அறிவியல் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் பி.கிரீன்
தமிழில் அறிவியலை பயிற்றுவிக்கும் முயற்சியில் முழு மூச்சோடு ஈடுபட்டு, தேவையான கலைச்சொற்களை உருவாக்கவும் அதற்கான நெறிமுறைகளை வகுக்கவும் ஆர்வமுடன் செயற்பட்டவர் டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிரீன்.

கிரீன் அமெரிக்காவில் மசச்சூ சர்ஸ் மாநிலத்தில் வூஸ்டரிலுள்ள 'கிரீன்ஹில்' என்னுமிடத்தில் 1822 அக்டோபம் 22ந் தேதி பிறந்தார். தனது பதினேழாவது வயதிலேயே சமயாசாரமுள்ளவராக வாழத் தொடங்கினார். ஆத்மீகத் துறையிலேயே நாட்டம் கொண்டு, ஆத்மீக உணர்வு மேலிட தனது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக்க தனக்குள் உறுதி பூண்டிருந்தார்.

கிரீன் தனது பத்தொன்பதாவது வயதிலே நியூயார்க்கிலிருந்த, டாக்டர் வேர்கன் அவர்களிடம் எழுதுவினைஞராக சேர்ந்து கடமையாற்றத் தொடங்குகிறார். அதே நேரம் மருத்துவத் துறையில் ஆர்வம் கொண்டு மருத்துவ நூல்களை வாசிப்பதனை தனது ஆர்வமாகக் கொண்டார். தொடர்ந்து முழுநேர மருத்துவக் கல்வியை மேற்கொண்டார்.

மருத்துவக் கல்வியைப் படிப்பதுடன் மட்டும் நின்று கொள்ளாமல் ஜெர்மன், லத்தீன் போன்ற மொழிகளையும் கற்றுக் கொண்டார். தத்துவம், சரித்திரம், கணிதம், இலக்கியம் போன்ற பல்துறைக் கல்வியிலும் கவனம் செலுத்தினார்.

1845 மே 13ஆம் தேதி மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றார். மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். ஆயினும் தன்னை மிஷனரிப் பணிகளுடன் நெருக்கமாக்கிக் கொண்டார். கிறிஸ்தவ மத ஊழியஞ் செய்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். இருள் சூழ்ந்த நாடு ஒன்றுக்குச் சென்று மக்களின் உள்ளத்தில் ஒளியேற்றுதல் பெரும் பணியாகுமென்று கருதினார். ''நான் பயன்படக்கூடிய ஓர் இடத்துக்குச் சென்று சமயப் பணியும், மருத்துவ பணியும் செய்தல் மேலானது' என அவர் உள்ளம் ஈர்த்தது.

1847 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் ஊழியராக இலங்கை வந்த டாக்டர் கிரீன், சிறிதுகாலம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை செமினரியில் பணியாற்றினார். பின் 1848இல் மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து தமது மருத்துவ சேவையை தொடங்கினார்.

அக்காலத்தில் கிறித்துவ மதத் தொடர்பு இல்லாதவர்கள் மிஷன் வைத்தியர்களை நாடுவது குறைவாகவே இருந்தது. சுதேச வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வரும் மரவு தான் நிலவிக் கொண்டிருந்தது. ஆயினும் மூத்த தம்பி என்ற தமிழ் அறிஞருக்கு கிரீன் அறுவைச் சிகிச்சை வைத்தியம் செய்தமையால் அவர் குணமடைந்தார். இதன் பின்னரே டாக்டர் கிரீனின் புகழ் யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் டாக்டரை நாடி வரத் தொடங்கினர்.

டாக்டர் கிரீன் மருத்துவ சேவையுடன் மட்டும் நிற்காமல் மருத்துவக் கல்வியைக் கற்பிக்கவும் ஆர்வம் கொண்டார். முதலில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் (1848 - 1850) மூவரே டாக்டர் கிரீனின் ஆரம்ப வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.

இந்த ஆரம்ப வகுப்புக்குக் கற்பிப்பதன் மூலம் மருத்துவக் கல்விக்கான முறையான பாடத்திட்டத்தை வகுத்துக் கொண்டார். கிரீன் மருத்துவச் சேவை, மருத்துவம் கற்பித்தல் என்ற நிலைமைக்குள்ளும் தமிழ்மொழியைக் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார். தம்மிடம் வந்த நோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம் வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும் பயின்றார். மேலும் ஆசிரியர் ஒருவரை வைத்து முறைப்படி தமிழ் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.

இத்தகைய விடாமுயற்சியால் இலங்கைக்கு வந்து எட்டு மாதங்களுள் தமி¨¡ இலகுவாகப் பேசும் திறமை எய்தினார். தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவதில் முன்னேற்றம் கண்ட கிரீன், தமிழர்களுக்கு மேனாட்டு வைத்தியத்தை தமிழ்மொழி மூலம் கற்பிக்க ஆசைப்பட்டார். அதனை நடைமுறைப்படுத்த திட்டமிடும் முயற்சியில் இறங்கினார்.

1850களில் மேனாட்டு வைத்தியக் கல்விக்கு, குடியேற்ற நாட்டரசின் வடமாநில அதிகாரி ஆதரவு வழங்கினார். இதனால் உற்சாகம் அடைந்த கிரீன் மருத்துவக் கல்வியைக் கற்பிக்கும் முயற்சியை மேலும் வளர்த்துக் கொண்டார்.

''ஒவ்வொரு மூன்று ஆண்டுகளும் ஆறு மாணவர்களை பயிற்றினால்....? ஆம், கடவுள் எனக்கு ஆயுட் பலந்தரின், காலப்போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியம் கற்ற சுதேசிகளால் நிரப்பி விடுவேன்''.

கிரீன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டார். அத்துடன் மேனாட்டு வைத்தியம் கற்பிக்க விருப்புறுதி கொண்டார். தமிழில் கற்பிப்பதற்குக் கலைச்சொற்கள் தேவை. பாடநூல்கள் தேவை. இத்தேவைகளை நிறைசெய்வதற்கான முயற்சிகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்.

முதலில் கலைச் சொற்களை ஆக்கும் பணியை மேற்கண்ட பொழுது, ''நான் மேனாட்டு மருத்துவம் பரவுவதற்கு அஸ்திவாரமாகவும், ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகிறேன்'' என்று தமது சகோதரி ஒருவருக்கு 1850இல் எழுதினார்.

திட்டமான விதிகளுக்கு அமையக் கலைச் சொற்களை ஆக்கி, பல்வேறு நூல்களையும் மொழிப்பெயர்த்துத் தமிழில் வெளியிட வழிவகை செய்தார். நூல்கள் ஒவ்வொன்றின் பின் இணைப்பாகவும் அந்நூலுக்குரிய கலைச்சொற்களை தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என இருபிரிவாக இணைத்தார். அத்துடன் அருஞ்சொல்லகராதி, மனுஷகரணக் கலைச் சொற்கள் என இரு தனி கலைச் சொற்தொகுதிகளையும் வெளியிட்டார்.

தமிழர் யாவருக்கும் ஒருமைப்பாடான கலைச்சொற்கள் தேவை என்று குறிப்பிட்டு, தமிழக மிஷனரிமாருக்கும் தமது கலைச் சொற்களை அனுப்பி கருத்துக் கோரி அவர்தம் ஒத்துழைப்பை வேண்டி நின்றார். தொடர்ந்து டாக்டர் க்ரீனின் முயற்சிகள், மேனாட்டு மருத்துவ அறிவு தமிழில் நிலைபெற சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்தது. 1864இல் மருத்துவக் கல்வியை தமிழ்மொழி மூலம் கற்பித்தார்.

டாக்டர் கிரீன் தமது முயற்சியின் பலனாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தந்த சில அறிவியல் நூல்கள் பின்வருமாறு :

1. அங்காதிபாதம், சுகரணவாதம், உற்பாலனம் - பக். 204 (1852, 1857)
2. மவுன்சலின் 'பிரசவ வைத்தியம்' - பக். 258 (1857)
3. துருவிதரின் 'இரண வைத்தியம்' - பக். 504 (1867)
4. கிரேயின் 'அங்காதி பாதம்' - பக். 838 (1872)
5. கூப்பரின் 'வைத்தியாகரம்' - பக். 917 (1872)
6. வெல்சின் கெமிஸ்தம் - பக். 516 (1875)
7. டால்தனின் மனஷசுகரணம் - பக். 590 (1883)
8. வாஜிங்கின் 'சிகிச்சா வாகடம்' - பக். 574 (1884)


இவை எல்லாம் மருத்துவக் கல்விக்குப் பயன்படும் வகையில் ஆங்கில மூல நூல்களைத் தழுவி எழுதியும், மொழி பெயர்த்தும் வெளியிடப்பட்டவை. கிரீன் சிலவற்றை மொழி பெயர்த்தார். மற்றையவை கிரீனின் மாணவர் மொழிபெயர்க்க, கிரீன் மேற்பார்வை செய்து திருத்தி அமைத்தார்.

இவை தவிர, அறிவியல் அறிவைப் பரப்பும் வகையில், கண், காது, கை கால், தோல், வாந்திபேதி, கால உதவிக் குறிப்பு எனப் பல சிறு கைநூல்களையும் எளிய தமிழில் மக்களுக்கு ஏற்ற முறையில் எழுதி வெளியிட்டார்.

1847 இல் யாழ்ப்பாணம் வந்து அமெரிக்க மிஷின் சேவை ஆற்றிய கிரீன் 1873 வரை தமிழில் அறிவியல் தரும் முன்போடி முயற்சிக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அறிவியலை தமிழில் கற்பிக்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார்.

1873ல் அமெரிக்கா திரும்பிய கிரீன், அங்கும் தமிழ் நூல்களைத் திருத்தியும் பார்வையிட்டும் அச்சுவாகன மேற்ற வழிப்படுத்தினார். நோய்வாய்ப்பட்டிருந்த கடைசிக் காலத்தில் தமது நினைவுக்கல் எப்படி அமைதல் வேண்டுமெனவும் எழுதி வைத்தார்.

''எனக்கு ஓர் நினைவுக்கல் நாட்டப்படின் அது எளியதாக அமையட்டும். அதிலே பின்வரும் விபரம் பொறிக்கப்படும்.

SAMUEL FISK GREEN
1822 - 188 -
MEDICAL EVANGELIST TO THE TAMILS JEUS MY ALL

தனது நினைவுக் கல்லிலும் தாம் தமிழர்களுக்காகவும், தமிழர்க்கான மருத்துவ ஊழியராகவும், பொறிக்கப்பட வேண்டுமென்பதனை 'மரண சாசனம்' எழுதி வைத்து விட்ட கிரீன். 1884 மே 28இல் இறைவனடி எய்தினார்.

இன்றும் கிரீன் குடும்பத்தினரின் பராம்பரிய மாநிலமான மசச்சூட்டில் வூஸ்டர் கிராமிய அடக்கச் சாலையில் கிரீனின் தன்னலமற்ற வாழ்வை நினைவூட்டி நினைவுக்கல் நிற்கிறது.

தமிழருக்கான அறிவியல் தமிழ் சாத்தியம் என்பதை, தான் ஒரு முன்னோடியாக இருந்து டாக்டர் கிரீன் சாதித்துள்ளார். தமிழால் முடியும் என்பதற்கான துணிவும், நம்பிக்கையும் ஏற்பட அறிவியல் மனப்பான்மையும் சமுதாய உணர்வும் இணைக்கப்பட வேண்டும் என்பதனை உணர்த்திச் சென்றுள்ளார்.

மதுசூதனன்

© TamilOnline.com