குஜராத்தில் மூக்கைமூடிய சம்பவம்
நாங்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இருந்த போது நடந்த வேடிக்கையான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. குஜராத்திகள் நான்வெஜ் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் வீட்டுக்கு போக நேர்ந்தால் அவர்கள் வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டார்கள். உபசரிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்கள் பக்கத்து வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்தால் அவர்களிடம் அவர்கள் யார் என்ன விஷயமாக வந்துள்ளார்கள் என அன்பாக விசாரித்து, வீட்டுக்குள் அழைத்து காபி, டீ, தண்ணீர் கொடுத்து உபசரிப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர் உள்ளூரில் வெளியே போயிருந்தால் அவர்கள் வரும் வரை இருக்க சொல்வார்கள். இப்படி அன்பானவர்கள் என்பதாலோ என்னவோ அவர்களுக்கு நாம் நான்வெஜ் சாப்பிடுவோம் என்றால் அவர்களுக்கு கொஞ்சம் வயிற்றை கலக்கும்.

நான்வெஜ் சாப்பிடுபவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவே மாட்டார்கள். நான்வெஜ் சாப்பிடமாட்டோம் என்று சொல்லித்தான் வீடு வாடகைக்கு பிடிக்க முடியும்.

நம்ம ஆட்களுக்கு நான்வெஜ் இல்லாமல் தான் இருக்கவே முடியாதே. வீடு முழுவதும் அகர்பத்திகளை கொளுத்தி வைத்துவிட்டு கதவு, ஜன்னல்களை மூடிவிட்டுத்தான் நான்வெஜ் சமைக்கணும்.

ஒருமுறை என் நண்பர் வீட்டில் நான்வெஜ் சமைத்து சாப்பிட்டப்பின் அவர் மனைவி அவரிடம் மட்டனில் சாப்பிட்ட பின் உள்ள எலும்புகளை ஒரு கவரில் போட்டு அவரிடம் கொடுத்து "வெளியே போட்டுவிடுங்கள்" என அவர் ஆபீஸ் போகும்போது கொடுத்திருக்கிறார்.

இவரோ செம பேச்சாளி. வழியில் அவர் ஆபீஸ் நண்பரை பார்த்திருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டே ஆபீஸ்வரை போய் விட்டார்கள். ஆபீஸில் அவர் இடத்தில் உட்கார்ந்த பின் அவர் கொண்டு வந்த பேக்கை பார்த்தார். மறுபடியும் வெளியே போய் போட அவர் சிரிக்க... சிரிக்க

சாப்பிட்டு வந்த ஹெவியான சாப்பாடு இடம் கொடுக்கவில்லை.

இருக்கட்டும் மாலையில் வீட்டுக்கு போகும் போது போட்டுவிடலாம் என்று எண்ணி முன்னால் இருந்த டேபிளின் அடியில் இருந்த டிராயரில் போட்டுவிட்டு ஆபீஸ் வேலையில் மூழ்கிவிட்டார்.

அன்று மாலை மட்டுமென்ன அப்புறம் இரண்டு நாட்களும் அந்த பேக் பற்றியோ எலும்பு பற்றியோ ஞாபகம் வரவே இல்லை.

நான்காம் நாள் ஆபீஸில் எல்லோரும் அப்பப்ப மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள். இவர் ஆபீஸ் வேலையில் கெட்டிக்காரர். ஆபீஸில் யார் யார் என்ன பண்ணுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதே இல்லை.

ஆபீஸில் நண்பர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக ஆபீஸ் முடியும் நேரம் வந்தார். வந்தவர் மூக்கை பொத்திக் கொண்டே வந்தார்.

"என்ன ஆச்சு மூக்கை பொத்திக் கொண்டே வர்ற" என்றார். "உனக்கு தெரியலையா இங்கே ஒரே நாற்றம் எங்காவது எலி செத்து கிடக்கும்" என்றார்.

உடனே நண்பருக்கு ஞாபகம் வந்துவிட்டது. விரைவில் நண்பரை பேசி அனுப்பி விட்டு ஆபீஸில் அனைவரும் போன பின் பியூன் கண்ணிலும் படாமல் பையை எடுத்து வெளியே போட்டு விட்டு நிம்மதியாக மூக்கை மூடியபடி வீடு போய் சேர்ந்தார்.

சரோஜா மனோகரன்

© TamilOnline.com