சுப்புத் தாத்தா சொன்ன கதைகள் : 6
என்ன குழந்தைகளே! தீபாவளிப் பண்டிகையை நல்லா கொண்டாடினீங்களா? சரி, 'நுணலும் தன் வாயால் கெடும்'னு முன்னாடி சொல்லி இருந்தேனே, அது என்னன்னு யோசிச்சுப் பார்த்தீங்களா? 'நுணல்'னா தவளை. மழைக் காலத்துல தவளை 'கிர்ரக் கிர்ரக்'னு ஒலி எழுப்பிக்கிட்டே இருக்கும். அதைக் கேட்டு பாம்பு வந்து அப்படியே தவளையை முழுங்கிடும். இதைத்தான் அந்தப் பழமொழி சொல்லுது. சரியா! இதோ, இந்தக் கதையைக் கேளுங்க!

அது ஒரு பெரிய கோயில். அதன் கோபுரத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் வசித்து வந்தன. கோயிலுக்கு வருபவர்கள் அந்தப் புறாக்களுக்கு உணவளிப்பார்கள். புறாக்கள் அங்கே மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தன. அந்தக் கோயிலின் அருகில் ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதில் சோம்பேறிக் காகம் ஒன்று வசித்து வந்தது. அது பொறாமைக் குணம் கொண்டதாகவும் இருந்தது. புறாக்களைத் தேடி வந்து மக்கள் உணவளிப்பதைக் கண்டு காகத்துக்குப் பொறாமையாக இருந்தது. தானும் இப்படி மகிழ்ச்சியாக வாழ ஒரு திட்டம் தீட்டியது.

அந்த ஊரில் ஒரு சாயப் பட்டறை இருந்தது. அங்குள்ள தொட்டியில் வெள்ளைச் சாயம் வைக்கப்பட்டிருந்தது. காக்கை அதில் பலமுறை நனைந்து, வெயிலில் காய வைத்து, மீண்டும் நனைந்தது. இப்படித் தனது நிறத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டது. ஆனாலும் ஒரு சிக்கல். அதன் வளைந்த மூக்கும், கரகரத்த குரலும் அதற்குப் பெரிய பிரச்னைகளாக இருந்தன. ஆகவே மரத்தில் தீட்டித் தீட்டி மூக்கைப் புறாக்களுடையதைப் போலச் சின்னதாக மாற்றிக் கொண்டது. புறாக்களுடன் இணைந்து விடுவது, அதன் பின் யாருடனும் பேசாமல் தொடர்ந்து மௌன விரதம் இருப்பது என்று முடிவு செய்தது. அதன்படியே ஒருநாள் புறாக்கள் கூட்டமாக இருக்கும் போது சென்று காக்கை அவற்றுடன் சேர்ந்து கொண்டு விட்டது.

##Caption##தங்களைப் போன்றே வெண்மையாக, ஆனால் சற்று மாறுபட்ட உருவத்தில் இருக்கும் காக்கையைக் கண்ட புறாக்கள், வளர்ச்சிக் குறைவான தங்கள் இனப் பறவை என நினைத்து சேர்ந்து வாழ அனுமதித்தன. இப்படியே நாட்கள் கடந்தன. முன்பு போல் ஓடியாட வேண்டியது இல்லை. இரைக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டியது இல்லை. பிரசாதம், தானியங்கள் என்று வந்த உணவைத் தின்று தின்று காகம் மிகவும் குண்டாகி விட்டது. அதனால் முன்புபோல வேகமாகப் பறக்க முடியவில்லை. ஆனால் எந்தப் பொழுதிலும் தனது மௌன விரதத்தை விடாமல் உறுதியாகக் கடைப்பிடித்து வந்தது.

ஒருநாள் காகம் ஒன்று மின்சாரம் தாக்கிக் கீழே விழுந்து இறந்து விட்டது. உடன் அதன் இனத்தைச் சேர்ந்த மற்ற காக்கைகள் ஒன்று கூடி 'கா கா' எனக் கத்தியவாறே மேலே வட்டமாகப் பறக்கத் தொடங்கின. இதனைக் கவனித்த புறா வேடம் பூண்ட காக்கை தன்னையறியாமல் 'கா கா' எனக் கத்தியவாறே மற்ற காக்கைகளுடன் சேர்ந்து பறக்க ஆரம்பித்தது.

தங்களைப் போலவே கத்தும், ஆனால் முற்றிலும் மாறுபட்ட வெண்மை நிறத்துடன் சுற்றி வந்த காக்கையைக் கண்டன மற்ற காகங்கள்! இது ஏதோ புதிய எதிரிப் பறவை. தங்களை ஏமாற்ற இப்படிச் செய்கிறது என நினைத்து, கோபத்துடன் கொத்தி, விரட்டி விட்டன. வெள்ளைக் காகம் மீண்டும் புறாக்களிடம் அடைக்கலம் புகுந்தது. ஆனால், இதுநாள் வரை புறா வேடம் போட்டுத் தங்களை ஏமாற்றியது ஒரு காக்கைதான் என்பதை அறிந்து கொண்ட புறாக்கள், அதைச் சேர்த்துக் கொள்ள மறுத்து, சீற்றத்துடன் கொத்தி விரட்டின. என்ன செய்வதென்று தெரியாத இரண்டும் கெட்டான் காகம் அடர்ந்த காட்டை நோக்கி பறந்து சென்றது.

போய் வரட்டுமா குழந்தைகளே? அடுத்த மாதம் இன்னொரு கதையுடன் சந்திக்கலாம்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com