ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு - சி.கே. கரியாலி
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதி களைத் தென்றல் தருகிறது...

சிதம்பரம் தீட்சிதர்கள்

1983-ல் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக நான் பணியாற்றி வந்தேன். அந்தச் சமயத்தில் ஒருநாள் சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத் திற்குச் சென்றிருந்தேன். மரபுவழியாக வந்த பிராமண சமூகத்தினரால் அவ்வாலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொண்டேன். மேலும் விரிவாக அவர்களைப் பற்றி ஆராய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அவர்கள் தீட்சிதர்கள் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்கள். (வட இந்தியாவில் வழங்கப்படும் தீட்சித் என்ற பெயரின் திரிபாக இருக்கலாம் என்பது என் கருத்து). கோவிலுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுமார் முந்நூறு தீட்சிதர் குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் பண்டைய இலக்கியங்கள் 'தில்லை மூவாயிரவர்' என்று குறிப்பிடுகின்றன. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, மூவாயிரம் பிராமணர்களை சிதம்பரம் வருமாறு சோழ மன்னர்கள் கேட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது. இதுபற்றி இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒரு சிலர், அவர்கள் வாரணாசி (காசி) வம்சாவளியினர் என்றும் உத்தரப்பிரதேச தீட்சித்கள் என்றும் நம்புகின்றனர். மற்றொரு பிரிவினர், தீட்சிதர்களது பழக்கவழக்கங்களில் இருந்தும், அவர்கள் தங்கள் தலைமுடியை முடிந்து கொள்ளும் பாங்கிலிருந்தும் அவர்கள் கேரள நம்பூதிரி பிராமணர்களின் உட்பிரிவினர் என்று நம்புகின்றனர். இந்தக் கோவில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதென்றும், ஆரம்பகாலம் முதலே அக் கோவிலுடன் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இணைந்திருப்பதாகவும் இங்குள்ள தீட்சிதர்கள் நம்புகிறார்கள். ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்பிருந்தே அவர்கள் சிதம்பரத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது பல ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியாகும். பண்டைய திருக்கோவில் சடங்கு முறைகளையே இவர்கள் பின்பற்றுகின்றனர். பிரார்த்தனையும் கோவில் பொறுப்புகளும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படியே மாறாமல் இருக்கின்றன. அவர்கள் தங்களை, நடராஜரின் அடிமைகள், காவலர்கள், பொறுப்பாளர்கள் என்றும் அவரது பக்தர்கள் என்றும் கருதுகிறார்கள்.

கோவில் பணிகள் யாவும் அவர்களால் சமமாக சுழற்சி முறைப்படி, இரவுக் காவல் உள்பட, மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் பணி, கருவறையில் சடங்கு ஆசாரப்படி பூஜை நடத்துவது, வேதம் ஓதுவது, மணி அடிப்பது, விளக்கேற்றுவது, பக்தர்கள் கொடுப்பதை எடுத்துச் செல்வது, கோவிலின் உள்வளாகத்தைச் சுத்தம் செய்வது, இரவில், கோவில் பாதுகாவலர் களாக இருப்பது முதலியனவாகும். பதவிப் பொறுப்பைப் பொறுத்தவரையில் அனைவரும் சமமானவர்கள். முக்கியமான கோவில்களில் 'தலைமை அர்ச்சகர்' என்று இருப்பது போல் சிதம்பரத்தில் கிடையாது. இவர்கள் அனைவரும் கோவிலைச் சுற்றியே குடியிருக்கிறார்கள். புராதானமான கூட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். உறுதியுடன் சமூக சமத்துவக் கொள்கை யைக் கடைப்பிடிக்கிறார்கள். சுழற்சி முறைப்படி வருடத்திற்கு ஒருவர் தீட்சிதர்கள் அலுவலகச் செயலராகப் பதவி வகிக்கிறார். அது ஒன்றும் உயர்பதவி அல்ல; அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலை தான். செயலர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. விவாதிக்கக் கூட்டத்தைக் கூட்டலாம், அவ்வளவுதான். வாராந்திரக் கூட்டத்தில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரும் சமம் என்பதால் தீட்சிதர்கள் யாரும் கூட்டத்துக்குத் தலைமை வகிக்க முடியாது. பரம்பரை வழக்கப்படி கோவில் மடப்பள்ளி, பண்டகசாலைகளை கவனிக்கும் பொறுப்பில் உள்ள பண்டாரம்தான் (இவர் வேறு ஒரு வகுப்பினர்) தீட்சிதர்களின் கூட்டத்துக்கு தலைமைத் வகிக்கிறார்.

கோவில் நிர்வாகத்தில் தீட்சிதர்கள் கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக் கிறார்கள். சான்றாக, நகையிலோ தங்கத்திலோ ஏதாவது காணாமற் போனாலோ, தவறிப் போனாலோ, நீண்டகால உபயோகத்தினால் பழுதாகி உடைந்து போனாலோ அந்தச் சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த தீட்சிதர் தான் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும். இந்த முறையினால் எல்லா ஆபரணங்களும் பொக்கிஷங்களும் சேதமடைந்தாலோ, தவறிப்போனாலோ, உடனே பழுது பார்க்கப்பட்டும், உடனடியாகப் புதிதாகச் செய்யப்பட்டும் வைக்கப்படுகிறது. இந்த முறையினால் கோவில் பொக்கிஷங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், திருமணம் ஆனவர்தான் தீட்சி தராக முடியும். திருமணமான ஒவ்வொரு வருக்கும் கோவில் வருமானத்திலும் நிர்வாகத்திலும் பங்கு உண்டு. இந்தக் காரணத்தினால் தீட்சிதர்களிடையே பால்ய விவாகம் செய்யும் பழக்கம் நிலவி வருகிறது. பல சமயங்களில் இளவயதுப் பையனை விட்டுவிட்டுக் குடும்பத் தலைவர் இறந்து விட்டால், கோவில் வருமானத்தைத் தவிர அவர்கள் பிழைக்க வேறு வழியே இல்லை. இந்தச் சூழ்நிலையில் மகனுக்கு, அவன் வயது என்னவாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து வைக்கப்பட்டு கோவில் பணி ஏற்கிறான். இத்தகைய சமூக-பொருளாதாரக் காரணங்களினால் இவர்களிடையே குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருக்கிறது. இவைகளில் தனிச்சிறப்பான உண்மை என்னவென்றால், இவர்கள் நடராஜப்பெருமான் மீது திடமான நம்பிக்கையுடனும் ஆழ்ந்த பக்திப் பரவசத்து டனும் அவரது திருவடியே சரணாகதி என்றும் இருப்பதுதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி புராதனச் சடங்குகளையும் பழக்கவழக்கங் களையும் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் ஆற்றலும் சக்தியும் அவர்களிடம் இருக்கிறது.

கோவில் வருமானத்தில் முதல் உரிமை நடராஜருக்குத்தான். பழைய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள சட்டதிட்டம், நடைமுறை களுக்கிணங்க அன்றாடம் வழிபாட்டுக்கும், திருவிழாக்களுக்கும் தேவையானவைகள் முதலில் பூர்த்தி செய்ய்யப்படுகிறது. நெய், தேன், பூக்கள், பால் இவைகள் யாவும் வாங்கி பிரசாதம் படைக்கப்பட்ட பிறகு என்ன மிஞ்சுகிறதோ அவை திருமணமான அர்ச்சகர்களிடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது. இவற்றில் பெண்களுக்குப் பங்கு கிடையாது. முன்பு சிலகாலங்களில் கோவில் வருமானம் படிப்படியாக மிகவும் குறைந்து விட்டது. ஆனால் அப்போதும் தீட்சிதர்கள் தான் பட்டினி கிடந்தார்களே ஒழிய, கடவுள் வழிபாட்டுக்கும் விழாவுக்கும் ஆகும் செலவுகளை அவர்கள் குறைத்து விடவில்லை. அவர்களுக்குக் கடவுள் பூசனை தான் முக்கியமே ஒழிய, சொந்தப் பிரச்னைகள் அல்ல.

பொதுவாக எல்லாக் கோவில்களிலும் சிவன் லிங்க உருவில்தான் காட்சி தருவார். சிவபெருமானை நடனமாடும் கடவுளாக வழிபடும் ஒரே கோவில் சிதம்பரம் தான். இதேபோல் இன்னொரு இடம் திருவள்ளூருக்கு அருகே உள்ள திருவாலங்காடு திருத்தலம்.

சிதம்பரத்தில் சிவபெருமான் பஞ்சலோகச் சிலையாக நாட்டியமாடும் தோற்றத்தில் கருவறையை அலங்கரிக்கிறார். தினசரி ஆறுகாலம் பூஜை நடைபெறுகிறது. முதல் காலம் காலை ஆறுமணிக்கும் கடைசி பூஜை இரவு பன்னிரண்டு மணிக்கும் நடைபெறுகிறது. பழைய முறையில் எவ்வித மாற்றமும் இன்றி இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்து ஒரு லிங்கம் வழங்கி உள்ளார். இந்தக் கோவிலில் புராதனமான ஒரு ஸ்படிகலிங்கமும் உள்ளது. நடராஜர் சந்நதிக்கு முன்னால் மஹாவிஷ்ணுவுக்கு கோவிந்தராஜப் பெருமாள் என்ற பெயரில் ஒரு கோவில் உள்ளது. அக்கருவறையில், லட்சுமி அவரது நாபிக் கமலத்திலிருந்து வெளிவந்திருக்க, பெருமாள் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக பிற்காலத்தில் பெருமாள் கோவில், நடராஜர் சன்னதியின் முன்னால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் நுழைபவர் சட்டையைக் கழற்றி விட்டு வெற்றுடம்புடன் தான் நடராஜர் முன் செல்ல வேண்டும். கடவுளின் சந்நிதானத்தில் ஏழை பணக்காரன் அனைவரும் சமம் என்பதை இது காட்டுகிறது.

கோயிலில் உள்ள சிற்பங்கள், சித்சபை, திருக்குளம், கற்களில் கைத்திறன் மிக்க வேலைப்பாடுகள், சுவர்களில் நாட்டியத்தின் 108 கரணங்கள் (நிலைகள்) இவைகளால் நான் மிகவும் வசீகரிக்கப்பட்டேன். சிதம்பர ரகசியத்தின் தத்துவம் கடவுளை 'வெற்றிடமாக'ப் பிரநிதித்துவப்படுத்துவது, 'மறை பொருள் வணக்கம்', 'சிலை வணக்கம்' இரண்டையும் இணைப்பது போல் தோன்றுகிறது இது. முதலில் என்னை மிகவும் கவர்ந்தது கோவிலின் தோற்றம் பற்றிய கதைதான். நடராஜர் கோவில் உள்ள இடம் ஆரம்பத்தில் காளி கோவிலாக இருந்தது. நடராஜர் காளிதேவியை நாட்டியமாடச் சவால்விட்டு அழைத்தாகவும், பின் காளிதேவியைத் தோற்கடித்ததாகவும் கூறப்படுகிறது. நாட்டியமாடும் போது நடராஜர் தன் காதில் இருந்த தோடைத் தரையில் நழுவவிட்டார். பிறகு தன் கால்விரல்களால் அதை எடுத்துத் தன் காதில் பொருத்திக் கொண்டார். இதற்காக அவர் ஒரு காலைத் தன் தலைவரை உயரத்தில் தூக்க வேண்டியதாயிற்று. காளி பெண்ணானபடியால் அவரால் அவ்வாறு செய்ய இயலவில்லை. தன் தோல்வியை அறிவித்துவிட்டு கோபத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறி, சிதம்பரத்தின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றுவிட்டார். அவரது கோவில் சிதம்பரத்திற்கு அப்பால் இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இதைத் 'தில்லை மாகாளி கோவில்' என்று அழைக்கிறார்கள்.

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com