தேசிய விருது பெற்ற ஸ்வேதா 'குட்டி'
ஸ்ருதிகா பவுண்டேஷன் பிலிம்ஸ் வித்தியாசமான முறையில் குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சனையை வைத்துத் தயாரிக்கும் படம் 'குட்டி'. 'மல்லி' குறும்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற சிறுமி ஸ்வேதா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

பானை செய்யும் தொழிலாளி பாவாடையாக நாசர் நடித்திருக்கிறார். பாவாடை தன்னுடைய மகள் கண்ணம்மாவைப் படிக்க வைத்து மிகப் பெரிய ஆளாக்கிட வேண்டுமென்று கனவு காண்கிறான். திடீரென்று ஒரு விபத்தில் பாவாடை இறந்து விடுகிறான். அவனுடைய குடும்பத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. பாவாடையின் மனைவி செந்தாமரை (ஈஸ்வரி ராவ்) சென்னையில் இருக்கும் ரங்கநாதன் (ரமேஷ் அரவிந்த்), ரோகிணி (கெளசல்யா) தம்பதியினரின் வீட்டிற்குக் கண்ணம்மாவை மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புகிறாள்.

கண்ணம்மாவின் குழந்தமையை அந்த வீடு மெல்லக் கடித்துத் தின்கிறது. ருசியான சாப்பாடு கண்ணம்மாவுக்குக் கனவாககயிருக்கிறது. அந்த வீட்டிலிருக்கும் பாட்டியொருத்தி (எம்.என்.ராஜம்) தினமும் கொடுமைப்படுத்துகிறாள் குட்டியை. கொடுமை தாங்காமல் திரும்பவும் தன்னுடைய கிராமத்துக்கு ஓடிவிட நினைக்கிறாள் குட்டி.

வழக்கமாகச் செல்லும் கடைக்காரரிடம் (விவேக்) சென்று தன்னுடைய சோகத்தைக் குட்டி சொல்லியழுது தன்னுடைய தாய்க்குக் கடிதமொன்று எழுதித் தரக் கேட்கிறாள். கடைக்காரர் வீட்டு முகவரி கேட்க, 'மரம் இருக்கும்... பெரிய ஏரி இருக்கும்.....' என்று அப்பாவியாய்ப் பதில் சொல்கிறாள். அவளுடைய அப்பாவித்தனத்தைப் பார்த்த கடைக்காரரின் கண்கள் கலங்குகின்றன.

சிவசங்கரியின் 'குட்டி' கதைக்குத் திரைக் கதை, வசனத்தை இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான ரமேஷ், அருணாச்சலம் இருவரும் எழுதியிருக்கின்றனர். ஜானகி விஸ்வநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்ததோடு சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஜானகி விஸ்வநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்ததோடு சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். மு. மேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். 'பூ அரும்புது'..., 'தங்கச்சி...', 'சின்ன ராணி...' போன்ற முத்தான் மூன்று பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

படத்தொகுப்பு : ஏ.ஸ்ரீகர் பிரசாத்.
கலை : பி. கிருஷ்ணமூர்த்தி.
ஒளி ஓவியம் : தங்கர்பச்சான்.

இந்தப் படத்தின் இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகக் சிறந்த சமூகப் படமாகத் தயாராகும் 'குட்டி' விரைவில் பவனி வரப்போகிறது.

தமிழ்மகன்

© TamilOnline.com