இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்'
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. இப்பொழு தெல்லாம் எல்லாருமே வண்ணான்களாகி விட்டோம். அதையும் சலவை இயந்திரங் களிடம் ஒப்படைத்துவிட்டோம். இந்த முன்னேற்றங்களை அனுபவிக்கும் அதே நேரத்தில் பின்புலத்தில் எங்கோ அழும் ஆரோக்கியத்தின் ஒப்பாரி நமக்குக் கேட்பதில்லை. இதனை நம் கவனத்திற்கு ஓரளவேனும் கொண்டு வரும் முயற்சிதான் கதாசிரியர் இமையத்தின் 'கோவேறு கழுதைகள்'.

ஊருக்கு ஒரு வண்ணான்குடி. ஊர்க்காரர் களின் சகலவிதமான துணிகளையும் அருவருப்பின்றிச் வெளுப்பது அவர்களது முதல் வேலை. காலையில் ஒவ்வொரு வீட்டிலும் சென்று துணிபோடச் சொல்லிக் கூவி, அவற்றை மூட்டைகளாய்க் கட்டி, தொரப்பாட்டுக்குச் (வண்ணாந்துறைக்கு) சுமந்து சென்று, உயமண் போட்டு வெளுத்து, பாறையில் அடித்து, நீரில் அலசிக் காயவைக்க வேண்டும். காய்ந்ததை மடித்து பத்திரமாக மீண்டும் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும். துணிகளின் கிழிசல் களைத் தைப்பதும் அவர்களது வேலையே. அவர்களுக்குக் கூலி என்று எதுவும் கிடையாது. இரவானதும் குண்டான்களைத் தூக்கிக்கொண்டு வீடு வீடாகப் போய்ச் சோறு கேட்டு நிற்கவேண்டும். எல்லா நாளும் குண்டான்கள் நிரம்புவதில்லை.

சலவையைத் தவிர அறுவடைக் காலத்தில் களம் தூற்றுவதும், பெண்களுக்கு மார் கட்டிப்போனால் இளக்குவதும், பிரசவம் பார்ப்பதும், இழவு வீட்டில் பாடை கட்டுவதும், வாய்க்கரிசிப் பானைகளைச் சுமந்து வருவதும், பொங்கல், திருவிழா, திருமணக் காலங்களில் எடுபிடி வேலை களைச் செய்வதும் ஊரில் வண்ணான்-வண்ணாத்திகள்தாம். அறுவடைக் காலத்தில் கொஞ்சம் தானியமும், திருவிழாக் காலத்தில் பலியிடப்பட்ட ஆடு, பன்றிகளின் தலை களும், இழவில், பிணத்தின் மேல் போர்த்தப் பட்ட கோடித்துணி, வாய்க்கரிசி மற்றும் சில்லறைக் காசுகளும் அவர்களது வருமானத் தில் அடங்கும் என்றாலும், இக்காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் அவர்கள் அளிக்கும் அசுர உழைப்பை ஒப்பிடுகையில் இந்த வரவு மிகச் சொற்பம்.

தகழி சிவசங்கரன்பிள்ளையின் 'தோட்டி யின் மகன்' போன நூற்றாண்டுத் தோட்டி களின் வாழ்வை எப்படிப் படம்பிடித்ததோ, அப்படியே 'கோவேறு கழுதைகள்'. நேற்றைய துக்கங்களின் பாரம், இன்றைய பொழுதின் வேலைச்சுமையைத் தாங்கி, நாளைய பொழுதின் நிச்சயமின்மையில் தொடர்ந்து உழலும் வண்ணான்குடிகளின் அவல வாழ்க்கையை ஆரோக்கியம்-சவுரியின் வழியாக நமக்குப் பரிச்சயம் செய்து வைக்கிறது.

ஆரோக்கியத்தின் கால்கள் ஊர்க் காலனிக்காரர்களின் வீட்டிற்கும் தொரப் பாட்டிற்கும் நடையாய் நடக்கின்றன. அவள் புருஷன் சவுரியின் முதுகு துணி மூட்டை களைச் சுமந்து சுமந்து கூன்விழுந்து கிடக்கிறது. அவள் முதல் மகன் ஜோசப், அவன் பெண்டாட்டி சகாயத்தின் பேச்சைக் கேட்டு, சின்ன சேலத்திற்குச் சொந்த சலவைக்கடை வைக்கப் போய்விடுகிறான். ஆரோக்கியமே வயதிற்கு வந்த மகள் மேரிக்கு ஒரு வாழ்க்கையைத் தேடித்தர வேண்டும். மற்ற நேரத்தில் எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, மேரி துணியெடுக்கப் போகும்போது மட்டும், ஆடையை ஊடுருவிப் பார்க்கும் ஊர்க்காரப் பெரிய ஆண்களின் பார்வையை ஆரோக்கியம் அறிந்துதான் வைத்திருக்கிறாள். ஒரு கல்யாணம் காட்சி செய்வதற்கு அறுவடைக் காலத்தில் கிடைக் கும் அள்ளுமுற-தானியங்களை அவள் நம்பிக்கொண்டிருக்கிறாள். ஆனால் வருடாவருடம் அறுவடையில் கிடைக்கும் படி நான்கு முறம், மூன்று முறம் என்று குறைந்து இரண்டு முறமாகி விட்டது.

திருவிழாக் காலத்தில் கூட இப்பொழு தெல்லாம் பன்றியின் தலை, குடல்களை ஏலம் விடுகிறார்களே தவிர வண்ணாத்திக் குத் தர ஊர்ப்பெரியவர்களுக்கு மனம் வருவதில்லை. பிரசவத்திலோ இழவிலோ கிடைக்கும் படியும் குறுகிச் சிறுத்துவிட்டது. ராச்சோறும் குறைந்துவிட்டது. குடும்பத் துடன் அந்தோணிசாமியார் கோவிலுக்குப் போய், ஊரில் உள்ளவர்களை வண்ணாரக் குடிக்குக் கருணைகாட்டச் சொல்லப் பாதிரியாரிடம் விண்ணப்பித்திருந்த போதும் அவர் வரவில்லை. அதை விடுத்து, அவளது கடைசி மகன் பீட்டரைத் தன்னைப் போலப் பாதிரியாராக்குகிறேன் என்று கூட்டிப்போக ஆள் அனுப்புகிறார். போதாததற்கு, ஊரில் ஒரு தையல் கடையும், நவீன சலவைக் கடையும் திறக்கப்பட்டு ஆரோக்கியத்தின் பிழைப்பைக் கடினமாக்குகின்றன.

இந்தச் சிக்கல்களுக்கு இடையே இயங்கும் ஆரோக்கியத்தின் பிரச்சனைகளுக்கு விடை தேடியபடி விரிகிறது கதை.

ஒரு சிறு கிராமத்தில் அன்றாடத் தேவை களைப் பூர்த்திசெய்யும் வேலைக்காரர் களைக் கீழ்மட்டத்தில் இருத்தி, அவர்களுக் கான படியை ஊரே பகிர்ந்து அளித்து வாழ்வித்த காலம் போய், ஊர் என்ற அமைப்பு உடைந்து, அவரவர் இருப்பை மட்டுமே முன்னிறுத்தி வாழ்வைக் குறுக்கிக் கொண்டபின், காசு பணம் நுழைந்து வணிக எண்ணத்தை வேரூன்றியபின், கீழ்க்குடிகள் வாழ்மையத்தின் ரத்த நாளங்களை வெட்டி எறியும் காலம், பூதாகார நிழலாய் வண்ணான் களையும் அவர்களைப் போன்றோரையும் ஆக்கிரமித்து இருளில் அமிழ்த்துவதை இந்தப் புதினம் ஆவணப்படுத்துகிறது. 'அக்னி' அறக்கட்டளையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இதற்குப் பரிசுகள் அளித்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

கதைக்களம் எந்த ஊர் என்பதைத் சொல்லாமல் விட்டதைக் குறை என்பதா, இல்லை எல்லா ஊர்களிலும் இது நடக் கிறது என்று கொள்வதா என்று புரிய வில்லை. பலமுறை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சில வசனங்கள், புலம்பல்கள் எழுதப்பட்டிருப்பது வாசகனின் எதிர்வினையைச் சற்றே நீர்த்துப்போகச் செய்கிறது. தொடர் வசனங்களில் யார் பேசுகிறார்கள் என்ற குறிப்பில்லாததால் சில இடங்களில் குழப்பமே மிஞ்சுகிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்து பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இமையத்தின் முதல் படைப்பு இது என்பதால், இந்தக் குறைகளையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தால் "வாவுக்கும் அஞ்சவில்லை, சாவுக்கும் அஞ்சவில்லை, சமாதிக்கும் அஞ்சவில்லை - பாயிம் சனங்களுக்கு அஞ்சுனேனே" என்ற ஆரோக்கியத்தின் ஏக்கமான ஒப்பாரி நம் காதுகளில் ரீங்காரமிடுவதே இந்த நூலின் வெற்றி.

'கோவேறு கழுதைகள்' இமையம் க்ரியா பதிப்பகம்

மனுபாரதி

© TamilOnline.com