லா.ச.ரா - அழகு உபாசகர்
'அம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.'

'பட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.'

- 'அம்முலு' சிறுகதையில்.

'மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின.' - 'இவளோ?' சிறுகதையில்.

அழகை ரசிப்பதற்கு நிச்சயம் ஒரு மனம் வேண்டும். அந்த அழகு என்பதை ஒரு பெண்ணில் மட்டுமல்லாமல், கல்லில், இயற்கையில், உள்ளங்களில், தெய்வத்தில் என்று நீட்டித்துக் கொண்டே போக முடியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மனிதனின் வேகமான வாழ்க்கையில், ஓட்டத்தில், இந்த ரசனை என்ற அம்சத்தை வெகு விரைவில் தொலைத்துவிடுவான். எல்லாவற்றிலும் வெறுமையும், சலிப்பும் மட்டுமே மிச்சமாக இருக்கக்கூடிய இன்றைய நாளில், தன் வாழ்நாள் முழுவதும் இந்த அழகு உபாசனையே ஒரு கர்மமாகச் செய்தவர் ஒருவர் உண்டெண்றால், அது லா.ச.ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் தான்.

மேலும் அந்த அழகைத் தன் எழுத்துக்களில் கோவையாக, கவித்துவமாக எடுத்துச் சொல்லத் தெரிந்தவரும் லா.ச.ரா.தான். மணிகளைக் கோர்ப்பது மாதிரி ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து, தன் வாக்கியங்களை அமைத்தவர் அவர். அழகு, அனுபவம், தெய்வீகம், தத்துவம் என்று எல்லாவற்றையும் ஒரே கோட்டில் சேர்க்கத் தெரிந்தவரும் அவர்தான். இன்றைக்கும் அவருடைய அபிதா நாவலை எடுத்துப் படித்தோமானால், இந்த அழகையும் தெய்வீகத்தையும் இரண்டறக் கலக்கும் தன்மை தெளிவாகப் புரியும்.

பல வகைகளில் லா.ச.ரா. ஒரு வித்தியாசமானவர். தெரிந்தேதான் இந்த வித்தியாசத்தைத் தனக்குச் சூட்டிக்கொண்டாரோ இல்லை அதுவே இயல்பாக அமைந்ததோ, தெரியவில்லை. பொதுவாக, சந்தையில் தான் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதற்காக, கேட்பவர்களுக்கு எல்லாம் கதைகளை வழங்கி வரும் எழுத்தாளர்கள் மத்தியில், இவர் தனக்குப் பிடித்து, தான் லயித்து எழுதி முடித்து, அனுபவித்த பின்னரே, கதைகளைப் பிரசுரத்துக்கு வழங்கி இருக்கிறார்.

ஒரு முறை, அவரோடு பேசும்போது, இதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை கூட ஒரு சிறுகதை எழுதத் தான் நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்று கேட்டபோது, எனக்குப் பிடிக்க வேண்டாமா என்றார்.

தான் எடுத்துக் காட்ட விரும்பும் அழகு எழுத்தில் சித்திக்கும் வரைக் காத்திருப்பது என்பதைத் தவம் என்ற சொல்லைத் தவிர வேறோரு சொல்லால் குறிக்க முடியுமா என்று தெரியவில்லை.

அதேபோல், குடும்பக் கதைகளை எழுதினார், வித்தியாசமாக எதுவும் சொல்லிவிடவில்லை என்றொரு விமர்சனம் லா.ச.ரா.வின் எழுத்தின்மேல் வைக்கப்படுவதுண்டு. அழகின் சொரூபமாக எதையும் காணும் கண்ணுள்ளவருக்கு, குடும்பம் என்பதும் உறவுகள் என்பதும் தொடர்ந்து வேறு வேறு பரிமாணங்களைக் காட்டிக் கொண்டே இருந்திருக்கிறது. கதை என்பது சம்பவங்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று அம்சத்தில் தன் கவனத்தைக் குவிப்பதை விட, ஒரு பாத்திரத்தைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள், மனோநிலைகள் போன்ற உள்மன அமைப்புகளை விவரிப்பதிலேயே அவர் கவனம் செலுத்தினார்.

ஆழ்ந்த தத்துவப் பிடிப்பு, லா.ச.ரா.வின் எழுத்துக்களில் தென்படும் மற்றோரு முக்கியக் கூறு. முக்கியமாகப் பெண் தெய்வ (சக்தி) வழிபாட்டில் கவனம் செலுத்திய அவர், பெண்ணைப் பல்வேறு நிலைகளில் வைத்து, அதற்கான தத்துவ நீட்சிகளைத் தொடர்ந்து தன் விவரணைகளில் கொடுத்துக் கொண்டே வந்தார். கட்டுப் பெட்டித்தனமான பழைய காலத்துப் பெண் பாத்திரங்களையே அவர் படைத்தார் என்று விமர்சனங்கள் அவர் கதைகள் மேல் வைக்கப்படுவதுண்டு. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட களங்களுக்கு வேறெப்படியும் அவரது பெண் பாத்திரங்கள் நடந்துகொண்டுவிட முடியாது என்பதே உண்மை.

புத்ர, அபிதா, கல் சிரிக்கிறது, பிராயச் சித்தம், கழுகு, கேரளத்தில் எங்கோ, பாற்கடல், சிந்தாநதி, முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம், ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா, பச்சைக்கனவு, இதழ்கள், மீனோட்டம், உத்திராயணம், நேசம், புற்று, த்வனி, துளசி, ப்ரியமுள்ள சினேகிதனுக்கு, அவள், விளிம்பில், சௌந்தர்ய, நான் என்று பல நூல்களை எழுதியுள்ள லா.ச.ரா.வின் முக்கியமான பெருமை என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அவரது எழுத்தில் உள்ள நிதானம்தான் அது.

அவசரத்துக்கு அரைப் பக்கம் கதை படிக்கும் இக்காலத்தில் நின்று நிதானமாக, ஒவ்வொரு அசைவையும் ஆழ்ந்து அனுபவிக்க வைக்கும் அவரது எழுத்து, பூரண நிலவு போன்றது. படிக்கத் தொடங்கும்போதே, நீங்களும் அந்த நிதானத்துக்குள், அழகுக்குள் இழுத்துக்கொள்ளப்படுவீர்கள். வார்த்தை வார்த்தையாக நீங்களும் நீந்தத் தொடங்குவீர்கள். இந்தக் கட்டிப் போடும் எழுத்து வல்லமை தான், அவரது அழகு உபாசனைக்கு மேலும் அழகும் உரமும் சேர்த்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு தலைமுறையும் இந்த வல்லமை கண்டு மெய்மறந்து இருந்தது. இனி படிக்க வரும் தலைமுறையும் அவ்வாறே இரசிக்கும். மெய்மறக்கும். இவரைப் போல இன்னொரு எழுத்தாளர் பிறக்கப் போவதில்லை என்று சம்பிரதாயமாகச் சொல்வதுண்டு. ஆனால் லா.ச.ரா. விஷயத்தில் மட்டுமே அது நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும்.

அக்டோபர் 30, 2007 அன்று லா.ச.ராமாமிர்தம், தனது 91 வது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தக் கட்டுரை வெளியாகிறது.

ஆர். வெங்கடேஷ்

© TamilOnline.com