தாழ்மரமும் கொடியும்
'ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்' என்று தன் குருநாதனாகிய குள்ளச்சாமியை பாரதி பாடுவதாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதில் ஆசை ஒரு கொடியாகவும், குரு அதற்கென்று அமைந்த தாழ்மரமாகவும் உவமிக்கப்பட்டிருப்பதையும், இந்த உவமை ஏற்படுத்தும் பொருள் சிக்கலையும் பார்த்தோம். 'ஆசை ஒரு கொடியாகுமானால், குரு அந்த ஆசைக்குக் கிடைத்த தாழ்மரம்' என்று பொருள் கொண்டால், ஆசையை அடக்கவும் அழிக்கவும் உதவவேண்டியவரான குரு, அது பற்றிப் படருவதற்கான--வளரவும் பல்கிப் பெருகவும் உதவுவதான--கொழுகொம்பாக நிற்கிறார் என்ற விபரீதமான பொருள் தோன்றுவதையும்; அவ்வாறு தோன்றும் கராணத்தாலேயே, 'கொடி, தாழ்மரம்' ஆகிய சொற்களுக்கு நாம் இப்போது உணரும் பொருளன்றி வேறு ஏதோ ஒரு பொருள் இருக்கவேண்டும் என்பதையும் பேசியிருந் தோம்.

வழக்கமாக, கொடி என்றால் நமக்கு மூன்று பொருள் புலப்படும். செடி, கொடி, மரம் என்று தாவரவகையைச் சேர்ந்த கொடி என்பது ஒன்று. 'தாயின் மணிக்கொடி பாரீர்' என்று பாடுவோமே, அப்படிப் 'பட்டொளி வீசிப் பறக்கும்' கொடி ஒன்று; துணிகளைக் காயப்போடுவதற்காக நாம் கட்டும் கொடி இன்னொன்று. இந்த மூன்று பொருள்களும் நம் பயன்பாட்டில் இன்னமும் வழக்கில் எஞ்சி இருப்பன. நாம் எத்தனைச் சொற்களை, அவற்றின் அடுக்கடுக்கான வேறுவேறு பொருளை எல்லாம் நம்மொழியிலிருந்து இழந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இந்தச் சொல்.

கொடி என்ற சொல்லுக்கு மொத்தம் 19 பொருள் சொல்கிறது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி. 'ஒன்றாய்த் தொடங்கி, பலவாய்க் கிளைத்துப் பிரிந்து ஓடுவது அல்லது படர்வது' என்ற பொருள்தரக்கூடிய வகையிலும் 'கொடி' என்ற சொல் அண்மைக் காலம் வரையில் புழங்கி வந்திருக்கிறது. 'சிறிய கிளை வாய்க்கால்' என்பது அகராதி தரும் பொருள்களில் ஒன்று; 'ஏரி நிரம்பியதும் அதிலிருந்து நிறைந்து வழியும் உபரி நீர் ஓடுவதற்காகக் கிளைகிளையாகப் பிரிந் திருக்கும் வாய்க்கால்' என்பது இன்னொரு பொருள்.

இந்தக் கொடி, பாரதி சொல்லும் கொடிக்குப் பொருந்துகிறது. பாருங்கள். ஆசை என்பது உள்ளத்தில் கணநேரத்துக்கும் குறைவான பொழுதில் நிறைந்து, வழிந்து, பல கிளை களாகப் பிரிந்து பல திக்குகளை நோக்கி ஓடக்கூடிய கொடி. ஒருபோதும் வற்றாத ஊற்று; ஓராயிரம் கிளைகளாகப் பிரியும் கொடி.

##Caption##கிழட்டுத் தன்மையை அடையும்படியாகச் சபிக்கப்பட்ட யயாதி, தன்னுடைய மகன் பூருவிடமிருந்து அவனுடைய இளமையைப் பெற்றுக் கொண்டு பல்கிப் பெருகும் தன் ஆசைகைள அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள முயன்றான். ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன; ஆசை மட்டும் வடிந்தபாடில்லை. ஆசை என்பது அனுபவித்தால் தீர்ந்து போகும் ஒன்றில்லை என்பதை உணர்ந்த யயாதி, மகனை அழைத்து, 'அனுபவிக்க அனுபவிக்க ஆசை பெருகுமேயல்லாது அடங்காது என்பதை உணர்ந்தேன். நெய்விட்டு நெருப்பை அணைக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் பளிச்சென்று வெட்டி எறிந்தால்தான் இதனைக் கடக்க முடியும்' என்று அவனுடைய இளமையைத் திரும்பத் தந்தான் என்பது மகாபாரதக் கதை. பல்கிப் பெருகிக் கிளைக்கும் கொடி. ஆசை எனும் கொடி.

சரி. அப்போது தாழ்மரம்? தாழ்ப்பாளாகப் போடப்படும் மரமா அல்லது தாழ்ப்பாள் பொருந்திய, மரத்தாலான கதவா?

தாழ்ந்து வருவது எதுவோ அதையும் தாழ் என்று சொல்வோம். 'தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்' என்று பேயாழ்வாரும்; 'ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீபோய்த் தாழ்இரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு' என்று இராமனுக்குக் கட்டளையிடும் கம்பனுடைய கைகேயியும் குறிப்பிடும் 'தாழ்சடை' என்பது, கால் அளவாகத் தாழ்ந்து நீண்டு வளர்ந் திருக்கும் சடையைக் குறிக்கிறது. ஆகவே, 'தாழ்மரம்' என்பது, 'தாழ வரும் மரம்; அல்லது, தாழ இறக்கப்படும் மரம்' என்ற பொருளைத் தரும் என்று அனுமானிக்க முடிகிறது.

தாழ் என்ற பெயர்ச்சொல்லுக்கு மொத்தம் 7 பொருள் சொல்கிறது பேரகராதி. அவற்றில் ஒன்று 'மதகுகளை அடைக்கும் மரப்பலகை' என்பது. ஆங்கிலத்தில் spear shutter, sluice gate என்றெல்லாம் சொல்வோமல்லவா, அந்த வகையைச் சேர்ந்த அடைப்புக் கதவம்தான் தாழ்.

இப்போது கொஞ்சம் வெளிச்சம் கிட்டுகிறது. ஆசை என்னும் கொடி என்பது, உள்ளத்தை நிறைத்துப் பல்கிப் பெருகிக் கிளைகளாக ஓடுவது என்றும்; தாழ்மரம் என்பது, அப்படிக் கொடி ஓடாமல் ஏரியின் மதகை அடைப்பதற் காகப் பயன்படும் பலகை அல்லது shutter என்றும் புலப்படுகிறது. பெருக்கெடுக்கும் ஆசை, வழிந்தோடும் ஆசை மேலும் பெரு காமல், மேலும் சிந்தி, வழிந்து ஓடாமல் தடுத்து நிறுத்தும் தாழ், குரு. உள்ளே ஆசை நிறைந்து, கரையை அரித்து, உடைத்து ஓடப் பார்க் கிறதா? குருவைச் சரண்புகுந்தால், ஓட்டை ஏற்பட்ட dyke உடைந்து போகாமல் அதனுள் விரலை நுழைத்துக் காத்த சிறுவன் ஹேன்சன் செய்ததைப்போல் குருவின் பாதம், ஆசையின் மதகை அடைக்கப் பயன்படும் பலகையாகச் செயல்படும் என்று பாரதி சொல்கிறான். மலையைக் கெல்லி எலியைப் பிடித்ததைப் போல் பிடிக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய சொல்லாட்சியை அப்படி இழந்து கொண் டிருக்கிறோம். மிக எளிமையான பாடல்கள் என்று பெயர்பெற்ற பாரதியின் கவிதை களுக்கே இந்த நிலை.

அப்படியானால் அடைக்கும் தாழ்? திரு வள்ளுவர் என்ன சொல்கிறார்? அங்க வாங்க. அன்பு என்பது எப்போதும் உள்ளத்தில் முற்ற முழுக்க நிறைந்து இருக்கிறது. அது வற்றுவதில்லை. அது வெளிப்பட்டபடியே இருக்கும். அப்படி வெளிப்படும் அன்பின் ஒழுக்கை--அல்லது பெருக்கை--தடுக்க ஒரு தாழ்--அடைக்கும் பலகை--ஏதும் இல்லை. அதனால்தான் தன் அன்புக்கு உரியவர் களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமானால் 'புன்கணீர் பூசல் தரும்', கண்ணீர் வழியாக வெளிப்படும். அன்பைத் தடுத்து நிறுத்த முடியாது. உள்ளே நிறைந்த அன்பு, துன்பம் ஏற்படும் சமயங்களில் கண்ணீர் வடிவத்தில் வெளிப்படுகிறது. அப்புறம் எங்க இருக்கு தாப்பாள்?

ஒன்று கவனியுங்கள். பாரதி, ஆசை பெருகாமல் அடைப்பதற்கு உரிய தாழ் மரத்தைச் சொல்கிறான். வள்ளுவரோ, பெருகிப் பொங்கும் அன்பைத் தடுத்து நிறுத்த ஒரு தாழ்மரம் இல்லை என்று சொல்கிறார். அப்படியானால், அன்பும் ஆசையும் வேறுவேறா? இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடு? அடுத்த இதழ் வரும்வரையில் சிந்திக்கலாமா?

ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com