க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம்
நவம்பர் 10, 2007 அன்று க்ளீவ்லாந்தின் (ஒஹேயோ) சரயு ரமணன் நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். அவர் நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்குத் தன்னார்வத் தொண்டராகச் சென்றபோது அங்கே பார்த்த, பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட அநாதைக் குழந்தைகளின் துன்பங்களைக் கண்டார். திரும்பி வந்தவுடன் அவர்களது மறுவாழ்வுக்காக எப்படியாவது நிதி திரட்டி அனுப்ப வேண்டும் என்ற முடிவே இந்த நடன விழாவின் அஸ்திவாரம்.

குரு பத்மா ராஜகோபாலனின் மாணவி களான நித்யா வெங்கடராமன், ரேகா அய்யர் ஆகியோர் புஷ்பாஞ்சலி, கணேச வந்தனம், ஜதிஸ்வரம் ஆடினர். பின்னர் சரயு, 'கோலமயில் வாகனனே' என்ற (ஷண்முகப்ரியா) வர்ணத்தை, தனியாக ஐம்பது நிமிடங்கள் ஆடி, திரளாக வந்திருந்த ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். சரயுவின் தாளக்கட்டும், ஜதிகளின் லாவகமும், இதயத்தைத் தொட்ட அபிநயமும் பாராட்டுதலைப் பெற்றன. நித்யாவும் ரேகாவும் அவரவர் பதங்களைத் திறமை யுடன் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர். ஸ்ரோதேஸ்வரி ராகத் தில்லானா மிகப் புதுமையாகவும், பரத நாட்டியம், கதக் அடவுகளுடன், அற்புதமான தாளக்கோர்வைகளுடனும் அமைந்திருந்தது.

நடனமணிகளுக்கும், குரு பத்மா ராஜ கோபாலுக்கும் புகழைப் பொழிந்தது. 'வைஷ்ணவ ஜனதோ' மங்களம் இந்தக் கொடை நடனவிழாவுக்குப் பொருத்தமாக இருந்தது. இறுதியில் எல்லோரும் எழுந்து நின்று கரவொலி செய்து பாராட்டினர்.

லலித் சுப்ரமண்யம் தில்லானாவை அற்புதமாகப் பாடினார். ஜயந்தி ரமணனும் மீரா சுபியும் புஷ்பாஞ்சலியிலிருந்து வர்ணம், பதங்கள் முதலியவற்றை இனிமையாகப் பாடி நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். நாராயணனின் மிருதங்கம், ராமனின் புல்லாங்குழல் ஆகியவை பாராட்டுதல்களைப் பெற்றன.

சரயு ரமணன் FiCAவின் உதவியுடன் நேபாளத்தின் அநாதைக் குழந்தைகளுக்கு கணிசமான தொகையைத் திரட்டி அளித்தது க்ளீவ்லாந்துக்குப் பெருமையைப் பெற்றுத் தந்தது. 'குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் பரிவும், வசதியில்லாதவர்களுக்கு நீங்கள் செய்யும் அன்னதானமும், சிறுவயது முதல் நான் பார்த்து வந்ததால், என் மனோதைரியம் வளர்ந்து இந்த உன்னதச் செயலுக்குக் காரணமாயின' என்று சரயு தன் உரையில் நன்றியுடன் குறிப்பிட்டார்.

சரஸீ ராஜ் தியாகராஜன்

© TamilOnline.com