ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
2007ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது உலகெங்கிலுமுள்ள இந்தியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், இந்திய விஞ்ஞானி டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரியின் கீழ் இயங்கும் பருவ மாற்றங்கள் குறித்த அரசுகளிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change) நோபல் பரிசை அமெரிக்காவின் முன்னாள் துணையதிபர் அல் கோருடன் பகிர்ந்துகொள்கிறது. ஐ.பி.சி.சி. என்பது உலக வானிலை அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

'மனிதர்கள் ஏற்படுத்தும் பருவ மாறுதல்களைப் பற்றிய அறிவினை வளர்க்கவும் பரப்பவும், அந்த மாறுதல்களை இல்லாதாக்குவதற்கான முயற்சிகளுக்கு அடித்தளம் அமைக்கவும் இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக' நோபல் பரிசை வழங்குவதாக நார்வேயில் உள்ள நோபல் கமிட்டி கூறியுள்ளது. டாக்டர் பச்சோரியின் கீழ் சுமார் 3000 வானிலை விஞ்ஞானிகள், சமுத்திரவியலாளர்கள், பொருளியலாளர்கள் போன்ற அறிஞர்கள் பணிபுரிகின்றனர். சூழல் பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஐ.பி.சி.சி. உலகின் முன்னோடி நிறுவனம் ஆகும்.

ஏப்ரல் 2002இல் இருந்து டாக்டர் பச்சோரி ஐ.பி.சி.சி.யின் தலைவராக இருந்து வருகிறார். நார்த் கரோலினா ஸ்டேட் பல்கலையிலிருந்து தொழிற்பொறியியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் டாக்டரேட் பெற்ற பச்சோரி, இதற்கு முன் புதுடில்லியில் உள்ள தி எனர்ஜி இன்ஸ்டிடியூட்டை வழிநடத்தினார்.

நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் அல் கோர் (அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு புஷ்ஷிடம் தோற்றவர்) டாக்டர் பச்சோரியை அப்படி ஒன்றும் நேசிக்கவில்லை என்பது இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தகவல். ஐ.பி.சி.சி.யின் தலைவர் பதவிக்கு ஓர் அமெரிக்கரை எதிர்த்து நின்ற டாக்டர் பச்சோரி தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அல் கோர் அதைக்குறித்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

சூழல் பாதுகாப்புக் குறித்து அல் கோர் எடுத்த 'தி இன்கன்வீனியன்ட் ட்ரூத்' என்ற ஆவணப்படம் 2006ல் ஆஸ்கர் விருதை வென்றது. தற்போது இவர் நோபல் பரிசையும் வென்றிருக்கும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு இவர் போட்டியிட வேண்டும் என்ற குரல் வலுத்திருக்கிறது.

தகவல் தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com