யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 26, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப் பள்ளி அரங்கில் அபிநயா டான்ஸ் குழும மாணவி யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

சரஸ்வதி வந்தனத்துடன் ஆரம்பித்த பின் மல்லாரி, புஷ்பஞ்சாலியைத் தொடர்ந்து 'ஆனந்த நர்த்தன கணபதிம்' (நாட்டை) பாடலில் கஜவதன கணபதியைக் கண்முன் நிறுத்தியது கச்சிதம்.

ஜதிஸ்வரத்தில் கால்களில் சிறந்த தீர்மானம். மதுரை முரளிதரன் அவர்களின் வர்ணத் துக்கு (ஷண்முகப்ரியா) முன்பாக கந்தர் அலங்காரத்திலிருந்து 'நாள் என் செய்யும்' எனும் பாடலை ஜெயந்தி உமேஷ் அவர்கள் விருத்தமாக உருக்கமாகப் பாடியதற்கேற்பக் காண்பித்த மாணவியின் முகபாவங்கள், பாடலை ஒலிபெருக்கியில் விவரித்து அபிநயித்த விதம், 'ஒரு பழம் வேண்டியே சினமுடன் தனிமையில் நின்றானே, சூரனை வதைத்தானே' என்னும் போது உணர்ச்சி களை வடித்தவிதம், நட்டுவாங்கத்துக்கேற்பச் சிறந்த தாளக்கட்டுடன் ஆடியது யாவும் அற்புதம்.

தொடர்ந்து 'கண்டேன் கண்டேன்' எனும் அருணாசலக் கவிராயர் பாடலில் அனுமான் ராமனிடம் அண்டரும் காணாத லங்கா புரத்தில் சீதை அரக்கியர் காவலில் படும் அவஸ்தையைக் குதிநடையில் ஆடி விளக்கிய விதம் வெகு அழகு. 'மணியரங்கில் நடன மாடும்' (மணிரங்கு) என்னும் பாடலுக்குப் பனித்த சடை, குனித்த புருவத்துடன் தாண்டவமாடும் நடராஜனின் நடனக் கோலத்தை யாத்ரிகா நன்கு அபிநயித்து ரசிகர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

'கல்கி' அவர்களின் 'மாலைப் பொழுதினிலே' (ராகமாலிகை) பாடலில் 'நீலக்கடல் அலைபோல் நெஞ்சம் பொங்கிட', 'புள்ளிமயில் வீரன் புன்னகை புரிந்தான்' என்னும் இடங்களில் சிறந்த முகபாவங்களுடன் ஆடியது மனதுக்கு இதம். சி.வி. சந்திரசேகர் அவர்களின் ஹம்சராகத் தில்லானாவுக்கு துரிதநடையில துளியும் அசராமல் ஆடி அசத்தியவிதம் ஜோர்.

குரு மைதிலிகுமார் அவர்களின் நடனம் கற்பிக்கும் திறமையில் மாணவியின் திறமை பளிச்சிடுகிறது. சங்கீதம், பரதம் போன்ற நுண்கலைகளில் தேர்ச்சி பெற குரு, மாணவியின் உழைப்பு, பக்தி, ஆர்வம், தன்னம்பிக்கை ஆகியவை ஒன்று சேர்ந்தால் மதமோ, மொழியோ, தேசமோ எதுவுமே தடையில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோரின் இசையில் நிகழ்ச்சி பரிமளித்தது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com