ஜாதிகள் இல்லையடி...
கண்ணாடி ஜன்னல் ஊடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மங்களம். அவள் தங்கி இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி ஹட்சன் ஆறு சலனமற்று ஓடிக் கொண்டு இருந்தது. ஆற்று நீரைக் கிழித்துக் கெண்டு கப்பல்கள் ஓய்வு ஒழிச்சல் இன்றி ஓடிக் கொண்டு இருந்தன.

வேகமாக நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களில் தான் எத்தனை ரகம்! உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பல அடுக்குகளை கொண்ட பெரிய கப்பல்கள்! சாமான்களைச் சுமந்து செல்லும் நீண்ட கப்பல்கள்! பாய்மரக் கப்பல்கள் போன்ற சிறு தோணிகள்!

ஆற்றுக்கு அப்பால்... மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திரலோகமோ என வியக்க வைக்கும் வானைத் தொடும் கட்டடங்கள்! மனிதனால்தான் கட்டப் பட்டனவா என்று எண்ணத் தோன்றும் கண்ணாடி மாளிகைகள்! எல்லாம் பெரும், பெரும் அலுவலகங்கள்!
இரவு, பகலாக மனித மூளைகள் வேலை பார்க்கும் பிரபல்யமான வங்கிகள், காரியாலயங்கள்!

என்னதான் தன்னைச் சுற்றி இருந்தாலும் மங்களத்தினால் அவை ஒன்றையும் ரசிக்க முடியவில்லை.

அம்மா.. அம்மா என்று மகன் ஸ்கந்தன் வளைய வந்த போதும் மங்களத்தால் அந்த வீட்டில் ஒட்ட முடியவில்லை.

ஆசை ஆசையாக வளர்த்த மகன் மேல்படிப்புக்கு அமெரிக்கா வந்த போது குதூகலித்தவள் மங்களம். வேலை கிடைத்ததும் லட்சங்களாக சம்பாதித்த போது தன் மகனைப் போல ஒரு பிள்ளை இந்த ஊரில் இல்லை என்ற பெருமையில் மிதந்தவள். அவன் பண்ணிய காரியத்தைக் கேள்வியுற்றதும் அவன் மீது பாசமழை பொழிந்த மங்களத்துக்கு தாங்கமுடியவில்லை.

எப்படித்தான் ஒரு அந்நியப் பெண்ணை அவனால் துணையாகத் தேடிக் கொள்ள முடிந்தது. அம்மா, அப்பா என்று வளைய வந்தவனுக்கு எப்படி உங்கள் உணர்வு களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அடிக்கடி மங்களத்தின் மனம் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தது.

''மங்களம்! இப்படியே பிரமை பிடித்தவள் போல நீ யோசித்துக் கொண்டு இருந்தால் என்ன நடக்கப்போகிறது? வாழப் போறது ஸ்கந்தன்... அவனுக்க ஜூலியைப் பிடித்து இருக்கிறது? நாம் என்ன செய்ய முடியும்?'' தயங்கி தயங்கி நாகராஜன் சொன்னார்.

''ஜூலி... ஜூலி... இந்தப் பெயரை எனக்கு சொல்ல வேண்டாம். எல்லாம் நீங்கள் கொடுத்த இடம்தான். கடும் செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டோ ம். அமெரிக்கா வந்த இவன் சிநேகிதன் விஜய் காதல் திருமணமா செய்தான்? தாய் தகப்பன் காட்டிய பெண்ணைத் திருமணம் செய்யவில்லையா?''

தன் மனதில் இருந்த கோபத்தை கணவனிடம் காட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மங்களம்.

அம்மா, அப்பாவை அமெரிக்கா வரும்படி வருத்தி அழைத்த ஸ்கந்தனுக்கு இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியும். அப்படி இருந்தும் ஒருவேளை சில மாதங்கள் தங்கினால் அம்மா மனம் மாறிவிடக்கூடும் என்ற நம்பாசையில்தான் அவர்களைக் கூப்பிட்டான்.
''ஸ்கந்தா அம்மா அப்பாவைக் கூப்பிடுவதால் அவர்கள் ஜூலியை மருமகளாக ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள்? உன் அம்மாவுக்கு இங்கு ஜூலியைப் பார்க்க பார்க்க கோபம்தான் அதிகரிக்கும்...'' நண்பன் விஜய் சொன்னது சரியாகத்தான் இருந்தது.
பெற்றோரை அழைக்க விமானநிலையத் துக்கு ஸ்கந்தன் போன போது ஜூலியும் கூடவே போயிருந்தாள்.

தன் கையில் இருந்த மலர்க்கொத்தை மாமியார் கையில் கொடுத்துவிட்டு அவளை அணைத்து முத்தம் கொடுத்த ஜூலியை மங்களத்தால் அணைக்கவே முடியவில்லை.
குட்டை கால்சட்டை, கையில்லாத டீ ஷேட், பாப் முடி, உதட்டுச் சாயம் இவற்றுடன் மகனருகே நின்ற ஜூலியைப் பார்க்க மங்களத்துக்கு நெஞ்சம் திக்கென்றது.
ஜூலி வெள்ளைக்கார பெண். எங்கள் கலாச்சராத்துடன் ஒத்துப் போகாத பெண் என்று எல்லாம் தெரிந்திருந்தும் ஏனோ நேரே பார்த்த போது அவளுக்கு ஜூலியை அணைக்கத் தோன்றவில்லை.

பட்டுப்புடவை, தலைநிறைய மல்லிகைப்பூ, அளவான தங்க நகை, குங்குமப் பொட்டு இவற்றுடன் ஸ்கந்தன் பக்கத்தில் ஒரு பெண்ணை எதிர்பார்த்துக் காத்திருந்த மங்களத்துக்கு ஜூலியை எப்படி அணைக்க முடியும்?

எப்படித்தான் ஸ்கந்தன் இவளை ஏற்றுக் கொண்டானோ? என்னத்தைக் கண்டு மையல் கொண்டானோ? விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குப் போகும் வரை மங்களத்தின் மனதில் பல கேள்விகள் குடைந்து கொண்டே இருந்தன.

''அம்மா இது இந்தியத் தெரு. இங்கு இந்திய சமையல் சாமான்கள் வாங்கலாம்''

''இவை குடியிருப்புகள்... இங்குதான் பத்மா மாமியின் மகன் இருக்கிறான்...''

''இவை எல்லாம் உல்லாசப் பிரயாணிகள் தங்கும் ஹோட்டல்கள்...''

வாய் ஓயாமல் ஸ்கந்தன் பெற்றோருக்கு நியூஜெர்சி நகரைப் பற்றி கூறிக் கொண்டே வந்தான். இடையிடையே நாகராஜன் ஏதோ சில கேள்விகளை கேட்டார்.
மங்களத்துக்கு வாயைத் திறக்கவே பிடிக்கவில்லை. முன் சீட்டில் ஸ்கந்தன் பக்கத்தில் மெழுகு பொம்மை போல விற்றிருந்த ஜூலியின் தோற்றம் அவள் வாயை அடைத்துவிட்டது.
எத்தனை பேர் ஊரில் ஸ்கந்தனை மருமகனாக ஏற்கக் காத்திருக்க இப்படி ஒரு காரியத்தை செய்தானே என அவள் மனம் ரீவைண்டு பண்ணிய கேசட்டாக ஸ்கந்தனைப் பற்றியே ஓடிக் கொண்டு இருந்தது.

மங்களம் முகத்தை 'உர்' என வைத்திருப்பது நாகராஜனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. மனைவியின் குணம் அறிந்து அவர் பேசாது இருந்துவிட்டார்.

அம்மாவுக்கு அமெரிக்கா வருவதில் இஷ்டமிருக்கவில்லை. மூத்த மகன் குடும்பத் துடன் கொழும்பில் வசதியாக இருந்தவள். பல தடவை ஸ்கந்தன் கனிவோடு அழைத்தும் அவள் மசியவில்லை. ''அம்மா ஸ்கந்தன் என்ன ஊர் உலகத்தில் யாரும் செய்யாத தையா செய்துவிட்டான்? எத்தனை தரம் கூப்பிட்டிருக்கான்... போய்க் கொஞ்ச காலத்துக்கு இருந்துவிட்டு வாங்கோளேன் என்று மூத்த மகன் சொன்னதும்,
''அதுதானே மாமி சும்மா ஒரு மாற்றத்துக்கு போயிட்டு வாங்கோ. பயணம் செய்ய முடியாமல் வந்துவிட்டால் பின்பு ஆசைப் பட்டாலும் போக முடியாது...'' மருமகள் வக்காலத்து வாங்கினாள்.

மாமன், மாமியை கொஞ்ச காலம் அமெரிக்காவிற்கு அனுப்புவதில் மூத்த மகனும், மருமகளும் குறியாக இருப்பதை உணர்ந்த நாகராஜன் வலுக்கட்டாயமாக மங்களத்துக்கு விசா எடுத்து டிக்கட் போட்டு கிளம்பிவிட்டார். அமெரிக்கா வந்த நாட்கள் வாரங்களாக நகர்ந்தன. அம்மா, அப்பா ஸ்கந்தனுடன் தங்கி ஒரு மாதம் கடந்து விட்டது.
போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் ஒரு மாதம் தங்குவார்களோ என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. மங்களம் ஜூலியுடன் முகம் கொடுக்கவில்லை. ஸ்கந்தனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. பெற்று வளர்த்து பாசத்தையும் கொட்டி வளர்த்த அம்மா ஒருபுறம், அமெரிக்கா வந்ததில் இருந்து கூடப்படித்து, சிநேகப் பூர்வமாக பழகி, தன் நற்குணங்களால் ஸ்கந்தனின் மனதில் இடம் பிடித்து தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட ஜூலி மறுபுறம்.

அம்மா, அப்பாவை அமெரிக்கா அழைத்த போதே பொறுமையைக் காக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த ஸ்கந்தனுக்கு அம்மாவின் சுடுசொற்கள் புண்படுத்தவில்லை.
மாறாக அப்பாவின் இதமான பேச்சு அம்மா ஏற்படுத்திய ரணத்திற்கு களிம்பு பூசி குளிர்வித்தன. முகத்தில் சிரிப்பையே மறந்த மங்களம் அந்த வீட்டில் ஏனோதானோ என வாழ்ந்து கொண்டு இருந்தாள்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. நான்கு சுவருக்குள் இருக்க பிடிக்காத நாகராஜன் அன்று வெளியே காலாற நடக்கச் சென்று விட்டார்.

ஏனோ ஜூலி வேலைக்கு செல்லவில்லை. தனது அறையிலிருந்த கம்ப்யூட்டர் முன் இருந்து வேலை செய்து கொண்டு இருந்தாள்.

ஊரில் தலைக்கு குளித்து கோவிலுக்கு சென்று விரதம் அனுஷ்டிக்கும் மங்களம் இங்கும் தலைக்கு குளிப்பதற்கு குளியலறைக் குச் சென்றாள்.

ஏதோ யோசனையில் சென்றவள் நிலத்தில் சிந்தியிருந்த தண்ணீரைக் கவனியாது காலை வைத்துவிடவும், கால் சறுக்கி தடால் என விழுந்துவிட்டாள்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கையை, விழும் போது பலமாக ஊன்றியவளுக்கு எழும்பவே முடியவில்லை.

'என்ன நடந்தது... எப்படி விழுந்தேன்...'' என மங்களம் சிந்திப்பதற்குள் குளியலறைப் பக்கமிருந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஜூலி அங்கு வந்து விட்டாள். மங்களத்தைப் பார்த்து துடிதுடித்து தன் இருகைகளையும் மங்களத்தின் கக்கத் தில் வைத்து லாவகமாக நிறுத்தினாள். அவளை அணைத்தபடியே மெதுவாக மங்களத்தின் கட்டிலுக்கு அழைத்துச் சென்றாள்.

அடுத்தகணமே யந்திரமாகச் செயல்பட்ட ஜூலி ஸ்கந்தனுக்கு செய்தியனுப்பி, ஆம்புலன்சை அழைத்து ஆக வேண்டிய வற்றை தாமதியாது செய்தாள்.

வெளியே சென்றிருந்த நாகராஜன் உள்ளே வரவும் இருவருமாக ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். மாமியார் தன்னோடு முகம் கொடுத்து நடக்காததையோ, வெறுத்ததையோ கணக்கில் எடுக்காது ஜூலி நடந்து கொண்டவிதம் நாகராஜனுக்கு அவள் மீது பெருமதிப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் கையில் பலமான அடி என்று டாக்டர் சொல்லி இருவாரங்கள் ஒய்வு எடுக்குமாறு சொன்னார். ''நல்லகாலம் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லந. இப்ப எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் இந்த வயதில் எலும்பு பொருந்துவதே பிரச்சனையாக இருக்கும். இரு வாரங்கள் ஓய்வெடுத்தா அம்மா குணமாகிவிடுவா..'' என ஸ்கந்தன் சொன்னதும் ஜூலியும் முகமலர்ச்சியுடன் ''இருவாரங்கள் என்று சொன்னாலும் சில சமயம் அதற்கு முன்பே அம்மா குணமாகி விடுவா...'' என்று சொன்னாள்.

அடுத்த நாள் காலை வேலைக்கு கிளம்பிய ஸ்கந்தன், ''அப்பா ஜூலி அம்மாவுக்காக லீவு எடுத்திருக்கா.. ஏதாவது தேவை என்றால் கேளுங்கோ...'' என்று சொல்லியப்படியே வெளியே சென்றான்.

''என்ன எங்களுக்காக அவள் லீவு எடுத்துள்ளாளா?'' ஆச்சரியத்துடன் நாக ராஜன் கேட்டார்.

''அப்பா ஜூலி ஒரு வித்தியாசமான பெண். அவளுக்கு கணவன், குடும்பம், குழந்தை என்பவை முக்கியம். அவளோடு பல வருடங்கள் பழகிய பின்னர்தானே அவளை நான் மனைவியாக ஏற்றுக் கொண்டேன். இவற்றை எல்லாம் நான் உங்களுக்கு விளக்கப்படுத்த நீங்கள் எங்கே எனக்கு சந்தர்ப்பம் தந்தீர்கள்?''

ஸ்கந்தன் சொல்லச் சொல்ல நாகராஜன் ஆச்சரியத்துடன் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

கண்கள் குளமாகக் கட்டிலில் படுத்திருந்த மங்களத்திற்க மகனுடைய வார்த்தைகள் காதில் விழுந்தன. கொழும்பில் ஒருமுறை மூத்த மருமகள் நடந்து கொண்ட விதம் அவள் நினைவுக்கு வந்தது.

கடும் ஜூரம் அடிக்க படுக்கையில் படுத்திருந்த மங்களம் தன்னை அறியாமலே அனுங்கத் தொடங்கினாள். அந்த அனுக்கம் அவளது உடம்பு நோவுக்கு ஒத்தடம் படிப்பதாக இருந்தது. அந்த அறைக்கு வந்த மூத்த மருமகள் ''இதென்ன அனுக்கம்? வருத்தத்தைத் தாங்கப் பழக வேண்டும். வயதுக்கு ஏற்ற அறிவு இன்னும் வர வில்லை...'' என்று மங்களத்தின் காதில் விழும்படி சொல்லிக் கொண்டே சென்றாள்.

ஊரிலே பிறந்து, ஊரிலே வளர்ந்து, மங்களத்தின் வீட்டிலே வாழும் மூத்த மருமகளது செய்கை அவள் மனதை நோகடித்தது. இன்று ஜூலி நடந்து கொண்ட முறையை மூத்த மருமகளுடன் அவள் மனம் ஒப்பிட்டது.

'மாம்' அன்பொழுகக் கூப்பிட்ட ஜூலி கஞ்சியையும், கரண்டியையும் நாகராஜனிடம் கொடுத்துவிட்டு மங்களத்தில் நெஞ்சில் ஒரு துணியைப் போட்டாள்.
நாகராஜன் கஞ்சியை மனைவிக்கு கொடுத்தப் படியே ஜூலியை பற்றி நினைத்துக் கொண்டார்.

அந்நிய கலாசாரத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்றாலும் ஆபத்து நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறாளே என அவர் உள்ளம் மகிழ்ந்தது. வெளியே சென்ற ஜூலி ஒரு மணி போன்ற ஒன்றை மங்களம் படுத்திருந்த கட்டிலின் அருகே வைத்தாள். 'மாம்' நான் எப்ப தேவையோ அப்ப இதை அடியுங்கோ, என்று சொன்னபடி அந்த மணி எப்படி இயங்கும் என்பதைக் காட்டிக் கொடுத்தாள்.
நாகராஜன் மங்களத்தைப் பார்த்தார். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
மங்களமும் ஜூலியின் உள்ளத்தில் இருக்கும் மானுட உணர்வை புரிந்து கொண்டாள். ஜூலியை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மங்களத்தின் மனம் பெற்றுக் கொண்டது.

யோகேஸ்வரி கணேசலிங்கம்,
நியூஜெர்ஸி

© TamilOnline.com