நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
செப்டம்பர் 16, 2007 அன்று சன்னிவேல் நந்தலாலா அறக்கட்டளையின் சார்பில் நான்கு இளையோரின் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்கள் திருமதி அனுராதா ஸ்ரீதர் இயக்கும் 'மும்மூர்த்தி இசை மையத்தின்' மாணவ, மாணவியர் ஆவர். திருமதி அனுராதா, வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கச்சேரியில் பங்கு கொண்ட நால்வரும் க்ளீவ்லாண்டில் அண்மையில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர்.

அறக்கட்டளையின் நிர்வாகி காயத்ரி சுந்தரேசன் பங்குபெறப் போகும் சிறுவர் சிறுமியரை முதலில் அறிமுகப்படுத்தி, 'நந்தலாலா' நிறுவனத்தின் 28 ஆண்டுகால சமூகப் பணிகளை விளக்கிக் கூறினார்.

மனீஷ் ராகவனின் தனி வயலின் கச்சேரி, பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் ராகமாலிகை வர்ணத்துடன் துவங்கியது. அடுத்து 'சபாபதிக்கு' (ஆபோகி) கீர்த்தனையை வாசித்தார். கீர்த்தனைகளைக் கையாண்ட விதத்தில் மனீஷ் ராகவனின் திறமையையும், நிரவல் ஸ்வரங்களில் அவரது தனித் தன்மையையும் காண முடிந்தது. 'தெலிஸிராம' (பூர்ண சந்திரிகா) கீர்த்தனையுடன் நிறைவு செய்தார். விக்னேஷ் வெங்கட்ராமன் மிருதங்கம் வாசித்தார்.

அடுத்து ஹரிணி ஜெகந்நாதன் பாடினார். 'சங்கரி நீவே' (பேகடா) கீர்த்தனையுடன் தொடங்கினார் ஹரிணி. அடுத்து எடுத்துக் கொண்ட வாசஸ்பதி ராக ஆலாபனையில் ஸ்வரங்களைக் கையாண்ட விதத்திலும் அவரது ஆழ்ந்த பயிற்சி தென்பட்டது. 'அன்னபூர்ணே' (சாமா) தீட்சிதர் கிருதி கேட்க உருக்கமாக இருந்தது. லால்குடி ஜெய ராமனின் விஸ்வ சிவ ரஞ்சனி ராக தில்லானாவுடன் ஹரிணி குறுங்கச்சேரியை நிறைவு செய்தார்.

வயலின் வாசித்த சிறுமி ஜெயஸ்ரீ பாடகியுடன் இணைந்து கீர்த்தனைகளைக் கையாண்டது குறிப்பிடத்தக்கது. மிருதங்கம் வாசித்த விக்னேஷ், சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமனிடம் பயின்று வருகிறார். தாளக்கட்டுக் கோப்புடன் இவர் பாடகிக்கு அனுசரணையாக வாசித்து சபையோரின் பாராட்டைப் பெற்றார்.

நந்தலாலா நிறுவனம் இளைஞர்களின் கலைத்திறமை நமக்கு அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல சேவையாகும்.

இந்த அமைப்பின் பணிகளில் பங்கு பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள:

தொலைபேசி 408.720.8437
மின்னஞ்சல்:nandalalam@yahoo.com

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com