காதலர்தினத்தன்று சுவைக்க....
காதலர் தினம் (Valentine's Day) என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ரோஜாமலர், ரோஜாநிறம், இருதய வடிவம். சாக்லேட் இல்லாமல் காதலர் தினமா! அதுவும்தான்.

இந்தப் பொருட்கள் முக்கிய அங்கம் வகிக்கும் சிலவற்றைச் செய்து சுவைக்கலாமா?

அமெரிக்க அங்காடிகளில் இருதய வடிவிலான குக்கீ கட்டர்கள் (cookie cutters) பல அளவுகளில் கிடைக்கும். இவை இந்தச் செய்முறைகளில் பயன்படுத்தப் போகிறோம்.

வாலன்டைன் கேக்

தேவையான பொருட்கள்

மைதா அல்லது முழுகோதுமை மாவு - 2 1/4 கிண்ணம்
பொடித்த சர்க்கரை - 1/2 கிண்ணம்
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உருக்கிய வெண்னெய் - 1/3 கிண்ணம்
முட்டை - 2
வனிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
ஸ்ட்ராபெரி பழங்கள்- கொஞ்சம்
பால் - 1/2 கிண்ணம்

செய்முறை

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போட்டு நன்றாகக் கலக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பால், வெண் ணெய், முட்டை, வனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை மாவுக் கலவையுடன் சேர்த்து மென்மையாகக் கலக்கவும்.

இதை 1/4" கனத்திற்கு ஒரு பேக்கிங் பானில் பரப்பி 350 டிகிரி ஃபாரன்ஹீட் சூடாக்கப்பட்ட அவனில் வேகவைக்கவும். பின்னர் இதன் நடுவில் சிறிய மரக்குச்சியை விட்டு எடுத்தால் பிசுக்காக இல்லாமல் இருந்தால் கேக் பதம் வந்துவிட்டது எனத் தெரியும்.

பின்னர் இதை எடுத்துச் சற்று ஆறிய பின்னர் ஒரு 3 1/2" ஹார்ட் வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டவும். வெட்டி வரும் heart shaped cake துண்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன்மேல் இருதய வடிவில் வெட்டிய ஸ்ட்ராபெரி பழத் துண்டங்களை வைக்கவும்.

ஒரு ரோஜா மலரையும் அலங்காரமாக நடுவில் வைக்கலாமே!

இருதய வடிவில் ஸ்ட்ராபெரியை எப்படி வெட்டுவது என்று பார்ப்போம். ஒரு ஸ்ட்ராபெரியை எடுத்துக் கொண்டு, நல்ல கூரான கத்தியால் அதன் பச்சைநிற இலைகளை அகற்றவும். பின்னர் அந்த இலைகள் இருந்த இடத்தையும் கத்தியால் நீக்கவும். இதனை hulling என்பர்.

பின்னர் பழத்தை துண்டுகளாக்கினால் இருதய வடிவில் துண்டுகள் கிடைக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com