கலி·போர்னியா பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் - பத்தாண்டு நிறைவு விழா
பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் பத்தாண்டுகளாக தமிழைக் கற்பித்தும், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்தும் தொண்டு செய்து வருகிறது. பத்தாண்டு நிறைவு விழாவை தமிழ்ப் பீடத்துடன் இணைந்து சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம், கலி·போர்னியா தமிழ்க் கழகம், தென்றல், வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை, தமிழ் நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கொண்டாட முடிவு செய்து இருக்கின்றன. இவ்விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இணையத்தின் வழியாக தொலைக்காட்சி மூலம் கலந்து கொள்ள இசைந்துள்ளார். இதை ஒட்டி முதல்வர் அவர்களின் தமிழ்த் தொண்டை பாராட்டும் வகையில் அவர் எழுதிய “குறளோவியம்”, “தொல்காப்பியம்”, “சங்கத் தமிழ்”, மற்றும் செந்தமிழ் பற்றிய கட்டுரைகளை ஒரு சிறப்புத் தொகுப்பாக பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் வெளியிட உள்ளது. அக்டோபர் மாதம் நடக்கவிருந்த இவ்விழா தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த விழா நடக்கவிருக்கும் இடம், தேதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழ்ப் பீடத்தின் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் புறநானூறு பாடல்களை முன்பே ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளார். தற்போது அகநானூறு பாடல்களை மொழிபெயர்க்கும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார். விழா அமைப்புக் குழுவிற்கு அவர் எழுதிய ஒரு மின்னஞ்சலில் “தமிழகத்திற்கு வெளியே தமிழின் மிகச் சிறந்த தொல் இலக்கியப் படைப்புகளைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்திருப்பதைப் பற்றி ஆச்சரியப் படுகிறேன்” என்று வருந்துகிறார். “சமிஸ்கிருத இலக்கியம் மேற்கத்திய நாடுகளில் மிக விரிவாக ஆராயப் பட்டு இருக்கிறது. சமிஸ்கிருதம் பற்றிய கட்டுரைகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, ருஷ்யன் போன்ற பல மொழிகளிலும் படைக்கப் பட்டுள்ளன. மகாபாரத ஆய்வு போன்ற சில மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் மேற் கத்தியர்களும், இந்தியர்களும் இணைந்து படைத்தவை. இந்தியர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இன்றும் கூட சமிஸ்கிருதத்தை மிக ஆர்வத்துடன் படிப்பதற்கு மேற்கத்திய அறிஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. மற்ற தெற்கு ஆசிய மொழிகள் முக்கியமானவையாகக் கருதப் படுவதில்லை.”

ஆனால் தமிழின் நிலமை முற்றிலும் மாறுபட்டது. தமிழைப் பற்றிய ஆராய்ச்சி 99 சதவிகிதம் தமிழர்களால், தமிழிலேயே செய்யப் படுகிறது. இவை மிகச் சிறந்த முதல் தரமான ஆய்வுகள் - சமிஸ்கிருதத்தில் செய்யப் பட்டிருக்கும் ஆய்வுகளுக்கு நிகரானவை. தமிழர்களால் செய்யப் பட்ட ஆய்வுகள் என்பதால் தமிழகத்திற்கு வெளியே அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் போய்விட்டது. தமிழகத்திலும் இந்த விவரங்கள் பரவுவது குறைய ஆரம்பித் திருக்கிறது. ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்தில் ‘புறநானூறு இப்போது ஆங்கிலத்தில் வெளியாகி இருப்பதால் அதைப் படித்து புரிந்து கொள்ளலாம்’ என்று எழுதி இருந்தனர்! ஆங்கிலம் தெரிந்தவர்கள் எத்தனை பேர் சாஸர் போன்றவர்களின் படைப்புகளை ஹிந்தியிலோ, தெலுங்கிலோ படிக்கப் போகிறார்கள்? தமிழ் ஆராய்ச்சியை தமிழர்களே தமிழில் செய்து வருவதால் தமிழின் பெருமை உலகத்தின் கண்களுக்குத் தெரியவில்லை. மேல் நாட்டவர்களுக்கு மொழிப் பயிற்சி கொடுத்து தமிழைக் கற்பிப்பதின் மூலம் அதன் இலக்கியத்தை பரவலாக அறியச் செய்யலாம். மேற்கத்திய அறிஞர் ஒருவரைத் தயார் செய்தால் கூட அவர் வேலைக்குப் போகும்போது பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். என்னுடைய மாணவர் ஒருவர் இந்தியாவின் தொண்மையான இலக்கியக்கியங்களைப் பற்றி போதிக்கும் ஆசிரியராக இருக்கிறார். அவர் முழுக்க முழுக்க உபயோகிப்பது தமிழ் இலக்கியங்கள்தான்!”

"தமிழ்ப் பீடம் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறது. அந்த முயற்சிக்கு நாம் மேலும் பணம் சேர்த்தால் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழின் நிலைமையை மேலும் வலுப் படுத்த முடியும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் மூழ்கியிருந்த பேராசிரியர் A.K. ராமானுஜன் அவர்கள் தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கியவுடன் அதில் மயங்கி தனது வாழ்நாளை தமிழ் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டார். அவர் நூற்றுக் கணக்கான மேற்கத்திய அறிஞர்களுக்கு முன்னால் ஒரு மணி நேரம் பேசினால் போதும், அவர்களில் பாதி பேர் தமிழைக் கற்றுக் கொள்ளத் தயாராகி விடுவார்கள். தமிழின் பெருமையை உலகம் அறிய வேண்டும் என்றால் நாம் மேலும் பல A.K. ராமானுஜன்களைப் உருவாக்க வேண்டும். மேற்கத்தியர்களுக்குத் தமிழ் இலக்கியத்தை சுலபமாகக் கிடைக்க வைப்பதின் மூலம் இதை சாதிக்க முடியும். பல்கலைக் கழகங்கள் தமிழ் மொழியையும், அதன் சிறந்த பாரம்பரியத் தையும் கற்பிப்பதற்குத் தேவையான பண வசதியை ஏற்பாடு செய்து தரவேண்டும்.”

பேராசியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் தமிழ் ஆர்வத்தையும், அதன் சிறப்பான இலக்கியங் களை அனைவரும் கற்று அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டலையும் நம் அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்ப் பீடத்தின் பத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, அல்லது பெர்க்கலியில் தமிழ் கற்பிப்பதை வலுப்படுத்த நிதி திரட்டும் முயற்சியில் உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட

மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்:

Dr. M.N. தமிழன்:manny.tamilan@sbcglobal.net
Dr. பாலா பாலகிருஷ்ணன்:bala_mcat@yahoo.com

© TamilOnline.com