Bay Area Round Up
நகர இளைஞர் விழா

வானாளவி நின்ற உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் இரண்டும் விமானத் தாக்குதலால் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தீயுடன் போராடி உயிரிழந்த வீரர்களைப் பற்றி நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது. இவ்வாறு உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டித் தருவதில் பலரும் முயன்று வருகின்றனர்.

இராமபிரானுக்கு அணில் உதவியதுபோல் மெக்ஸிகன் நகரத் தமிழ்ச் சங்க அங்கத்தினர்களும் செப்டம்பர் 30ம் நாள் கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி 3000 அமெரிக்க டாலர்களை நிதியாகத் திரட்டி அளித்துள்ளனர்.

தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க செய்திகள் பல. முதலாவதாக பிற்பகல் ஒரு மணிக்கு (குறிப்பிட்டிருந்த நேரப்படி) நிகழ்ச்சியைத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு (முடிக்கப்பட வேண்டிய நேரப்படி) நிகழ்ச்சியை முடித்ததைப் பாராட்ட வேண்டும். (இது ஓர் அதிசயமல்லவா!!!)

அடுத்து, நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரும் 4 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். மொத்தம் 149 இளைஞர்கள் இக்கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றவை மொத்தம் 23. இதனை கண்டுகளித்தவர்கள் ஏறத்தாழ 500 பேர்.

மற்றொரு சிறப்பித்துக் கூறவேண்டிய செய்தி சட்டத்துறையைச் சேர்ந்த ப்ரியாகுமார் என்பவரால் கலைவிழாவில் பங்குகொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் (149 பேர்) TROPHY வழங்கப்பட்டது.

கலைவிழாவில் இடம்பெற்றவற்றுள் எட்டே வயதுடைய ஹரிணி சந்திரா என்ற சிறுமியின் குசேலோபாக்யான கதாகாலட்சேபம் மிகச் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. திமிகிட திமிகிட என்று கணீரென்ற குரலில் ஆரம்பித்துத் தடங்கல் இல்லாமல் பாடிய அச்சிறுமியின் திறமை அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

இளைஞர் குழுவின் தலைவர் நவீன் செல்வம் தமிழில் வரவேற்பு நிகழ்த்தினார். குழுவின் ஒருங்கிணைப்பாளர் பத்மாசிவராம் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com