செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 18, 2007 அன்று லாவண்யா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ·ப்ரீமாண்ட் ஓலோனி கல்லுரி ஸ்மித் மைய அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ருதி ஸ்வர லயா நுண்கலைப் பள்ளியில் 10 ஆண்டுகளாக லாவண்யா பரதநாட்டியம் பயின்று வருகிறார்.

செல்வி லாவண்யா 'ஸ்ருதி ஸ்வர லயா'வின் நடன நிகழ்ச்சிகள், ·ப்ரீமாண்ட் இளைஞர் கலைவிழா மற்றும் மொடெஸ்டோவில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். ஸ்ரீமதி அனுராதா சுரேஷிடம் கர்நாடக சங்கீதம் பயின்று வரும் லாவண்யா, கான்கார்ட் சிவமுருகன் ஆலயம், சன்னிவேல் நந்தலாலா அறக்கட்டளை ஆகிய இடங்களில் இசைக்கச்சேரியும் நடத்தியுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பியானோ பயின்று பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். இர்விங்டன் மேல்நிலைப் பள்ளியில் 10வது வகுப்பை தொடங்கப் போகும் லாவண்யா, பள்ளி நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார். பள்ளியின் ஓட்டப் பந்தயம், பேச்சுப்போட்டி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார். இவர் மாலா, சிவகுமார் தம்பதிகளின் மகளாவார்.

அம்ருதவர்ஷணி ராகத்தில் அமைந்த விநாயக ஸ்துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து வந்த ராகமாலிகை தசாவதாரப் பாடலுக்கு அருமையாக நடனமாடிய லாவண்யா பகவானின் பல அவதாரங்களை விரைந்து தனது அபிநயம் மூலம் அடுத்தடுத்துச் சித்திரித்துச் சபையோரை மெய்மறக்கச் செய்தார். ஒவ்வொரு அவதாரத்தையும் விளக்கும் வரிகளுக்கு லாவண்யா காண்பித்த அசைவுகளும், ஜதி சொல்கட்டு தீர்மானங்களும் விறுவிறுப்பாகத் தாளகதியுடன் அமைந்திருந்தது.

தொடர்ந்தது பரதநாட்டியத்தின் முக்கிய அம்சமான 'வர்ணம்'. லாவண்யா வர்ணத்தின் அம்சங்களை சபையோருக்கு ஒலிவாங்கியில் விவரித்து, தான் நடனமாடப் போகும் பாடலை அபிநயம் மூலம் விளக்கியது மிக நன்றாக இருந்தது. இதில் ஜதியும், முத்திரைகளும், பாடலும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் பாற்கடலில் அமிர்தம் கடைந்தது, மார்கண்டேயரை யமனின் பிடியிலிருந்து சிவபெருமான் காப்பாற்றியது ஆகிய இரண்டும் அடங்கியிருந்தன.

மகாகவி சுப்ரமண்ய பாரதியாரின் பிரபலமான 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்த லாவண்யா, ஒரு தாய் தன் குழந்தைக்கு அழகிய உடைகளையும் மலர்களையும் அவருக்கு சூட்டும் போது உண்டாகும் மகிழ்ச்சியையும், மற்றவர்கள் குழந்தையைப் போற்றும் போது அடையும் இறுமாப்பையும், கண்ணீர் விடும்போது உண்டாகும் தவிப்பையையும் சித்திரித்தது மிகச்சிறப்பாக இருந்தது.

சங்கராபரண ராகத்தில் 'அலருலு' என்ற அன்னமாச்சார்யா கீர்த்னை, திருப்பதி பாலாஜியின் துணைவியாரான அலர்மேல் மங்கை தாயார் நடனமாடுவதை வர்ணிப்பதாக உள்ளது. இப்பாடலுக்கு நாட்டியமாடும் போது ஜ்வலிப்பையும் கொலுசுகளின் மணிகள் எழுப்பும் இனிய ஓசை பாலாஜியை வசீகரிப்பதையும் நளினமாக அபிநயித்துக் காட்டினார். அடுத்து வந்தது புரந்தரதாசரின் 'சிக்கவானே' என்ற ராகமாலிகைப் பாடல். இந்தப் பாடலை மானசா சுரேஷ¤ம், மாலா சிவகுமாரும் இணைந்து ஜனரஞ்சகமாகப் பாடினார்கள். பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய கதனகுதூகல ராகத் தில்லானாவை லாவண்யா துரித நடையில் அபிநயித்து நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.

அனுராதா சுரேஷ் மற்றும் மானசா சுரேஷின் பாட்டும், வித்யா வெங்கடேஷின் நட்டு வாங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

மிருதங்கம் வாசித்த ரவீந்திர பாரதி ஸ்ரீதரனும், வயலின் வாசித்த சுசீலா நரசிம்மனும் மிகச் சிறப்பாகத் தமது பணியைச் செய்தனர்.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com