வந்தது நவராத்திரி
புரட்டாசி வந்தால் எங்கள் வீட்டு ஆண்களுக்கெல்லாம் பயம் வந்துவிடும். பொம்மைப் பெட்டிகளை யார் பரண் மீதிருந்து கீழே இறக்குவது! 'யார்தான் இந்த நவராத்திரியைக் கண்டுபிடித்தார்களோ' என்று திட்டிக் கொண்டிருப்பார்கள்.

'சாஸ்திரத்துக்கு மூன்று படி வைத்தால் போதும். ரொம்பவும் இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டாம்' முன் ஜாக்கிரதையாக அப்பா சொல்லிவிடுவார்.

'ரொம்ப நன்னாருக்கு. பண்டிகையைக் குறைவில்லாம செஞ்சாத்தான் குடும்பம் முன்னுக்குவரும். சும்மா சும்மா இப்படிச் சொல்லாதீங்கோ' என்று அம்மா பொரிந்து தள்ளிவிடுவாள்.

படிக்கட்டுக்கள் மரத்தால் ஆனவை. மொத்தம் 13 படிக்கட்டுகள். ஒற்றைப்படையில் வரவேண்டும் என்பாள் அம்மா. ஆறுமுகம் ஆசாரியை அழைத்து வந்து அருகில் இருந்து பார்த்துச் செய்த படிகள்.

பரண் மீதிருந்த மொத்த பொம்மைகளையும் சர்வ ஜாக்கிரதையாக ஒன்று ஒன்றாகக் கீழே வைப்போம். பயத்துடன். ஏனென்றால் ஒரு வருடமாக பொம்மைப் பெட்டிக்குள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் எலிகள் அத்தனைக் கும் அன்று கதிகலங்கிவிடும்.

இப்படித்தான் என் அண்ணா ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து பொம்கைளை எடுத்துக் கொண்டிருக்கையில், ஓர் எலி திடீரென்று அவன் கையில் மேல் விழுந்து பிறாண்டிக் கொண்டு போனது. அப்படியே பொத்தென்று செட்டியார் பொம்மையைக் கீழே போட்டு விட்டான்.

'காஞ்சிபுரம் கருடசேவையில் வாங்கிண்டு வந்த செட்டியார் பொம்மையை உடைச்சிட்டயே...' அம்மா புலம்பினாள்.

கூடத்தில் கிழக்குப் பார்த்து படிக்கட்டுகளை பொருத்தி வைத்தோம். இரண்டு பக்கமும் கீழே இறங்கிவிடாமல் இருப்பதற்கு கட்டைகளை முட்டுக்கொடுத்து வைத்தோம். அப்பாடா... ஒருவழியாகப் படிக்கட்டுகளை வைத்தாயிற்று.

எங்கள் அழுக்கு வேஷ்டிகளை லாண்டரிக்கு போட்டு வெளுக்க வைக்க மனசு வராத எங்கள் வீட்டுப் பெண்கள் கொலுப் படிக்கட்டுக்கு மட்டும் வெளுப்பாக வேஷ்டியை லாண்டரிக்குப் போட்டு எடுத்து வைத்திருப்பார்கள். அந்தப் பத்து நாட்களும் எங்கள் வெள்ளை வேஷ்டிகளைக் கொலுப்படி அணிந்திருக்கும்.

கலசம் வைத்துவிட்டு நவராத்திரி கொலு வைப்பது வீட்டு வழக்கம். வெள்ளிச் சொம்பின் மேல் கொஞ்சம் மாவிலை, அதற்குள் பூஜை செய்த நீர். தேங்காயைக் கலசத்தின் மேல் வைத்து முதல் படிக்கட்டின் நடுவில் அம்மா வைத்தாள். முதல் படியில் புல்லாங்குழல் கண்ணன், ராமர் பட்டாபி ஷேகம், சிவன், பார்வதி தம்பதியினர் என்று பெரிய தெய்வங்கள் இடம் பிடித்திருப்பர்.

இரண்டாம் வரிசையில் தசாவதார பொம்மைகள், முருகன் கோபித்துக்கொண்டு பழனி சென்ற கோலம், அஷ்டலட்சுமிகள் என்று இருக்கும். தசாவதார பொம்மைகள் வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். மச்சம், வராகம் என்று ஆரம்பிப்பார்கள். நடுவில் ஏதோ ஒரு அவதாரம் மாறிப்போய்விடும். அப்பா வந்து வரிசைப்படுத்த உதவுவார். வருடா வருடம் இந்தக் குழப்பம் வரும். அவருக்கும் திடீரென்று சந்தேகம் வந்துவிடும். போய்ப் பஞ்சாங்கத்தை எடுத்துக்கொண்டு வருவார். அதற்குள் ஆளாளுக்கு அவதாரங் களை மாற்றி மாற்றி வைத்துவிடுவோம். ஒருவழியாகப் பஞ்சாங்கத்தைப் பார்த்து அப்பா கூறுவார். அவதாரங்கள் அவரவர் இடத்தில் சரியாக வந்து அமர்வார்கள்.

அடுத்த இரண்டு மூன்று வரிசைகளில் தெய்வங்கள்தான் இடம்பிடித்திருப்பர். ஆறாவது வரிசையிலிருந்து மான், குரங்கு, புலி, கரடி என்று விலங்குகள் 3 வரிசையில் அமர்ந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் ஏதாவது புது பொம்மை வந்துவிடும். இந்த வருடம் கைகொட்டிச் சிரிக்கும் இரண்டு குழந்தைகள். சாவி கொடுத்தால் போதும் இரண்டும் சண்டையிட்டுக் கொண்டு விளையாடும். கடைசியில் ஒன்று இன்னொன்றைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கும். என் இரண்டாவது அண்ணா ஜப்பான் சென்றபோது வாங்கி வந்தது.

கண்டிப்பாக ஒரு பூங்கா இருக்கும். அதன் எதிர் வரிசையில் கோயில் கோபுரம் இருக்கும். அழகாகக் கல்லால் நாங்கள் மலை ஒன்றை அமைத்து இருப்போம். ஏறுவதற்குப் படிக்கட்டுகள் அமைத்திருப்போம். மலையின் மேல் வரிசையாக மனிதர்களும், வண்டிகளும் செல்வது அழகாக இருக்கும். மலைக்கு அருகில் அழகான சின்ன பொற்றாமரைக் குளம். அதில் தண்ணீர் நிறைந்து காணப்படும். மீன்கள் (பொம்மை மீன்தான்) குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும். பார்க்கில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரத்தில் உள்ள பெஞ்சுகளில் பெரியவர்கள், பெண்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கொலுவை வைத்து முடிப்பதற்குள் எங்களுக்கு அப்பாடி என்றாகி விடும். நாங்கள் வைப்பது சரியா என்று அம்மா பார்த்துக்கொண்டிருப்பாள்.

அதற்கு அப்புறம்தான் அம்மாவுக்கு வேலை தொடங்கும். 9 நாட்களுக்குப் பரபரவென்று சுழலுவாள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com