யுவபாரதி வழங்கிய ப்ரியா சங்கரின் பரதநாட்டியம்
ஆகஸ்ட் 19, 2007 அன்று ப்ரியா சங்கரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை சான்டா கிளாராவிலுள்ள மிஷன்சிடி நிகழ்கலை மையத்தில் 'யுவபாரதி' அமைப்பு வழங்கியது. லாபநோக்கற்ற அமைப்பான யுவபாரதி இந்தியச் செவ்வியல் நடனத்தை அமெரிக்காவில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. நாட்டிய மணிகளுக்கு மேடை ஏற்படுத்தித் தருவதோடு, பிற பகுதிக் கலைஞர்களை வளைகுடாப் பகுதியில் நடனமாடவும் யுவபாரதி வாய்ப்புத் தருகிறது.

'நிருத்யோல்லாஸா'வின் நிறுவனர் இயக்குனரான குரு இந்துமதி கணேஷ் அவர்களிடம் பயிலும் ப்ரியா 2004-ல் நாட்டிய அரங்கேற்றம் செய்தார். அண்மையில் ப்ரேகில் நடந்த பன்னாட்டு நடன விழாவில் பங்குகொண்ட ப்ரியா தனது சக கலைஞருடன் முதல் பரிசை வென்றார். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார்.

கம்பீரநாட்டையில் அமைந்த மல்லாரியுடன் நிகழ்ச்சியைத் தொடங்கிய ப்ரியா ஹம்சத்வனி நடேச கௌத்துவத்தை அடுத்து வழங்கினார். தாமரைக் கண்ணியான அன்னை காமாட்சியின் பேரழகை வர்ணிக்கும் 'கஞ்சதளாயுதாட்சி' (கமலமனோஹரி) அடுத்து வந்தது. சிருங்கார ரஸத்தைச் சித்திரிக்கும் 'ரா ரா சின்னன்னா' என்ற செஞ்சுருட்டி ராகப் பதத்தில் கிருஷ்ணரின் மாயப் புன்னகையும், அவர் கோபியரை வசீகரிப்பதும் மிக அழகாக வெளிப்பட்டன. துளசிதாசரின் 'ஸ்ரீ ராமச்சந்த்ர கிருபாளு' என்னும் பஜனைப் பாடலுக்கு ஆடியதும் வெகு அழகு. ஒரு விருத்தத்தை அடுத்து தனஸ்ரீ தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

குரு இந்துமதி கணேஷின் சிறந்த பயிற்சியும் ப்ரியாவின் சளைக்காத ஈடுபாடும் இந்த நிகழ்ச்சியில் தெளிவாகத் தெரிந்தன. யுவபாரதியைப் பற்றி மேலும் அறிய: www.yuvabharati.com

அனுராதா சுரேஷ்

© TamilOnline.com