கீதாபென்னெட் பக்கம்
தென்றல் பத்திரிகையிலிருந்து அதன் வழவழப்பான பக்கம் ஒன்றை எனக்கே எனக்குக் கொடுத்து இதழ்தோறும் ஒரு பக்கம் எழுதுங்கள் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் ஒரு சிலரையாவது ஒரு சில சமயங்களிலாவது யோசிக்க வைக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது.

என்னை நேரில் பார்க்கும் சிலர் மண்டையைத் தொட்டுக் காட்டி, ''இதோ இங்கே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. எனக்கும் எழுதணும்னு ஆசை. எப்படி எழுதறதுன்னு தான் தெரியலை...'' என்பார்கள். சிலர் மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு ''உன் கதையை படிக்கிறேன். அவற்றை படிக்கும் போது எழுதுவது ரொம்ப சுலபமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நான் கூட எழுதப் போகிறேன்....'' என்பார்கள். ஆனால் அவர்கள் கொடுப்பது எனக்குப் பெரிய காம்ப்ளிமெண்ட் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதாவது படிக்கிறவர்களுக்குப் புரிகிற விதத்தில் எளிமையான நடையில் எழுதுவதால் தான் நிறையப் பேரைப் போய்ச் சேருகிறது என்பது தானே உண்மை!

என்னுடைய அனுபவத்தில் கற்றுக் கொண்ட சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் எழுத ஆரம்பித்த சமயத்தில் சமீபத்தில் மறைந்து போன எழுத்தாளர் சாவி எனக்கு கொடுத்த அட்வைஸ். ''எழுதிவிட்டு உடனடியாக அதைப் பத்திரிகைக்கு அனுப்பாதே. அதை ஒரு வாரத்திற்காவது கண் மறைவாக எடுத்து வை. அதற்குப் பிறகு ஒரு வாசகனாக மூன்றாம் மனுஷன் போல் அதைப் படித்துப் பார். அப்போதுதான் உன்னுடைய எழுத்தில் உள்ள குறை, நிறை புரியும்!'' என்பார்.

மதிப்பிற்குரிய திரு. சுஜாதா ஒருமுறை ஒரு தமிழ்ப் பத்திரிகையில் இதைப் பற்றி அவருக்கே உரிய நகைச்சுவையுடன் சுவாரசியமாக எழுதியிருந்தார். ஒரு பத்திரிகைக்கு ஆயிரக்கணக்கில் கதைகள் வரும். அதனால் முதல் வரியை ''வாசலில், சார் போஸ்ட்....'' என்ற குரல் கேட்டவுடன்... என்பது போல ஆரம்பித்து எழுதாதீர்கள். ''அவன் நடந்தான். காலால் இல்லை. தலையால்! என்று ஆரம்பித்தீர்களானால் அதைப் படித்துப் பார்க்கும் ஆசிரியரை நிச்சயம் நிமிர வைக்கும். கதையை மேலே படிக்கத் தூண்டும் என்பது போல சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

என்னுயிர் அப்பா டாக்டர் எஸ். இராமநாதன் சங்கீதத்திற்கும் சரி, கதைகள் எழுதுவதற்கும் சரி, அடிக்கடி சொல்லுவது - இன்புட் (Input) இருந்தால் தான் அவுட்புட் (Output) கிடைக்கும். அதனால் நிறைய சங்கீதம் கேட்க வேண்டும். நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பார்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். எழுதுங்கள்!! பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு அல்லது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து எழுத ஆரம்பியுங்கள், முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். எந்தப் பத்திரிகைக்கு அனுப்ப ஆசைப்படுகிறீர்களோ அதன் பல இதழ்களைப் படியுங்கள். எந்த மாதிரி கதை கட்டுரைகளை அவர்கள் பிரசுரிக்கிறார்கள் என்பது புரியும். பாதி வெற்றி, பத்திரிகையைப் புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி அனுப்புவது என்பது என்னுடைய சொந்த அனுபவம்.

நான் எப்படி எழுத ஆரம்பித்தேன்? எனக்கு யார் இன்ஸ்பிரஷேன்? கதைகளுக்கு கரு எங்கிருந்து கிடைக்கிறது? என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன. அதைப் பற்றி பின்னொரு நாள் எழுதுகிறேன்.

எழுபதுகளின் கடைசியில் எழுத ஆரம்பித்த புதிதில் நிறையப் பேர் என்னைப் பார்க்கும் போது 'உங்கள் கதைகளை விரும்பி படிப்பேன், மேடம்' என்பார்கள். தொண்ணூறு ஆரம்பங்களில் தன்னுடைய அம்மா, அத்தை அல்லது மாமா படிப்பதாகச் சொன்னார்கள். இந்தப் புதிய நூற்றாண்டில் ''என் பாட்டிக்கு உங்கள் கதைன்னா ரொம்பப் பிடிக்கும் மேடம்'' என்கிறார்கள். நான் இன்னும் அதே வயதில் இருக்கிறேன்! என் வாசகர்களுக்கு மட்டும் இவ்வளவு வேகமாக வருடங்கள் ஓடுகின்றன! இது எப்படி?

போன இதழில் அப்யூஸ் பற்றி எழுதினேன் இல்லையா? அதே சமயத்தில் டைம்ஸ் ஆ·ப் இன்டியா பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ரோலி ஸ்ரீவத்ஸவா என்பவர் அமெரிக்காவில் இருக்கும் இந்தியக் குடும்பங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தென் ஆசியப் பெண்களிடமிருந்து உதவி கேட்டு சப்போர்ட் குரூப்புகளுக்கு முன்பெல்லாம் வருடத்துக்கு 120லிருந்து 150 தொலைபேசியில் உதவி கேட்டு வரும் என்றால் இப்போது ஆயிரத்து ஐந்நூறுக்கு மேல் வருகிறது என்று அமெரிக்க புள்ளிவிவரப்படி தெரிய வருகிறதாம்.

என்னைப் போல நீங்களும் அரைமணி நேர அமெரிக்க சிட்காம் பார்ப்பவர்களா? அப்படியானால் ஏபிஸி நெட்வொர்க்கில் வரும் தர்மா அன்ட் க்ரெக் நிகழ்ச்சியில் தர்மாவின் வீட்டுக் கதவின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் படத்தைக் கவனித்திருக்கிறீர்களா?

கீதா பென்னெட், geethabennet@worldnet.att.net

© TamilOnline.com