சண்டியர்?
நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்! அவர் தயாரித்து நடிக்கும் 'சண்டியர்' திரைப்படம் தான் கமலை அரசியலுக்கு இழுத்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சண்டியர் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படப்பிடிப்பு நடத்தினால் எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்ற அந்தக் கட்சியினர் அறிவித்த நிலையில், பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கொடுத்திருந்த போலீஸ் கடைசி நிமிடத்தில் வாபஸ் வாங்கி விட்டது. இதனால் படப்படிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

'அரிவாள் கலாசாரத்தை வளர்க்கும் சண்டியர் படம் தயாரிப்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம்'' என்று புதிய தமிழகக் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து அறிவித்து வருகிறார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எப்படியும் நம்மிடம் உதவி கேட்டு கமல் வருவார் என்று எதிர்பார்த்தது. அதுவும் நடந்தது. கடைசியில் 'சண்டியர்' பெயர் மாற்றம் முடிவானது. தொடர்ந்து தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் சண்டியர் களமாகவே இருந்து வருகிறது.

*****


முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை விவகாரத்தை கருணாநிதி முதலில் ஆளுங்கட்சியின் சதி என்று புகார் சொன்னார். பிறகு இதைச் சாக்காக வைத்துச் சில ஊடகங்கள் தி.மு.க.வை அழிக்கின்றன என வசை பாடினார்.

கிருட்டிணன் கொலையை அடுத்து உடனே கருணாநிதி மகன் மு.க. அழகிரி உள்பட தி.மு.க. தொண்டர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணை அழகிரியை இலக்காகக் கொண்டு நடைபெறுகிறது.

ஆனால் இந்தக் கொலை விவகாரத்தில் தி.மு.க. தொண்டர்களே கட்சி மேலிடம் மீது அதிருப்தியாய் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் தலைவருக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருசாரார் தா.கி. பேரவை என்ற அமைப்பையும் தொடங்கி விட்டார்கள்.

*****


அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் 11 முறை அமைச்சரவை மாற்றம். 23 அமைச்சர்கள் நீக்கம். இதில் 5 பேருக்கு மறுவாய்ப்பு. இதுவரை 48 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அளவிலேயே இது ஒரு பெரும் சாதனை. இன்னும் மூன்று வருடம் பாக்கியிருக்கிறது. அதற்குள் இன்னும் எத்தனையோ அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்பு உண்டு. ஜுன் 2ம் தேதி நடைபெற்ற மாற்றம் இன்றும் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதையே உணர்த்துகிறது.

*****


ராணிமேரி கல்லூரியை இடித்துத் தலைமைச் செயலகம் கட்டும் அரசின் முடிவை எதிர்த்து மாணவியரின் போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் தலையீடு என்று பரபரப்பாகப் பல சம்பவங்கள் இக்கல்லூரி விவகாரத்தில் அரங்கேறின. இந்தச் சூழ்நிலையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய கல்லூரி பேராசிரியைகள் மூவரை இடமாற்றம் செய்ததது தமிழக அரசு.

மேலும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மாணவிகளுக்குப் புதுநிபந்தனை ஒன்றை கல்லூரி நிர்வாகம் விதித்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது கல்லூரி பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவோம் என்று ஒரு மனுவில் கையெழுத்து இடும்படி மாணவிகளிடம் சொல்லப்படுகிறதாம். அதற்குக் கட்டுப்பட மறுப்பவர்களைக் கல்லூரியை விட்டு நீக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆக பேராசிரியைகள் இடமாற்றம் மாணவர்களின் போராட்ட உரிமை பறிப்பு உள்ளிட்டவை பழிவாங்குமூ நோக்கம் சார்ந்தது என்றுதான் கூறமுடியும்.

*****


தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல கமிஷன் தலைவர் விஜய்சங்கர் சாஸ்திரி கடந்த மே 19ல் தமிழகக் கோட்டைக்கு விஜயம் செய்தார். அத்துடன் அவர் சில தீவிர ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளார். குறிப்பாகத் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனையை வழங்கிச் சென்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம் கொட்டாங்குச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திறமையான அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துகளில் கடந்த எட்டு வருடங்களாகத் தேர்தல் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கும் சுதந்திரத்தை அரசு இந்த மக்களுக்குப் பெற்று கொடுக்குமா? இதுதான் முதன்மையான கேள்வி.

*****


விரைவில் அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கலாம். பா.ஜ.க.வினர் தேர்தலை எப்படியும் முன்கூட்டியே நடத்தி தமக்¡ன புதுப்பலத்தை அடைவதையே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர் அ.தி.மு.க., தி.மு.க. இடையிலான உறவில் யார் பா.ஜ.க.வினருடன் கூடிக் கலக்கும் வாய்ப்பு உண்டு. வரவிருக்கும் தேர்தல் தமிழக அரசியலின் அணி மாறும் தன்மையை புலப்படுததப் போகிறது.

*****


தமிழக முதல்வருக்கு பிடித்தமான துறை கண்டிப்பாக காவல்துறைதான். அதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வது, காவலர்களின் குறைகேட்டு களைவது, மகளிர் காவல் நிலையங்கள் திறந்து கொண்டேயிருப்பது என்று அதை சீராட்டி வருகிறார் ஜெயலலிதா. இப்போது இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பெண் கமாண்டோக்கள் படையையும் உருவாக்கியிருக்கிறார்.

*****


தமிழகத்தில் குண்டர் தடுப்புச் சட்டம் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரு சட்டங்களும் தலித்துகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சாதி மத அடிப்படையில் இச்சட்டங்களை காவல் துறையினர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் தலித்துக்கள். ஏனையோர் ஏழைகள் முஸ்லீம்கள். எனவே இவ்விரு சட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஜுன் 28ம் தேதி அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் கருத்தரங்குக்கு விடுதலை சிறுத்தைகள் ஏற்பாடு செய்திருந்தது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் நேரம் ஒதுக்கும்படி முதல்வரிடம் கோரிக்கை விட்டுள்ளனர். அ.தி.மு.க.வுடன் விடுதலைச் சிறுத்தைகள் சந்திப்பதால் அக்கட்சியுடன் நெருங்குவதாக அர்த்தம் இல்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

© TamilOnline.com