ஆதங்கம்
முதன்முறை லுப்தான்ஸாவில் வந்து டெட்ராயிட்டில் இறங்கிய மங்களத் துக்கு எல்லாம் வியப்புதான். ராட்சத விமானத்தின் இயங்குமுறை, பணிப் பெண்களின் பணிவிடை, செக்யூரிட்டி செக், வந்தேறுதல் எல்லாம் புதுமையான அனுபவங்கள். எல்லாம் முடிந்து தன் பிள்ளையைப் பார்க்கையில் எங்கிருந்துதான் கங்கை கண்களில் வந்தாளோ தெரியவில்லை. சந்தோஷமாக ரதம் போன்ற அவன் காரில் ஏற்றிய சூட்கேசுகளுடன் வீடு வந்து சேர்ந்தாயிற்று. ஜெட்லாக் தூக்கம் முடிந்து எழுந்தால் பிள்ளை ஆனந்த் ஆபீஸ் போய்விட்டான். கணவன் ராகவன் குளித்து முடித்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தார். பரபரவென்று சமையலறையில் போய்ப் பார்த்தாள். ஆனந்தே சமைத்து எடுத்துக் கொண்டு இவர்களுக்கும் பண்ணி வைத்து விட்டுப் போயிருந்தான்.

மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. மறுநாளிலிருந்து தான் சமைத்துப் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டாள். மாலையில் ஏழு மணிக்கு வந்த ஆனந்த் மிகுந்த பசியுடன் சாப்பிட்டான். இந்தியா வின் விஷயங்களையெல்லாம் ஒரு சிறிய முகவுரையாகக் கேட்டான். பத்து மணிக்குள் அவன் படுத்தால்தான் காலை ஆபீஸ¤க்கு ஏழு மணிக்குள் கிளம்ப முடியும். 'இங்கெல்லாம் அப்படித்தான்மா. எதுவானாலும் வீக் எண்டில் பேசிக்கொள்ளலாம்' என்றான்.

திங்களிலிருந்து வெள்ளி வரை மாடாய் உழைக்கிறார்கள். சனி, ஞாயிறு தான் ஓய்வாம். எல்லார் வாழ்க்கை முறையும் அப்படித்தானாம் இங்கு. அதனால் கலிபோர்னியாவில் உள்ள அக்கா பிள்ளை, நியூஜெர்சியில் உள்ள மைத்துனர், பில்டெல்பியாவில் உள்ள உறவினர் எல்லோருடனும் சனி, ஞாயிறு நேரம் பார்த்துதான் பேச முடிந்தது. அவர்களும் இந்தியாவில் பேசுவதுபோல் இல்லாமல் அதிக ஒட்டுதலின்றி, பொதுவாகவே பேசுகிறார்கள். ஒருவேளை இங்குள்ள வாழ்க்கைமுறையின் மாற்றமோ. புரிய வில்லை.

மங்களத்துக்கு வெளிநாட்டு விஜயம் புதுவித அனுபவமாக இருந்தது. நீர்க்குழாயில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் ஒரு பீப் ஒலி, சென்சார் செயல்பாடு கண்டு அதிசயித்தாள். நாள்பூராவும் பொழுது போகாமல் வேலையும் குறைவாகவே இருந்ததால் தினமும் இருவேளை வாக்கிங், சமையல், பூஜை மற்றும் மகனுடன் இத்தனை வருடப் பிரிவின் பாசத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டாள். எதிர்ப்பக்கத்தில் இருந்த லிடியா, லாரன்சிடம் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் 'ஹாவ் எ நைஸ் டே', 'ஹவ் யூ டு', தும்மினால் 'ப்ளெஸ் யூ' சொல்லக் கற்றுக் கொண்டாள். ஆனந்தும் விடுமுறை நாட்களில் திட்டமிட்டு எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினான். நயாகரா பேரருவி ஆனந்தம்.

ஆயிற்று. வந்து ஆறு மாதம் ஓடிவிட்டது. பிள்ளைக்குப் பிடித்ததெல்லாம் பண்ணி வைத்து திருப்தியானாள். இந்தியா திரும்பும் நாளும் வந்தது. ராகவன், மங்களம், ஆனந்த் மூவருமே அழுதனர். குழந்தை தனியாக இருக்கிறானே. அவனுக்கு ஒரு கல்யாணம் சீக்கிரம் பண்ணிவிட வேண்டும் என்று சிந்தித்தவாறே இந்தியாவில் வந்து இறங்கினர்.

தனது எண்ணத்தை மகனிடம் கூறிய போது தன்னுடன் படித்த பெண் ஜனனி மேல் ஒரு அபிப்ராயம் இருப்பதாகக் கூறினான். மங்களத்துக்கும் அந்தப் பெண்ணை நன்றாகத் தெரியும். அவர்கள் குடும்பமும், இவர்கள் குடும்பமும் நண்பர்கள் தாம். உடனே கல்யாண வேலைகளில் இறங்கினார்கள். கர்நாடக சங்கீதம், மடிசாரையும், வத்தல் குழம்பையும், பாப் மியூசிக், டைட் ஜீன்ஸ், பிஸ்ஸாவையும் எங்கெங்க யூஸ் பண்ண வேண்டும் என்று தெரிந்தவள். இரு நாட்டுக்கலாசாரத்தையும் நன்கு அறிந்தவள். அதனால் ஆனந்துக்கு எல்லாமே விருப்பப்படி அமைந்துவிட்டது. கல்யாணம் ஜாம்ஜாம் என்று சென்னையில் கொண்டாட்டமாக நடந்து, மணமக்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டார்கள்.

சென்னையில் வீடு வெறிச்சென்றாகி விட்டது மங்களத்துக்கு. பண்டிகை ஒன்று விடாமல் சம்பந்தி சீர் வந்து கொண்டி ருந்தது. சம்பந்தியோ தங்கம் என்றால் பத்தரை மாற்றுத் தங்கம். வாரத்துக்கு ஒரு நாள் குழந்தைகள் அங்கிருந்து போன் செய்து பேசுவார்கள். எல்லா விஷயங்களையும் ஒன்றுவிடாமல். ஆபிஸில் லீவ் கிடைக்காததால் அவர்களால் சென்னைக்குப் போக இயலவில்லை. எனவே மங்களத்தையும், ராகவனையுமே அமெரிக்காவுக்கு வரச்சொன்னார்கள். லுப்தான்ஸாவில் டிக்கட்டும் புக் செய்து அனுப்பிவிட்டனர். தனிமை போர் அடித்தாலும் ஒரே மகன் என்பதாலும் மகனையும், மருமகளையும் பார்க்க ஆவலும் பாசமும் போட்டியிட மறுபடியும் பயணத்துக்கு இருவரும் தயாரானார்கள்.

பார்த்துப் பார்த்து பிள்ளைக்கும், மாட்டுப் பெண்ணுக்கும் பிடித்த விஷயங்களை வாங்கிச் சேகரித்தாள். பயண நாளும் வந்தது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மங்களம் லேசாக நரையோடியிருந்தாள். ராகவன் உடலும் சற்றுத் தளர்ந்திருந்தது. ஆனாலும் மனசு குழந்தைகளைப் பார்க்கும் சந்தோஷத்தில் இளமையாகத்தான் இருந்தது. முதல் பயண அனுபவத்தை அசை போட்டவாறே ராகவனும், மங்களமும் இரண்டாவது தடவையாக வந்து இறங்கி னார்கள். டெட்ராய்ட் ஏர்போர்ட்டில் மகனும், மருமகளும் வந்து கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மங்களத்துக்குப் பெண் இல்லாததால் மருமகளே மகளானாள். முன்பு இருந்ததைவிட ஆனந்த் தெளிவாக, குழந்தைத்தனம் சற்றுக் குறைந்து பெரிய மனிதன் போல் பொறுப்பாக நடந்து கொள்வதாகப்பட்டது மங்களத்துக்கு. பிரயாணக் களைப்பு முடிந்து இயல்பு நிலைக்கு வந்தாயிற்று. மறுநாளிலிருந்து தானே சமைப்பதாக ஜனனியிடம் கூறி, அவர்களுக்குப் பிடித்த ஸ்வீட், காரம், டிபன், சாப்பாடு என்ன என்று கேட்டுக் கேட்டு அவர்களுக்கு ஆபீசுக்கும் வீட்டுக்கு வந்தவுடனே சாப்பிடவும் தயார் செய்து வைத்து விடுவாள். ராகவனுக்கு அவளது சந்தோஷமான தாய்மை புரிந்தது.

மகனை எதிர்பார்க்காமல் மருமகள் அவளே கார் எடுத்துக் கொண்டு இவர்களை கடைகண்ணி டாக்டர் என்று அழைத்துச் செல்வது, 'அம்மா, அப்பா' என்று பாசமுடன் அழைத்து வேண்டியவற்றை கேட்டுக் கேட்டு வாங்கிக் கொடுப்பது, இங்குள்ள பழக்க வழக்கங்களை ஒரு தோழிபோல் மங்களத்துக்கு சொல்லிக் கொடுப்பது - மனம் நெகிழ்ந்தாள் மங்களம்.

இந்தப் பந்தம் தெய்வ சங்கல்பமானது. இதமாக ஒரு மகளின் அந்நியோன்யத்தை உணர்ந்தாள் அந்தத் தாய். இதற்குத்தான் வாழ்க்கை என்பதுபோல் நித்தம் பூஜை, பாட்டு, சமையல், பொதுவிஷயங்கள், வாக்கிங், ஷாப்பிங் என்று சந்தோஷமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது.

##Caption##அப்போதுதான் ஞாபகம் வந்து எதிர்வரிசை வீட்டு லிடியா பற்றிக் கேட்டாள். லாரன்சுடன் அட்ஜஸ்ட் பண்ண முடியாததால் வேறொரு வருடனும், குழந்தைகளுடனும் தற்போது வசிப்பதாக ஜனனி கூறியவுடன் அதிர்ச்சி அடைந்தாள் மங்களம். அதுவுமட்டுமின்றி இவர்கள் வீட்டுக் கீழ் அபார்ட்மெண்டில் வசிக்கும் ஜனனி மேரி பற்றித் தெரிந்து கொண்டாள். தாய் ஜான்சிக்கு அறுபது வயதும், மகள் மேரிக்கு முப்பது வயதும் இருக்கும். இருவரும் தன்னந்ததனியாக எங்கோ காரில் போவார்கள். வருவார்கள். ஜான்சிக்கு டீச்சர் வேலையாம். மேரி ஹோட்டலில் ரிசப்ஷ்னிஸ்ட். அவர்கள் வீட்டின் கதவு மூடியே இருக்கும். எப்போதாவது கார் பார்க்கிங்கில் நேரில் பார்த்தால், 'ஹலோ ஹவ் ஆர் யூ' என்று கேட்பதோடு சரி. 'நம்முடன் மட்டும்தான் இப்படியா?' எள்று நினைத்த மங்களத்திடம் 'அம்மா, மகளுக்குள்ளேயே அவ்வளவுதான் பேச்சு' என்றாள் மருமகள்.

மங்களத்திடம் 'அம்மா மகளுக்குள்ளேயே அவ்வளவுதான் பேச்சு' என்றாள் மருமகள். வருந்தினாள் மங்களம்.

பக்கத்து பிளாட்டில் வயதான முதியவர் தனியாக வசிக்கிறார். தானே எல்லாம் செய்து கொள்ளுவார் என்றாள். மாலையில் சக்கர நாற்காலியில் ஷாப்பிங் பண்ணி முதியவர் ஞாபகம் வந்தது. எதிர்த்த அபார்ட்மெண்ட்டின் ஒரு இளைஞர் சிறிய குழந்தையுடன் தினசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். நான்கு ப்ளாட் தள்ளி ஒரு பெண் தன் பிறந்த குழந்தையுடன் தனியாக வசித்துக் கொண்டிருக்கிறார். சிறிய வயதிலேயே குழந்தைகள் பெற்றோரைப் பிரிவது, பெற்றோர் வயதான காலத்தில் அவர்களே தங்கள் கடைசி காலம்வரை தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வது. 'என் இப்படி?' என்று நினைக்க ஆரம்பித்தாள். 'இங்கெல்லாம் பெரும்பாலும் உறவுகள் இப்படித்தான்மா' என்றாள் மருமகள். மனது மிகவும் பாரமானது மங்களத்துக்கு.

பார்க்கும் இடமெல்லாம் சுத்தம், சுகாதாரம், கட்டுப்பாடு, போலீஸ் பாதுகாப்பு, கம்ப்யூட் டரில் வித்தை எல்லாம் பிடித்த விஷயங்கள். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எல்லாம் கற்றுத் தந்தாள். அதைவிட வாக்கிங் செல்லும் போது, தெரியாதவர்களாய் இருந்தாலும் அவளைப் பார்த்து 'ஹாய்' என்று சிரித்துத் தலைய சைத்தது நட்பைத் தந்தது. வனப்பான காய்கறி, பழங்கள், பால், தயிர் எதிலும் ரேஷியோ போட்டு சக்தி தரும் உணவுப் பொருட்கள். பசுமையான வண்ணப் பூந்தோட்டங்களும் புல்தரையும் அருவியும் ஏரியும் அழகு கொஞ்சும் இடமாக எப்போதும் தடைபடாத மின்சாரத்தில் ஜகஜோதியாக பிரகாசிக்கும் இந்த நாடு மலைப்பானது மங்களத்துக்கு. நம் நாட்டிலும் இப்படியெல்லாம் ஆகவேண்டும் என்று நினைப்பாள்.

ஆயிற்று. இந்தியா திரும்பும் நாளும் வந்தது. தன் பிள்ளை இங்கே வந்து படித்து, சம்பாதித்து வீடு வாங்கியது, கல்யாணம் நடந்தது. ஒன்றுக்கு இரண்டு கார் வாங்கியது, வங்கிச் சேமிப்பு ஏறியது, உறவின் மேன்மை அறிந்து தங்களை நன்றாக கவனித்துக் கொள்வது என்று எல்லா சௌகரியங்களுடன் சந்தோஷமாயிருந்தாலும் மனதில் இனம் புரியாத வருத்தம் இழையோடியது.

இனம், மொழி, நாடு பாராது வந்தாரை வாழ வைக்கும் இங்கு, எல்லா வளங்களும் இருப்பது போல் முக்கியமாக மனித உறவுகள் நம்மைப் போல் அம்மா, அப்பா, மகன், மருமகள், மகள், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகள், சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, பாட்டி, தாத்தா என்று சங்கிலித் தொடர் போல வாழையடி வாழையாக, பாரம்பரியமாக பலமாக அமைந்தால் நம்மை வாழவைக்கும் இவர்களும் நீண்ட காலம் நிலைத்த சந்தோஷம் பெற முடியுமே என்ற ஆதங்கம் எழுந்தது மனதில்.

யந்திரத்தில் சென்ட் நாணயம் போட்டு பட்டனைத் தட்டினால் மிட்டாய் வருகிறது. படிக்கப் பேப்பர் வருகிறது. துடைக்க டிஷ்யூ வருகிறது. பயணம் செய்ய ரயில் டிக்கெட் வருகிறது. மிஷின் குப்பை அள்ளுகிறது. கதவு தானாகவே திறக்கிறது. மூடுகிறது. மேலே உயருகிறது. பில் போடுகிறது. துணி துவைக்கிறது. பாத்திரம் கழுவுகிறது. கார் கழுவுகிறது. பெட்ரோல் போடுகிறது.

ஏன், குழந்தைகள் விளையாடும் பொம்மை, படிக்கும் ஸ்லேட்டில் அழிப்பான் என்று மேற்கூறிய எல்லா யந்திரத்தனத்திலும் ஒரு வியப்புக் கலந்த ஆனந்தம் இருந்தாலும் பிறப்பு என்பது மட்டும் எங்கும் இயற்கை தானே. உறவுகளில் யந்திரத்தனமின்றி நம்மைப்போல் இயல்பான சந்தோஷத்துடன் சந்ததிகளின் முழுப்பயனை மக்கள் வரும் காலங்களிலாவது அடைய வேண்டும் என்ற நன்றி கலந்த உணர்வோடு பராசக்தியைப் பிரார்த்தனை செய்தவாறே குழந்தைகளிடம் விடைபெற்று லுப்தான்சாவில் கண்களில் கண்ணீரோடு ஏறி அமர்ந்தாள் மங்களம்.

மங்களகெளரி,
டெட்ராயிட்

© TamilOnline.com