தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன்
ஒரு சில தனிமையான நாட்களில் நமக்கு துணையாக இருப்பவை புத்தகங்கள். பொழுது போவதற்காக படிக்க ஆரம்பிக்கும் சில புத்தகங்கள் மனதை வெகுவாக பாதிப்பதில் முடிவதும் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும். அப்படி படிக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜமாகவே நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால்? அப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது, போ பிரான்சனின் (Po Bronson) “Why Do I Love These People?” என்ற சமூக நூலைப் படித்தவுடன்.

எழுத்தாளர் போ ப்ரான்சன், தன் குடும்பத்தோடு சான் பிரான்சிஸ் கோவில் வாழ்கிறார். தனது ‘What should I do with my life?’ புத்தகத்திற்கு மிகுந்த பெயர் பெற்றவர்.

இந்த புதிய சமூக நூலில், உமா தங்கராஜ் என்ற தமிழ் பெண்ணின் வாழ்க்கையை “Boxes” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதில் போ, முன்னோரு காலத்தில், மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்த குடும்ப பிணைப்பைப் பற்றியும், ஆனால் உண்மையில் இப்போது அதன் அவசியத்தை கேள்வி கேட்டும் ஆரம்பிக்கிறார். திணிக்கப் பட்ட திருமணங்கள், உலக சட்டத்தில், மனித உரிமை மீறலாகக் கருதப் படுபவை. இருந்தும், இவ்வுலகின் சரி பாதி பகுதியில், அவை வழக்கத்தில் உள்ளன என்று கூறும் போ, ஹார் மோன்களின் கட்டுப்பாட்டிலுள்ள பதினேழு வயதினர்களைவிட, அவர்கள் பெற்றோர்கள் சிறந்த திருமண முடிவுகளை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்திய குடும்பங்கள் இயங்குகின்றன; ஆனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சிறப்போ அதை செய்ய வேண்டுமே தவிர, தங்களது சுய நலத்திற்காக அவர் களை திருமணச் சந்தையில் ஒரு வியாபாரப் பொருளாக்குவதனை சாடுகிறார். உமாவின் வாழ்க்கை அனுபவத்தில், இது ஆராயப்படுகிறது.

இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் உமா அமெரிக்காவில் இருப்பவர். நமது தென்றல் பதிப்பாளர், அவருக்கு தென்றல் பத்திரிக்கை பிரதியை அனுப்பினார். உமா தென்றலை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, நன்றி தெரிவிக்கையில், அவர் கூறியது,

“வேடிக்கை என்னவென்றால், நான் நன்றாக இருக்கிறேன். நிச்சயமாகவே. இது ஒரு அனுபவங்கள் மிகுந்த நல்ல வாழ்க்கையாகவே அமைந்துள்ளது...”

சிவன்

© TamilOnline.com