உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
இருபது20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய அதே சமயம் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்ஸிகோ வில் நடந்த உலக சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். அப்போட்டியில் உலகின் முன்னணி செஸ் வீரர்களான போரிஸ் ஜெல்பான்ட், விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லீக்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில் பீட்டர் லீக்கோவை எதிர்கொண்ட ஆனந்த், சளைக்காமல் கடுமையாகப் போராடி வென்றார். ஏற்கனவே சதுரங்கத்தில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் ஆனந்த், தற்போது இந்த வெற்றியின் மூலமாக மீண்டும் உலகச் சாம்பியன் ஆகியிருக்கிறார். உலக அளவில் சதுரங்கத்தில் 2800 புள்ளிகளுக்கு மேல் எடுத்த நான்கு வீரர்களுள் விஸ்வநாதன் ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'இருபது20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு இந்தியாவில் மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்படும் என்றறிய ஆர்வமாய் இருக்கிறேன்' என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்திருந்தார் ஆனந்த். அவரது எதிர்பார்ப்பை ரசிகர்கள் பொய்க்க விடவில்லை. நள்ளிரவு ஆனதையும் பொருட்படுத்தாமல், டில்லி விமான நிலையத்திலிருந்து ஆனந்த் ஏராளமான ரசிகர்கள் சூழ நகருக்குள் திறந்த காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மனைவியுடன், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களையும் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்குச் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

தனது வீரருக்கு ஆரவாரமான வரவேற்புக் கொடுப்பதில் சென்னையும் சளைக்கவில்லை. விமான நிலையத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள், அகில இந்திய செஸ் சம்மேளத்தினர் ஆகியோர் குவிந்திருக்க, நாதஸ்வரம் செண்டை முழங்க, ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் மலர் தூவ, அடையாறு வரை ஆனந்த் காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது வீடு இருக்கும் பெசன்ட் நகர் வரை இரட்டைக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ரசிகர்களும் பொதுமக்களும் ஆர்ப்பரிக்கச் சென்றார்.

ஆனந்தின் சாதனையைப் பாராட்டி தமிழக அரசு அவருக்கு 25 இலட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது. முதல்வர் இதனை நேரில் அவருக்கு அளித்தார்.

ஆனந்த் இந்த வெற்றியைப் பற்றிக் கூறுகையில் 'எனக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி. மேலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற பசியை இது எனக்குத் தூண்டிவிட்டது' என்றதோடு, 'இப்படிப்பட்ட வரவேற்பைக் கனவில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. நான் ஒரு ராக் ஸ்டாரைப் போல உணர்ந்தேன்' என்றார் முகம் நிறையச் சிரிப்புடன்.

20 நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் கிரிக்கெட்டின் உலகக் கோப்பை வெற்றி அளவுக்கு 166 நாடுகளில் விளையாடப்பட்டும் சதுரங்கத்தில் உலக சாம்பியன் வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவில்லை என்றாலும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இது. சதுரங்கம் பாரதத்தில் தோன்றிய விளையாட்டு என்பதையும் இப்போது நினைவுபடுத்திக் கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com