டாடா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் புதியதாக டாடா நிறுவனம் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை ஒன்று தொடங்கத் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இத்தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை அரசு தொடங்கியது. இதனை அப்பகுதி மக்கள் எதிர்க்கத் தொடங்கினர். அது போதாதென்று பா.ம.க., கம்யூனிஸ்ட், அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் எதிர்த்துக் களத்தில் குதித்தன. விஷயம் இதுதான். தொழிற்சாலை தொடங்க உத்தேசித்திருக்கும் பகுதிகள் 'தேரி' என்றழைக்கப் படும் செம்மண் பூமியைக் கொண்டவை. இந்த மண்ணில் இல்மனைட் என்ற தாதுப்பொருள் கிடைக்கிறது. இதிலிருந்துதான் பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலை வந்தால் தென் பகுதிகளில் தொழில் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், சமூக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இதை எதிர்ப்பவர் கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை மக்கள் விரும்பவில்லை என்கிறார்கள். தினந்தோறும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு வகைப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனைக் கண்டு முதல்வர் கருணாநிதி 'அரசின் நல்ல திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார்' என்று சோகத்துடன் அறிவித்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com