மஹாகவி சுப்ரமண்ய பாரதி விழா
மஹாகவி சுப்ரமண்ய பாரதி சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவியாவார். தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்த மேதை தனது தேசிய பாடல்கள் மூலம், வெள்ளையருக்கு எதிராக விடுதலை உணர்ச்சியை இந்திய மக்களிடையே தூண்டிவிட்டவர். விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட இவர் பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், லாலா லஜபதிராய் போன்ற தீவிர காங்கிரஸ்வாதிகள் பால் ஈர்க்கப்பட்டார்.

பாரதியின் படைப்புகளை தேசபக்தி, தெய்வீகம், தத்துவம் என மூன்று பெரும் வகையாக பிரிக்கலாம். பாரதி தனது பாடல்களில் பாரத பூமியை தன் தாயாக பாவித்து அவளை வெள்ளையனின் பிடியிலிருந்து விலக்க முயல்வதாக அழைத்துள்ளார். அவரது படைப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை - அவைகளை நாம் பாடலாம், ஆடலாம் மற்றும் பட்டிமன்றத்திலும் விவாதிக்கலாம். ப்·ரீமாண்டில் (FREMONT) இயங்கும் 'பாரதி கலாலயா' மஹாகவியின் 80வது மறைந்த தினத்தை சமீபத்தில் சிறப்பாகக் கொண்டாடினர். அப்பொழுது பலர் பாரதியின் பாடல்களை பாடி சபையோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 'பாரதி கலாலயா' இந்திய கலைகளை இப்பகுதியில் வசிக்கும் இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் 1998 ஏப்ரல் மாதம் திருமதி அனுராதா சுரேஷ் அவர்களால் தொடங்கப்பட்டது. வெகு குறுகிய காலத்திலேயே பலரது பாராட்டையும் ஆதரவையும் பெற்று வளர்ந்துள்ளது என்பதற்கு இங்கு கலைகளை கற்றுக் கொடுக்கும் இசை கலைஞர்களின் ஒரு பெரிய பட்டியலே சான்றாகும். கர்நாடக இசை, வயலின், வீணை, மிருதங்கம் மற்றும் ஹிந்துஸ்தானி இசை, சித்தார், தபலா, புல்லாங்குழல், பரதநாட்டியம் என பல கலைகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. மேலும் தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகளும் உண்டு.

சமீபத்தில் தீவிரவாதிகளின் நாசவேலையில் உயிர் இழந்த பலரின் நினைவாக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, முதற்கண் ''மைத்ரீம் பஜத'' என்ற ஸமஸ்கிருத பாடலை செல்விகள் லாவண்யா குமார் மற்றும் மானஸா சுரேஷ் வெகு அழகாக உருக்கமாக பாடினர். இந்த பாடல் காஞ்சி முனிவர் பரமாச்சார்யாள் அவர்களால் சில ஆண்டுகளுக்கு முன் பிரத்யேககமாக திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி கார்னேகி ஹால் (Carnegie Hall) பாடும் பொருட்டு அமைத்துக் கொடுக்கப்பட்டது. இப்பாடம் மூலம் அவர்கள், உலக அமைதிக்கும் நட்புக்கும் ஆசி கூறியதோடல்லாமல், மற்றும் போரை தவிர்க்கவும், நியாயமற்ற படையெடுத்தலை நீக்கவும், மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருவரையொருவர் நேசிக்கவும், அன்னை பூமியையும், உலக பிதாவையும் வேண்டுவதாக அமைந்துள்ளது.

அடுத்து 'கற்பக வினாயகா' என்ற ஹம்ஸத்வத்னி ராக பாடலை ரம்யா, தாரிகா மற்றும் ஆரபி விக்னங்களை தவிர்க்கும் வினாயகரை வேண்டி பாடினார்.

செல்வி சித்ரா, பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வெகு சுருக்கமாக சபையினருக்கு அளித்தார்.

'சந்திரன் ஒளியில்' என்ற பாடலை ரோஹிணி, ஸ்நேகா சிதம்பரம், நிகில், மல்லிக் ஒருமித்து பாடியதை தொடர்ந்து, திருமதி மாலா சிவகுமார் பாரதியாரின் ''ஆசை முகம் மறந்து போச்சே'' என்ற பிரபல பாடலை ராகமாலிகையில் பாடி சபையோரை மகிழ்வித்தார். இப்பாடல் கோபிகை பெண்கள் கண்ணனின் பிரிவாற்றமையால் தவிப்பதாகவும், அவனை சீக்கிரம் வரும்படி வேண்டுவதாகவும் அமைந்துள்ளது.

சிறப்பு விருந்தினராக திரு ஜெரட் மாக் (Genard Mack) விழாவில் கலந்துக் கொண்டு, வயலின் இசையில் சில மேற்கத்திய பாணி பாடல்களை வாசித்துக் காண்பித்தார். மெல்போர்ன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அங்கு வயலின், கிதார் கற்பிக்கும் பள்ளியை அமைத்துள்ளார்.

அடுத்து திருமதிகள் அனு சுரேஷ், மாலா சிவகுமார் இருவரும் பாரதியின் மற்றுமொரு பிரபல பாடலான 'சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா' ராகமாலிகையில் அழகாக பாடினர். இப்பாடலில் கவிபாரதி தன்னை குழந்தையைப் போல் பாவித்து, கண்ணம்மா என்ற சிறுமியுடன் விளையாடுவது போலவும், அவளை மற்றவர் புகழும் போது தான் இன்புறுவதாகவும், அதே சமயம் அவள் கண்ணில் நீர் வழிந்தால் தனது இதயத்தில் உதிரம் கொட்டுவதாகவும் மிக அருமையாக அமைந்துள்ளது.

அடுத்து எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல இருந்தது சிறுமிகள் லாவண்யா, சவிதா மற்றும் அனிதா பரதநாட்டிய பாணியில் ஆடிய ஒரு நடனம், 'கண்ணன் பிறந்தான்' என்ற பாடலுக்கும் இவர்கள் தாளத்திற்கு ஏற்ப ஆடியதும், முகபாவங்களும், தெளிவான கை அசைவுகளும் மிக துல்லியமாக அமைந்து, சபையோரை கரகோஷம் செய்ய வைத்து, இந்த நடனத்தை மறுமுறை செய்து காண்பிக்க தூண்டியது. கண்ணன் பிறந்த செய்தியை கேட்ட கோபியர் ஆனந்த நடனம் ஆடுவதாக அமைநத இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அளித்தவர் திருமதி வித்யா வெங்கடேசன். இவர் பாரதி கலாலயாவில் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார்.

மஹாகவி பாரதியாரின் பாடல்களை நினைவு கூறும் வண்ணம் அமைந்த இந்த விழா, அவரது வாழிய செந்தமிழ் என்ற பாடலுடன் இனிதே நிறைவேறியது.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com