வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின் புகழ் 15ம் நூற்றாண்டிலிருந்தே உலகமெலாம் பரவி வருகிறது. உலகின் பல பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மாதாவின் அருள் தேடிவரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

திருவிழாக் காலங்களில் வேளாங்கண்ணி தெருக்களில் ஒருபுறம் ·பிரெஞ்ச் மறுபுறம் லத்தீன், இன்னொருபுறம் ஸ்பெயின், அந்தப்புறம் மலையாளம், இந்தப்புறம் இந்தி என்று பல மொழிகளின் சங்கமத்தையும் கேட்கலாம், அப்படி பல்வேறு நாட்டு, பல்வேறு மாநில மக்களும் கூடுகிறார்கள்.

வேளாங்கண்ணி கீழைநாட்டு கிறிஸ்துவத் திருத்தலங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது. உலக கிறிஸ்துவர்கள் இதை கீழைநாட்டு லூர்துநகர் என்றே கொண்டாடுகிறார்கள்.

லூர்துநகர் என்பது ·பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு முக்கிய கிறிஸ்துவப் புனிதத்தலம். ஆடு மேய்க்கும் சிறுமி ஒருத்திக்கு மாதா வானில் தோன்றி காட்சி அளித்த இடம் என்பதால் அது மிகுந்த புகழ் பெற்றுள்ளது.

அதே போன்று வேளாங்கண்ணியிலும் மாதா ஒருமுறைக்கு இருமுறையாக வானில் தோன்றிக் காட்சி கொடுத்துள்ளார். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. எனினும் அவை செவிவழிச் செய்தியாகக் காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.

வேளாள மரபினர் வாழ்ந்த பகுதியாதலால் வேளாகாணி என்றழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி வேளாங்கண்ணியாக ஆயிற்று.

காட்சி கொடுத்தக் கதை

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணியில் உள்ள அண்ணா பிள்ளை வீதியில் ஒரு குளமும் அதன் கரையில் பெரிய ஆலமரமும் இருந்தது. வழிப்போக்கர்கள் அங்கு ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழியே ஒரு சிறுவன் தினமும் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பண்ணையார் வீட்டுக்குப் பால் கொண்டு செல்வான். ஒரு நாள் வெயில் அதிகமாக இருக்கவே சிறுவன் மரத்தடியில் ஓய்வெடுத்தான். களைப்பு மிகுதியால் தூங்கிப் போனான்.

அப்போது வானிலிருந்து ஓர் ஒளிவட்டம் தோன்றியது. அதில் தெய்வாம்சம் பொருந்திய ஒரு பெண் கையில் குழந்தையுடன் தோன்றினாள். அதனைக் கண்டு சிறுவன் அதிசயித்தான். அந்தப் பெண்ணே சிறுவனிடம், ''என் குழந்தைக்குக் கொஞ்சம் பால் தருவாயா!'' என்றாள்.

அவன் உடனே பால் செம்பை அவளிடம் நீட்டினான். கையிலிருந்த குழந்தை பால் அருந்தி சிரித்தது. மறுகணம் இருவரும் மறைந்தனர். சுயநினைவு திரும்பிய சிறுவன் அவசர அவசரமாக நாகப்பட்டினம் சென்று பண்ணை வீட்டில் பாலைக் கொடுத்தான். பால் குறைந்துள்ளதற்காக மன்னிப்பு கேட்டான்.

பண்ணையார் காரணம் கேட்க, சிறுவன் நடந்ததைக் கூறினான். உடனே அவர் சிறுவனுடன் குளக்கரைக்கு விரைந்தார். சிறுவன் மீண்டும் வருமபடி அந்த அன்னையிடம் மன்றாடினான். சிறுவனின் வேண்டுதலுக்கு மனமிரங்கி அவள் மீண்டும் வந்தார். இருவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

இந்தச் செய்தி எல்லா இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. கிறிஸ்துவர்கள் வானில் தோன்றியது மாதாவும், யேசுவுமே என்பதை அறிந்து மகிழ்ந்தனர். மாதா தோன்றியதால் அக்குளத்திற்கு மாதா குளம் என்றே பெயர் ஏற்பட்டது.

இன்றும் மாதா குளம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பரப்பளவில் குளம் சிறிதாகி விட்டது என்றாலும் நீர் வற்றுவதில்லை. வேளாங்கண்ணி வரும் பக்தர்கள் இக்குளத்து நீரைப் புனிதமாகக் கருதி அருந்துகின்றனர். குளத்தருகே புனித நீர் வழங்கும் கூடம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தேவாலயத்திலிருந்து குளத்திற்கு அழகிய பாதை போடப்பட்டு இருபுறமும் ஏசு வரலாற்றுச் சிற்ப மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் வேண்டிய மாதா

இதைப் போலவே மோர் விற்ற முடவனுக்கும் மாதா காட்சி கொடுத்த கதையும் அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. வேளாங்கண்ணியின் அருகில் நடுத்திட்டு என்ற இடமிருந்தது. அது சற்று மேடான பகுதி. அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து மோர் விற்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தான் ஒரு கால் விளங்காத சிறுவன்.

ஒருநாள் தான் வழகூகமாக உட்காரும் ஆலமரத்தில் மோருடன் உட்கார்ந்து கொண்டு, மோர் வாங்க யாராவது வர மாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தான். அப்போது திடீரென வானிலிருந்து ஒரு தெய்வ அன்னை மகனைக் கையில் சுமந்து இறங்கி வந்தாள். அவர்களைக் கண்டு சிறுவன் வியந்து போனான்.

வானிலிருந்து வந்த அன்னை, 'என் மகனுக்குக் கொஞ்சம் மோர் தா' என்றாள். முடவன் பயபக்தியோடு ஒரு குவளை மோர் எடுத்துக் கொடுத்தான். அன்னை 'மோர் கொடுத்ததில் மகிழ்ச்சி. உன்னால் இன்னொரு காரியமாக வேண்டும். நாகப்பட்டினத்தில் உள்ள கத்தோலிக்கச் செல்வந்தர் ஒருவரிடம் போய் எனக்கு இங்கே ஆலயம் அமைக்கச் சொல்வாயா?' என்றாள். சிறுவன் தனது முடமான காலை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு பதிலளிக்க முடியாமல் பரிதவித்தான்.

அன்னைக்குத் தெரியாதா அவன் நிலைமை, 'எழுந்து நட' என்றாள் அன்போடு. அச்சொல் கேட்ட உடனே அவன் துடித்து எழுந்தான். துவண்டு கிடந்த கால்கள் உறுதி பெற்றன. அவன் அதிசயித்தான். ஆனந்தக் கூத்தாடினான்.

'அம்மா' எனக் கதறினான். அவள் அதற்குள் மறைந்து போனாள். அவள் கட்டளையை நிறைவேற்ற ஓட்டமும், நடையுமாய் நாகப்பட்டினம் விரைந்தான். செல்வந்தரைக் கண்டு நடந்ததைச் சொன்னான்.

முதல்நாள் இரவே அவருக்குக் கனவு வழியே கட்டளையிடப்பட்டிருந்தது. சிறுவனும் அதே செய்தியைக் கொண்டு வரவே அவர் உற்சாகமாக வேளாங்கண்ணிக்குக் கிளம்பினார். முடவன் நடந்து வருவதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தனர். அன்னையின் அருள் திறம் அம்பலமானது. ஊர் மக்களின் ஒத்துழைப்போடு மண்சுவர் எழுப்பி, மேலே கூரை வேய்ந்து சிறு குடிசையாய் ஒரு கோயிலை அமைத்தார் அந்த நாகப்பட்டினத்துச் செல்வந்தர். உள்ளே பாலகன் ஏசுவைச் சுமந்த மாதாவின் திருஉருவைப் பிரதிஷ்டை செய்தார்.

அன்னை மாதா வானில் தோன்றிய செய்தியும், அவளுக்குக் கோயில் எழுந்த செய்தியும் ஊரெங்கும் பரவியது. பிற்காலத்தில் உலகமெங்கும் பரவியது. மாதா அருளால் பக்தர்களின் உடல்பிணியும், மனப்பிணியும் தீர்ந்ததால் ஆரோக்கிய மாதா என்றே அவள் அழைக்கப்பட்டாள். குடிசை கோயிலில் கூட்டம் பெருகியது.

கடல் சீற்றம் தணிந்த அன்னை

17ஆம் நூற்றாண்டில் அடுத்து ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அயல்நாடுகளில் வியாபாரம் செய்யும் போர்த்துக்கீசியக் கப்பல் ஒன்ற, சீன நாட்டு மக்களால் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வங்காளவிரிகுடா வழியாக, இலங்கை சென்று கொண்டிருந்தது.

பருவநிலை நன்றாக இருக்கவே மாலுமிகள் சந்தோஷமாகக் கப்பலை செலுத்தினர். திடீரென்று கார்மேகம் சூழ்ந்தது. காற்று வலுத்தது. கடல் கொந்தளித்தது. புயலடித்தது. அலைகள் மலையாய் எழுந்து வர கப்பல் புரண்டு தடுமாறியது.

மாலுமிகளும், வியாபாரிகளும் செய்வது அறியாது தவித்தனர். இனி உயிர் பிழைப்பது கடினம் எனக் கருதி தேவ மாதாவைத் துதித்தனர். அவர்கள் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. மாதாவின் கருணையால் கடல் கொந்தளிப்புத் தணிந்தது. முட்டி மோதி கப்பலை கலங்கடித்த அலைகள் அமைதியாயின.

உடனே மாலுமிகள் நின்ற இடத்தில் இருந்து கரைக்குக் கப்பலைச் செலுத்தினர். கப்பல் கரைக்கு வந்து சேர்ந்த இடம் வேளாங்கண்ணி. அவர்களைக் கண்ட கிராம மக்கள் 'எல்லாம் ஆரோக்கிய மாதா அருள் தான்' எனச் சொல்லி குடிசைக் கோயிலுக்கு வழிகாட்டினர்.

போத்துக்கீசி வியாபாரிகளும், கப்பல் மாலுமிகளும் கோயிலுக்குச் சென்று மாதாவை வழிபட்டு நன்றி செலுத்தினர். அன்றைய தினம் செப்டம்பர் 8 ஆம் தேதி. அன்று அன்னை மாதாவின் பிறந்த நாள்.

பெரும் ஆபத்திலிருந்து தங்கள் ஊரையும், உடைமையையும் காப்பாற்றிய மாதா குடிசையில் இருப்பதைக் கண்டு கோயில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்த அவர்கள் 24 அடி நீளத்திலும் 12 அடி அகலத்திலும் அழகிய மண்டபத்துடன் கூடிய கற்கோயிலைக் கட்டினர். மீண்டும் தங்கள் சொந்த நாடு சென்று, திரும்பவும் மறுமுறை வந்ந போது அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட சீன பீங்கான் ஓடுகளை வாங்கி வந்து ஆலயத்தை அழகுபடுத்தினர்.

அந்த பீங்கான் ஓடுகளில் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு பைபிள் நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்கள் உள்ளன. இன்றும் அவை கோயிலை அழகுப்படுத்தி அலங்கரிக்கின்றன.

திருவிழா நாட்கள்

அன்று சிறு கோயிலாய் எழுந்த வேளாங்கண்ணி மாதா கோயில் இன்று மாபெரும் பேராலயமாக விரிவடைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாளே இக்கோயிலின் ஆண்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவிற்கு உலகெங்குமிருந்து பக்தர்கள் வந்து குவிகின்றனர். திருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி நிறைவடையும். தினந்தோறுமூ தேர்ப்பவனி திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

திருநாள்களில் மாலை வழிபாடு முடிந்ததும் இரு சின்ன சப்பரங்களும், ஒரு பெரிய தேர்ப்பவனியும் நடக்கும். இந்த தேர்களுக்கு சக்கரங்கள் எதுவும் கிடையாது. தேரினைத் தோளிலேயே சுமந்து செல்கிறார்கள். வேளாங்கண்ணி கடற்கரை அருகே கோயில் அமைந்திருப்பதால் மணலில் தேர் சக்கரங்கள் பொருத்தி இழுக்க முடியாது என்பதால் சுமக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். தேரினைச் சுமக்க பக்தர்களிடையே பெரும் போட்டி நிலவும். பெண்களும் அதிகம் பங்கு கொள்வார்கள்.

தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துவ சபையினரின் நிர்வாகத்தில் கோயில் பல வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. 1949ஆம் ஆண்டில் பத்ருவாதோ எனப்பட்ட போர்த்துக்கீசிய அரசு கண்காணிப்பிலிருந்து நற்செய்திப் பணி பரிசுத்த சங்கத்தின் கீழ் மாற்றப்பட்டது.

1962ஆம் ஆண்டில் வேளாங்கண்ணி திருத்தலம் 'பசிலிக்கா' (Bascilica) அதாவது 'அரச எழில் மன்றம்' என்ற சிறப்பு பெற்றது. வாடிகன் நிர்வாகம், 23ஆவது போப் ஆண்டவர் வேளாங்கண்ணி பேரலாயத்தை சிறு நிலை பசிலிக்காவாக அங்கீகரித்துக் கடிதம் எழுதியுள்ளார். வேளாங்கண்ணி ஆலயம் ரோம் நகரில் உள்ள புனித மரியன்னையின் பெருநிலைப் பேராலயத்துடன் (St. Mary Major) இணைக்கப்பட்டுள்ளது.

அன்னையிடம் வேண்டித் தங்கள் குறை தீர்ந்த பக்தர்கள் அவளின் கருணை மழைக்குப் பிரதியாகக் காணிக்கையாய்க் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கை, கால் முடங்களை நீக்கிய அன்னைக்கு உலோகத்தில் கைகளையும், கால்களையும் செய்து வந்து தருகிறார்கள். கண் பார்வை பெற்றவர்கள் கண்களைச் செய்து வைக்கிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டிப் பெற்றவர்கள் தங்கத்திலும், வெள்ளியிலுமாகத் தொட்டில்களைக் கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். இதைப் போல பலவிதமான காணிக்கைகள். இந்தக் காணிக்கைகளை ஒரு காட்சிக்கூடம் அமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

போக்குவரத்து வசதி

வேளாங்கண்ணிக்கு சென்னையில் இருந்து நிறையப் பேருந்து வசதிகள் உள்ளன. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை மார்க்கமாக ரயிலிலும் செல்லலாம். அருகில் உள்ள நகரம் நாகப்பட்டினம். அங்கிருந்து தெற்கே 14 கி.மீ. தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் வேளாங்கண்ணி உள்ளது.

தங்கும் வசதி

பேராலய நிர்வாகமே நல்ல பல தங்கும் விடுதி வசதிகளைச் செய்துள்ளது. தனியார் விடுதிகளும் உள்ளன.

ரூ. 25 முதல் ரூ. 500 வரை பலதரப்பட்ட விடுதிகளும் உள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் தங்கும் விடுதி அருகில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

தொலைபேசி எண் : 04365 - 22389

இரா. சுந்தரமூர்த்தி

© TamilOnline.com