அட்லாண்டா தமிழ்க் கல்வி மையம் - பட்டமளிப்பு விழா - ஒரு கண்ணோட்டம்
அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மொழி மற்றும் பண்பாடு காக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டவையே தமிழ்க் கல்வி மையங்கள். அவ்வாறான மையங்கள் பல அட்லாண்டா நகரத்தில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

அவற்றில் இரண்டு மையங்களின் கூட்டமைப்பின் கன்னி முயற்சிதான் இந்தப் பட்டமளிப்பு விழா. குவின்னட் வட்டத்தில் உள்ள சுவானி பொது நூலகத்தில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. முப்பத்தைந்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். குழந்தைகள் நடனம், நாடகம் இசைப் பாடல்கள் மூலம் தங்கள் முத்தமிழ்த் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

ஸ்மார்ட் சா·ப்ட் யு.எஸ். நிறுவனத் தலைவர், திரு. முருகதாஸ் கிருஷ்ணன், துணைவியார் சாந்தி முருகதாஸ் தலைமை தாங்கிச் சான்றிதழ்களை வழங்கிக் குழந்தைகளை மகிழ்வித்தனர். திரு. சுந்தரம் தனபால், ஓய்வுபெற்ற பள்ளித் துணை முதல்வர் சிறப்புரை ஆற்றித் தமிழ் கற்பதன் இன்றியமையாமையை வலியுறுத்தினார். இம்மாணவர்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ·புல்டன் வட்டப் பொது நூலகம், பாலவிகார் ஆகிய மையங்களில் தமிழ் கற்பவர்கள். ஆர்வமும், அனுபவமும் நிறைந்த திருமதி சுந்தரி குமார், திருமதி இந்துமதி ரமேஷ், திருமதி நர்மதா ஜெகந்நாதன், திருமதி சுந்தரி மெய்யப்பன், தமிழகம் மற்றும் சிங்கப்பூரில் தமிழ்ப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர், முனைவர் கோவிந்தசாமி ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். குடும்ப மற்றும் அலுவலகப் பொறுப்புகளோடு தமிழ்ப் பணியும் விருப்பத்துடன் செய்துவரும் மேலே குறிப்பிட்ட மூன்று பெண்மணிகளின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. மேலும் பல பெற்றோர்கள் ஆசிரியராகப் பணியாற்ற முன்வந்துள்ளனர்.

ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை உள்ள மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள் தமிழ் அறிவிற்கேற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு கற்பிக்கப்படுகின்றன.

தன்னார்வத்தோடு கற்கும் இம்மாணவர்களை ஊக்குவிக்க இனிவரும் ஆண்டுகளில் புதிய கல்விமுறைகளைக் கையாண்டு சிறந்த தமிழ்க் கல்வி அளிக்கவும், தமிழகத்தில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தேர்வுக்கு ஆயத்தம் செய்யவும், பாட நூல்கள் வெளியிடவும், நூலகம் தொடங்கவும், இங்குள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பாடம் தொடங்கவும் இனி ஆவனசெய்ய ஆசை. அனைவருடைய ஒத்துழைப்பில் செய்வோம்.

© TamilOnline.com