இசையரசிக்குப் பல்லாண்டு...
பிள்ளையாரைக் காவல் தெய்வமாகக் கொண்ட கல்கி வார இதழை 1941ல் ஆரம்பித்து, அதன் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பெரும்வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் கல்கி சதாசிவம். தமிழின் உன்னதப் படைப்பாளிகள் பலரும் கல்கி பத்திரிகையில் எழுதி வளர்ந்தவர்கள் தான்.

இயல் தமிழையும் நாடகத் தமிழையும் பத்திரிகை மூலம் வளர்த்தார் என்றால், இசைத் தமிழையோ தம் இல்லத்திலேயே பராமரித்து வளர்த்தார் அவர். அந்த இசைத் தமிழின் பெயர் தான் எம்.எஸ். சுப்புலட்சுமி. கந்தர்வ கானம் பாடி இன்றும், ஏன் என்றும் இசைவானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு தெய்வீகப் பறவை. அந்தக் குடத்திலிட்ட விளக்கைக் குன்றிலிட்ட விளக்காக மாற்றியவர் அமரர் சதாசிவமே.

சாவித்திரி படத்தில் எம்.எஸ். நாரதர் வேடமிடட்டு நடித்தார். அதன்மூலம் வந்த தனமே கல்கி பத்திரிகைக்கு மூலதனம் ஆயிற்று. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ். நடிக்கவில்லை., மீராவாகவே மக்கள் மனதில் பதிந்துவிட்டார். இன்றும் காற்றினிலே வரும் அந்தப் படத்தின் கீதங்கள் கேட்பவர்களின் நெஞ்சை உருக்குகின்றன. எம்.எஸ். இசையரசி என்று நேருவால் வர்ணித்து வியக்கப்பட்டவர்.

ஓர் ஒவியன் அதிக நேரம் சிரத்தை எடுத்துத் தீட்டியது போல, அமரர் சதாசிவத்தின் நெற்றியில் அவரது வாழ்நாள் முழுவதும் பளிச்சென்ற மூன்று பட்டைத் திருநீறும் வட்ட வடிவக் குங்குமமும் துலங்கியது. பக்தர் அவர், கடவுளுக்கும் இசைக் கலைக்கும்.

சுதந்திரப் போராட்ட வீரர். மூன்று முறை சிறை சென்றவர். சதாசிவமும் ஏ.என்.சிவராமனும் ஒன்றாக உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டவர்கள். சுப்பிரமணிய சிவாவைக் குருவாக ஏற்றவர். தேசீய கீதங்கள் பாடிக் கதராடை விற்றவர்.

கல்கி., டி.கே.சி. ஆகியோரின் உற்ற தோழர். ராஜாஜியைத் தம் தலைவராக ஏற்றவர். ராமனுக்கு லட்சுமணன் போல் எனக்கு சதாசிவம் என்று ராஜாஜி பிர்லாவிடம் சொன்னதுண்டு.

சதாசிவத்தின் அன்பினால் மிகப் பெரும் எழுத்தாளர்களாக உருவானவர்களில் குறிப்பிடத்தக்கவர் குறிஞ்சிமலர் தீபம் நா. பார்த்தசாரதி. பின்னர் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டதும் அவர் கல்கியை விட்டு வெளியேறியதும் நாடறிந்தவை. பல்லாண்டுகள் கழித்து, தினமணி கதிருக்கு நா.பா. ஆசிரியரான போது சதாசிவத்தை வீடு தேடிச் சென்று சந்தித்து அவரிடமும் எம்.எஸ்.ஸிடமும் ஆசிபெற்றார். சதாசிவம் அப்போது காட்டிய அன்பை நினைத்து நா.பா. நெகிழ்ந்ததுண்டு.

எம்.எஸ். சதாசிவம் தம்பதியர் பற்பல நற்செயல்களுக்கு கோடிக்கணக்கான தொகையை வாரி வாரி வழங்கிய வள்ளல்கள். மகசேசே விருது உள்பட பலபெரும் விருதுகளை எம்.எஸ். பெற்றார். என்றாலும் அவர் பெற்ற மிகப் பெரும் விருது அவரது கணவரே. இந்தத் தம்பதியர் பெற்ற பாராட்டுகளிலெல்லாம் உன்னதமானது காஞ்சி மாமுனிவரின் பாராட்டு. எம்.எஸ், ஐ.நா. சபையில் காஞ்சிப் பரமாச்சாரியார் எழுதிய 'மைத்ரீம் பஜதாம்' என்ற பாடலைப் பாடிய போது உலகம் முழுவதும் ஆன்மீக உணர்ச்சியில் தோய்ந்தது. அந்தப் பாடலை அவர் பாடிய பிறகு எழுந்த நீண்ட நேரக் கரவொலியால் ஐ.நா. அரங்கம் நிறைந்தது.

எம்.எஸ்.ஸ¤க்கு வயது 85. (செப்டம்பர 16 - இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 85வது பிறந்த நாள்) அவர் இன்னும் பல்லாண்டு வாழ இசையுலகம் மட்டுமல்ல, தமிழுலகம் மட்டுமல்ல, ஏராளமான தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து பிரார்த்திக்கின்றன. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் இடது கை கொடுப்பதை வலது கை அறியாத தன்னடக்கத்துடன், வாரிக் கொடுக்கும் வள்ளலாக, தொண்டே உயிர் வேறொன்றும் அறியாதவராக வாழ்ந்து வருகிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த அந்த இசையரசி.

திருப்பூர் கிருஷ்ணன்

© TamilOnline.com