'மனசாட்சி உறங்கும் போது, மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பி விடுகிறது'
திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான் என்று சொன்னவர் ஜீவா. அதன்பின் தான், கம்யூனிஸ்ட்டுகள் பலரிடம் திருக்குறள் புத்தகம் இருந்தது, தமிழுக்கு, கம்யூனிஸ்ட்டுகளால் புதிய பெருமை கிடைத்ததற்குக் காரணம், ஜீவா தான். சிறந்த தமிழனாக உருவாக்கிக் கொள்ளாமல், சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் கொள்ள முடியாது என்பது ஜீவாவின் கருத்து.

ஜெயகாந்தன்

******


இன்றைய சினிமாவில், தமிழ்ச்செல்வி என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணிடம், தமிழ்ப் பெண்ணுக்கான ஆடையைப் பார்க்க முடியவில்லை. அள்ளிக் கொடுத்த வள்ளல் பாரியின் மகள்கள் சங்கவை, அங்கவை. அப்பெயர்களை ஒரு தமிழ்ப் படத்தில் எவ்வளவு சீரழித்திருக் கிறார்கள்!

நெல்லை கண்ணன்

******


ராமபிரான் வாழ்க்கையில் பல அதிசயிக்கத் தக்க விஷயங்கள் நடந்துள்ளன. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக ராமர் கற்பனையான பாத்திரம் என்று கூறிவிட முடியாது. மதத் தலைவர்கள் பலரது வாழ்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந் துள்ளன. அவற்றையெல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 'வாழும் கலை' நிறுவனர்

******


நான் பாட்டெழுத வந்த காலம் - திரையுலகில் சுதந்திரப் போராட்டத்தின் சூடு குறைந்துபோன காலம்; பொதுவுடைமைச் சித்தாந்தம் வெளிநடப்புச் செய்த காலம்; திராவிட இயக்கத்தின் தீவிரம் தீர்ந்து போன காலம்; வீரியத் தமிழ் பேசும் இதிகாசப் படங்கள் சரிந்து போன காலம்; அண்ணன்-தங்கை, அன்னை-பிள்ளை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை உள்ளடக்கம் கொள்ளலாம் என்றால் கூட்டுகு குடும்பங்கள் கலைந்து வந்த காலம். என்கையில் திணிக்கப்பட்டதும், என் பேனாவில் நிரப்பப்பட்டதும் காதல், காதல், காதல். அதுவும் நுகர்வுக் கலாசாரத்தில் நொறுங்கிப் போன காதல்.

கவிஞர் வைரமுத்து

******


சென்னையைப் பொறுத்தவரை மக்கள் அச்சமின்றி வாழமுடியவில்லை. தினசரி ஐந்து கொலைகள் நடக்கின்றன. தலை ஒரு இடம், முண்டம் ஒரு இடம் என்று கொலை நடக்கிறது. காவல் துறையில் அரசியல் தலையீடுதான் இதற்குக் காரணம்.

டாக்டர் ராமதாஸ்

******


டாக்டருக்கு அடிக்கடி செலக்டிவ் அம்னீஷியா வந்து விடுகிறது. ராமதாசின் அறிக்கையைப் பார்த்தபோது கலைஞருடைய ஒரு வசனம்தான் நினைவிற்கு வருகிறது. 'மனசாட்சி உறங்கும் போது, மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பி விடுகிறது' என்பதே அது.

கி. வீரமணி

******


எப்போதுமே முதலில் பேட்டிங் செய்யவே நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் பேட்டிங்தான் நமது பலம். முதலில் பேட்டிங் செய்து மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க விரும்புகிறேன்.

கிரிக்கெட் அணித்தலைவர் டோனி

******


மக்கள் நம்பிக்கையைப் பெற்று மக்கள் ஆதரவுடன் 2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன். காமராஜர் ஆட்சியை அமைப்பேன்.

சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்

அரவிந்த்

© TamilOnline.com