரிமாறப்பட்டன. சாம்பார், கத்திரிக்காயில் ஒரு பக்குவம் இருந்தது. ஜப்பானிய சாதத்தையும் காய்கறிகளையும் தட்டில் வைத்து, 'சாப்ஸ்டிக்' குச்சியால் சாப்பிட்டோம். இந்திய விமான நிறுவனத் தின் அன்னாசிப்பழப் பணியாரத்தையும் ஸ்விஸ் விமான நிறுவனத்தின் மாம்பழ ஜாமையும் ருசித்தோம்.

ஸ்கை செ·ப் ஓட்டல் நவீன ஆய்வுக்கூடம் ஒன்றைக் கொண்டுள்ளது. தரக்கட்டுப் பாட்டுக்காக உணவு மாதிரிகள் அவ்வப் போது அங்கு சோதனை செய்யப் படுகின்றன. ஓட்டலுக்குள்ளேயே ஊழியர் களின் உடல் நலனைப் பரிசோதனை செய்ய ஒரு மருத்துவர் இருக்கின்றார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஊழியர்கள் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அவர்களுடைய ஆரோக்கியம் பற்றிய மருத்துவ அறிக்கைகள் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. எந்த நேரத்திலும் விமானப்போக்குவரத்து நிறுவனத்தினர் அவற்றைப் பார்வையிடலாம். இந்த நவீன சமையல் கூடத்தைப் பார்வையிட்ட பிறகு, விமானப்பயணிகளுக்குத் தயாராகும் உணவு மிகவும் சுகாதாரமானது, பாதுகாப்பானது, அதிக சத்து நிறைந்தது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

1978ல், முதல் தடவை நான் இந்தியாவிற்கு வெளியே விமானத்தில் பயணம் செய்த போது, பயணிகளுக்கு சைவ உணவு கிடைத்ததில்லை. ஆனால் இன்று எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸில் தமிழ் வீரர் வம்சாவளி

1988ல் பொதுநலத்துறை செயலாளர் தலைமையில் பிலிப்பைன்ஸ் சென்ற தூதுக்குழுவினரோடு நானும் சென்றேன்.

தூதரகத்தில் சில அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மணிலாவின் புறநகர்ப் பகுதியில், ஒரு கிராமத்தில் மக்கள் குழு ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அறிந்து கொண்டேன். சென்னையிலிருந்து வந்த போர் வீரர்களுடன் இவர்கள் வம்சாவளி இணைத்துப் பேசப்பட்டது. ஆங்கிலோ-ஸ்பானிஷ் போர் நடந்த போது பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக இவர்கள் பிலிப்பைன்ஸ்க்குக் கொண்டு வரப்பட்டு போரில் பங்கு பெற்றுள்ளனர். உடனடியாக நான் அவர்களைச் சந்திக்க விரும்பினேன். மணிலாவில் உள்ள தூதரகத்தினர் நான் அங்கு சென்று வர ஏற்பாடு செய்தனர். ஒரு மூத்த அதிகாரியின் பாதுகாப்புடன் அந்த கிராமத்தில் உள்ள சிறிய மாதா கோவிலுக்குச் சென்றேன். அங்கு முன்பே கேரளத்தைச் சார்ந்த இரண்டு சகோதரிகளை நியமிக்கப் பட்டிருந்தனர். இந்த மக்களின் மரபு வழியைக் கண்டறிய அவர்கள்தான் காரணகர்த்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

நீண்டகாலமாக பிலிப்பைன்ஸ், ஸ்வீடன் நாட்டின் காலனியாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொள்ள பிலிப்பைன்ஸைக் கைப்பற்ற விரும்பியது. சண்டையில் உதவிக்காக ஒரு படைப்பிரிவு சென்னை யிலிருந்து பிரிட்டிஷாரால் அனுப்பி வைக்கப்பட்டது. பல ஆண்டுகள் சண்டை தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னையில் இருந்து வந்த பல சிப்பாய்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களின் அழகில் மயங்கிவிட்டனர். சண்டை முடிவுக்கு வந்த பிறகு சிப்பாய்களில் பதினெட்டு பேர் சென்னைக்குத் திரும்பி வர மறுத்து ராணுவத்திலிருந்து ஓடி விட்டார்கள். அவர்களை அங்கேயே விட்டுவிட்டுக் கப்பல் இந்தியா திரும்பிவிட்டது. பின்னர் இவர்கள் மணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டாலும், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து வாழ்வது இரண்டு காரணங்களால் மிகக் கடினமாக இருந்தது. முதலாவது, அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் சிப்பாய்கள். இரண்டாவது அவர்களுடைய கறுப்பு நிறம். இந்தக் காரணங்களால் அவர்கள் தனி வகுப்பினராக ஒதுங்கி வாழ்ந்து வந்தனர். நிறம்தான் கறுப்பே தவிர, இன்று அவர்கள் பிற பிலிப்பைன்ஸ் மக்களைப் போலவே காணப்படுகிறார்கள். அதே மொழியில் பேசுகிறார்கள். அவர்களைப் போலவே உடுத்திக் கொள்கிறார்கள். சராசரி பிலிப்பைனியர்களைவிட சற்றுக் காரசாரமாக, மணமுள்ள உணவு அருந்துகிறார்கள்.

##Caption##அந்த கிராமத்திற்கு நான் சென்றபோது அவர்கள் மிக அன்போடு என்னை வரவேற்றனர். எல்லோரும் தங்கள் வீட்டுக்கு வருமாறு என்னை அழைத்தனர். சிலர், ராணுவச் சீருடையில் இருந்த சிப்பாய்களின் மங்கலான புகைப்படங்களை என்னிடம் காட்டினர். சில குடும்பங்கள், தங்களது பரம்பரைச் சொத்தாக வைத்திருந்த சிப்பாய்களின் பதக்கங்கள், இரும்பு வார் பட்டைகள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றை நான் பார்த்தேன். சாம்பார், பாயசம் ஆகியவை இன்னும் அவர்களின் உணவில் இருந்தாலும்கூட, வழக்கமான பிலிப்பைன் உணவையே புசிக்கிறார்கள்.

ஏற்கெனவே சென்னையில் கன்னியா மடத்திலிருந்து வந்திருக்கும் சன்னியாசினிகளை அவர்கள் சந்தித்திருந்தாலும், அவர்களது வாழ்க்கையில் சென்னை யிலிருந்து வரும் ஒருவரை அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தார்கள். இந்தத் தனிப்பட்ட வகையிலான மக்கள் அங்கு வாழ்ந்து வருவதைச் சன்னியாசினிகள் அப்போதைய இந்திய தூதுவருக்குத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தகவல் உண்மையாக இருக்கமுடியாது என்பதுதான் இந்தியத் தூதுவரகத்தின் முதல் மறுமொழியாக இருந்தது. ஆனாலும் பல ஆய்வுகள் செய்ததில், சென்னை ஆவண அலுவலகத்திலிருந்து ஆங்கிலோ-ஸ்பானிஷ் யுத்தத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து ஒரு படைப்பிரிவு அனுப்பட்டதும், அதில் சிலர் வீடு திரும்பாததும் உறுதி செய்யப்பட்டது. அப்போதைய தென்னிந் தியாவில் பிரிட்டிஷ் தலைமைச் செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட தகவலறிக்கையில், சிப்பாய்கள் தவறிப் போனது குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் அந்தக் கதை உண்மை என கண்டறியப் பட்டது.

இந்த விந்தையான மக்களைச் சந்தித்தது எனக்கு ஒரு மாபெரும் அனுபவம். அவர்களின் அன்பை என்றும் மறக்கமுடியாது. விருந்துக்குப்பின் நீர் நிரம்பிய கண்களுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com