அறிவொளி-[செப்டம்பர் 09 - உலக எழுத்தறிவு தினம்]
இணையம், மின் - வணிகம், தொலைதூர மருத்துவம் என்று உலகம் படுவேகமாகப் போய்க் கொண்டிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்க, வெறும் 5000 ரூபாய் கடனுக்காகத் தன் வாழ்க்கையையே கொத்தடிமை வேலையில் இழக்கும் நிலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும், கண்கூடாகத் தெரியக் கூடியவை தான். பாலியல் வன்கொடுமைகள், இனப்பிரிவு, சாதிச் சச்சரவுகள் தொடர்வதற்கு கல்வியின்மை ஒரு மிகப் பெரிய காரணி.

சமூக வளர்ச்சி ஏற்பட புதிய கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் புதிய வாழ்க்கையை நோக்கி முன் நகர்த்துகிறது. நம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் புரிந்து கொள்வதில் மனிதர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அத்துடன் தாம் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தவும் செய்கின்றனர். இவற்றின் தொடர் வளர்ச்சி கல்விச் செயற்பாடு மூலம் துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆனால், இங்கே கல்வி ஒரு தரப்பினருக்கு மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆழ்மனதில் ஊறிப் போயுள்ள அதிகார மனோபாவத்தைச் செயல்படுத்த முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம், உணரப்படாமலே பலரது செயல்களில் தொனிக்கிறது.

கல்வியின் முதல்படி எழுத்தறிவு, ஐக்கிய நாடுகள் சபை, எழுத்தறிவைப் பரப்புவதற்கு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியை 'உலக எழுத்தறிவு தினமாக' அறிவித்துள்ளது.

குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் மக்களிடையே எழுத்தறிவின்னை ஒரு பெரும் பிரச்சனையாகவே நிலவுகிறது. எழுத்தறிவு ஊட்டும் வகையில் பல்வேறு இயக்கங்கள் கூட இங்கே தோன்றிச் செயல்பட்டு வருகின்றன.

பொதுவில் எழுத்தின் வரலாற்றைப் பார்க்கப் போனால், முதலில் மனிதன் தன் உணர்வுகளைக் கையசைவு மூலம் வெளிப்படுத்தினான். பின் மிருகங்களைப் பார்த்து ஒலி மூலம் வெளிப்படுத்தக் கற்றுக் கொண்டான். பின் குகைகளில் ஆடு, மாடு போன்றவற்றின் சித்திரங்களை வரையத் துவங்கினான். பின்னர் அது எழுத்து வடிவங்களாயிற்று. மொழியின் அடுத்தகட்ட வளர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். பனை ஓலைகளிலும், மரக்கட்டைகளிலும் எழுத்துக்களைப் பதிவு செய்யும் முறை தொடங்கி இன்று அச்சுக்கலை வரை எழுத்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பதிவு செய்யும் கருவியாக எழுத்தின் பரிணாமமான மொழி, இலக்கியம், உருவாக வழி வகுக்கிறது. குறிப்பிட்ட சாரார் எழுத்தறிவிலிருந்து விலக்கப்படுவதும், இங்கு நடைபெறுகிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் சமூகத்தின் கடைசிப் பிரிவினரான சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வியுரிமை வழங்கக்கூடாது என மனுதர்மத்தில் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரிவினை வழக்கத்திலிருந்ததால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்து போயின. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது தங்கள் மதத்தைப் பரப்பக் கல்வி மருத்துவம் போன்ற விஷயங்களைக் கீழ்தட்டு மக்களுக்கு அளிக்க முன் வந்தார்கள். அவர்கள் முயற்சியாலும் பெண் கல்வி ஓரளவு சாத்தியமாயிற்று.

ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மெக்காலலே கல்வித் திட்டம், மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையைத்தான் ஊக்கப்படுத்தியது. பின் வந்த இந்திய அரசு இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்தி சரிவைச் சமன்படுத்த முயன்றது. எனினும் இன்று வரை எழுத்தறிவு எல்லாத் தரப்பினருக்கும் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை.

காலங்காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டும், வறுமையில் உழன்று கொண்டுமிருக்கும் கீழ்த்தட்டு மக்களின் அறிதல் விஷயத்தின் தேவையையோ, முக்கியத்துவத்தையோ அறியாமல் போனதில் அதிசயமில்லை.

தமிழகத்தில் இயங்கிய 'அறிவொளி' இயக்கத்தினர் ஊக்கத்துடனும் கடுமையான உழைப்புடனும் எழுத்தறிவைப் பரப்ப முயன்றார்கள். வேலைக்குப் போகும் மொத்த நபர்களுக்கேற்ற குடும்ப வருமானம் கூடும் என்ற கணக்கில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் வசதிக்காக மாலை நேரங்களில் வகுப்புகள் எடுப்பது போன்ற மாற்று ஏற்பாடுகளையும் செய்தார்கள். இளமையில் கற்க முடியாமல் போனவர்களுக்காக முதியோர் கல்வியும் தொடங்கப்பட்டது.

எழுத்தறிவு எல்லாத் தரப்பினருக்கும் போய்ச் சேராமல் இருப்பதற்கு மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது. அமெரிக்க அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்புக்காகச் செலவிடும் தொகை ஒரு லட்சம் கோடி டாலர். இதில் 20 சதவிகிதம் செலவிட்டாலே உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு அடிப்படை கல்வியறிவு கொடுத்து விட முடியும் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அன்றாடங் காய்ச்சிகளாக வறுமைக்கு எதிராக ஓயாமல் போராடும் மக்கள் இருக்க அணு ஆயுதங்கள் தேவை தானா? மக்கள் நலனுக்காக அந்தத் தொகையை செலவழிப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்குமா?

மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமையும் ஒன்று. ஆனாலும் கல்விச் செயற்பாட்டுக்கான முதற்படியான எழுத்தறிவு எத்தனை மனிதர்களுக்கு உள்ளது என்பது தான் இங்கு பிரச்சனை.

எழுத்தறிவு பெற்ற மக்களே ஜனநாயகச் செயற்பாட்டின் சிறந்த ஊக்கிகளாகச் செயற்பட முடியும். சமூக அக்கறையுள்ள மனிதர்களாக வாழ முடியும். போராட முடியும்.

கிருஷ்ணப்ரியா

© TamilOnline.com