பிஸ்ஸா
தேவையான பொருட்கள்

மைதா மாவு - 450 கிராம்
ஈஸ்ட் - 15 கிராம்
தக்காளி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
குடை மிளகாய் - 2
பூண்டு (நசுக்கியது) - 6 ல்
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீஸ் - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 4
பொடித்த சர்க்கரை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பிஸ்ஸாவின் 'பேஸ்' எனப்படும் ரொட்டியை வீட்டிலும் தயாரிக்கலாம். அவசரத்திற்கு நகரங்களில் உள்ள டிபார்ட்மெண்ட்ஸ் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.

பிஸ்ஸா பேஸ் செய்முறை :

மைதா மாவுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை, நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். ஈஸ்ட்டை சிறிது வெந்நீரில் கலந்து மாவுடன் சேர்த்து நன்கு பிசையவும். தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து ஈரத்துணியில் மூடி வைக்கவும். நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் இரண்டு பங்காக மாவு உப்பி விடும். இதைப் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிசைந்து பத்து முதல் பன்னிரெண்டு 'இஞ்ச்' அகலத்திற்கு இட்டு பேக்கிங் டிரேயில் 220 டிகிரி செல்சியஸ் சூட்டில் வைக்கவும். நன்கு தடியாகவே இடலாம். பதினைந்து நிமிடங்களில் 'பேஸ்' தயார்.

பிஸ்ஸா செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை நறுக்கிப் பூண்டுடன் சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விடாமல் கெட்டியாக 'மிக்ஸி'யில் அரைக்கவும். குடைமிளகாயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கவும். சீஸைக் காரட் துருவுவது போல் துருவிக் கொள்ளவும். 'பேஸ்' மீது தக்காளி கலவையைப் பரப்பி, உப்பு தூவவும். அதன் மேல் குடை மிளகாயைப் பரப்பி, உப்பு தூவவும். அதன் மேல் குடை மிளகாயை அலங்காரமாக வைத்து துருவிய சீஸைப் பரவலாகப் போடவும். அதன் மேல் உப்பு, மிளகுத் தூள் தூவி 'பேகிங் அவன்'னில் 500 டிகிரி F அல்லது 220 டிகிரி C சூட்டில் 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு துண்டங்களாக நறுக்கிச் சாப்பிடலாம். மேல் அலங்காரத்தை அவரவர் ருசிக்கேற்ப நறுக்கிய காளான்கள், வெங்காயம், ஆலிவ், துருவிய கேரட் கொண்டும் செய்யலாம்.

மாலை நேரத்துச் சிற்றுண்டியாகத் தேநீருடன் கொறிக்கக் கொஞ்சம் ஏதாவது உண்டென்றால், அவசரத்துக்கு உடனே கிடைப்பது பிஸ்கட் வகைகள் தான். அதைக் கூட நம் கைப்பட நாமே செய்து கொண்டால் அதுவும் ஒருவகையில் மகிழ்ச்சி தான். ''நானே வீட்டில் தயாரித்த பிஸ்கட்டாக்கும்'' என்று சொல்லிக் கொள்வதோடு, வேண்டாத விருந்தாளிகளை விரட்டுவதற்கும் உபயோகமாயிருக்கும்.

நளாயினி

© TamilOnline.com