திருடர்கள்
மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான். கிளம்பும் எண்ணமில்லை. அவசரமும் இல்லை. இரவு 12 மணி வரையில் ஆபிஸில் வேலை செய்தால்கூட வீட்டில் போய் நேராகப் படுத்துக் கொள்ளலாம் என்ற நிர்பந்தமான எண்ணம். அதற்கு காரணம் அவன் மனைவி லதாவும் அவனுடைய அம்மாவும்தான். லதாவுக்கு அம்மாவைக் கண்டாலே பிடிக்காது. எப்போதும் அம்மாவை திட்டிக் கொண்டே இருப்பாள்.

நேற்றுகூட அவள், 'ஏங்க உங்க அம்மாவை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்த்திருங்க.. என்னாலே இனிமேல் அவங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது. எப்போதும் ஏதாவது திருடிக் கொண்டே இருப்பாங்க. உங்க தங்கை வந்ததும் அதை யாருக்கும் தெரியாம கொடுத்திருவாங்க' என்றாள்.

லதா சொல்வதில் உண்மை இருக்குமோ என்று சந்தேகம் அவனுக்கு. ஏனென்றால் சில நாட்களாகவே பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவதைப் பற்றி லதா அவனிடம் முறையிட்டு அம்மாவின் பேரிலும் அவன் தங்கை பேரிலும் பழியைப் போட்டாள். அவன் தங்கையும் யாரும் இல்லாத போது வீட்டுக்கு வந்து அம்மாவைச் சந்திப்பாள். உடனே சென்றுவிடுவாள். உண்மை எதுவென்று அவனுக்குப் புரியவில்லை. தெரியவில்லை.

ஆபீஸ் பாய் வந்து 'சார், கிளம்புங்க. பூட்டணும்' என்று சொன்னதும்தான் சுயநினைவுக்கு வந்தான். வெளியில் வந்து ஸ்கூட்டரை உதைத்தான். பத்து உதை வாங்கியபின் கிளம்பியது. வேறு புது வண்டி வாங்கலாம் என்றால் அதற்கு லதா ஒப்புக் கொள்ள மாட்டாள். அம்மா வீட்டில் இருக்கும்வரை எதற்கும் லதா அனுமதி கொடுக்கமாட்டாள். சலித்துக் கொண்டே ஓட்டினான். வண்டியும் நடுவில் இரண்டு முறை மக்கர் செய்து, 15, 20 உதை வாங்கிய பின் வீடு வந்து சேர்ந்தது.

வண்டியிலிருந்து இறங்கிக் கதவைத் தட்டினான். கதவு தானாகவே திறந்து கொண்டது. அப்படியென்றால் வீட்டில் ஏதோ ரகளை என்று அர்த்தம். வீட்டை நோட்டமிட்டான். மகள் பிரியா ஓரத்தில் அழுது கொண்டே ஹோம்ஓர்க் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு பாட்டியிடம் அதிக அன்பு, ஈடுபாடு. பள்ளிக்கூடத்தில் எது நடந்தாலும் பாட்டியிடம்தான் முதலில் சொல்லுவாள். பாட்டி என்றால் அவளுக்கு உயிர். பாட்டி ஊட்டினால் விருப்பப்பட்டு சாப்பிடுவாள். அவள் அழுகிறாள் என்றால் அம்மாவுக்கும் லதாவுக்கும் ஏதோ சண்டை, அம்மாவும் அழுவதிலிருந்து பெரிய சண்டைதான் என்று முடிவுக்கு வந்தான்.

நாற்காலியில் அமர்ந்தான். அடுக்களை விளக்கு எரியவில்லை. என்றும் அம்மா ஏற்றும் சாமி விளக்கு எரியவில்லை. சிறிது நேரம் கழித்து லதா வீட்டினுள் வந்தாள். முகம் மிகுந்த கோபத்தைக் காட்டியது. என்னவென்று விசாரிக்க அவனுக்கு தைரியமில்லை. இரவு லதா சமையல் செய்வாளா இல்லை பட்டினிதானா என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

பிரியா அவனிடம் வந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததிலிருந்து ஏதும் சாப்பிடவில்லை என்று முறையிட்டாள். பாட்டியும் மதியத்திலிருந்து ஏதும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்கிறாள் என்பதையும் சொன்னாள். என்னவென்று அவன் விசாரிக்கும் முன்பே பிரியா அழுது கொண்டே சொன்னாள்: 'அப்பா, டேபிள் மீது அம்மா வைத்திருந்த 500 ரூபாய் காணவில்லை. நான் எடுக்கவில்லை என்று சொன்னாலும் கேட்காமல் எனக்கு இரண்டு அடி கிடைத்தது. பாட்டியும் தான் எடுக்கவில்லை என்று சொன்ன போதும் பாட்டியை அம்மா மிகவும் திட்டிவிட்டாள்'. கேட்டதும் ரகு பயந்து குழம்பினான். அம்மாவின் அறைக்குள் சென்றான். உள்ளே செல்வதற்கு முன் லதா நடுவில் வந்து தடுத்தாள். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க தைரியமில்லாமல் தரையை பார்த்தான். விநாடிகள் ஓடின.

என்னவென்று விசாரிக்க அவளை நோக்கினான். லதா 'ஏங்க, நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. டேபிள் மேல் இருந்த 500 ரூபாய் எங்கேங்க போகும்? வேலைக்காரியும் இன்னிக்கு வரலே. நாளைக்கு உங்க தங்கச்சி வருவா. உங்கம்மா அவகிட்ட கொடுத்திடுவா. அவளுக்கும் உங்க அம்மாவுக்கும் மான ரோஷமே கிடையாது. போங்க. போய் உங்க அம்மாகிட்ட கேளுங்க.' என்று அந்த தெருவெல்லாம் கேட்கும்படியாக கத்தினாள்.

ரகு லதாவைத் தாண்டி அம்மாவின் அறைக்குள் நுழைந்தான். அம்மாவைப் பார்த்தான். முகம் அழுது வீங்கியிருந்தது.

'ஏம்மா? என்னம்மா இதெல்லாம். உன்னாலே நிம்மதியே போச்சு. ஏம்மா உனக்கு இந்த வயசிலே திருட்டெல்லாம். பேசாம அந்த 500 ரூபாயை எடு' என்று மிரட்டினான்.

அம்மா ரகுவை பார்த்தாள். ஏதும் பேசவில்லை. பேசினாலும் யாரும் நம்பமாட்டார்கள், பேத்தியைத் தவிர. உள்ளே நுழைந்தாள். படுக்கை எல்லாம் கலைத்துத் தேடினாள். புடவை எல்லாம் உதறினாள். கிடைக்கவில்லை. கடைசியில் கட்டிலின் கீழே அந்தப் புத்தகம் இருந்தது. இராமாயணம். எடுத்து மேலே வைக்கலாம் என்று எடுத்தாள். கைதவறிக் கீழே விழுந்தது. கூடவே அதனுள் இருந்த 500 ரூபாயும். அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. லதாவுக்கு சந்தோஷம். பிரியாவுக்கு ஷாக். பாட்டி இப்படி செய்வாளா என்று. சின்ன வயசிலிருந்தே திருடக் கூடாது, பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள்மேல் ஆசைப்படக்கூடாது என்றெல்லாம் சொல்லித் தன்னை வளர்த்த பாட்டியா இப்படி என்று. பாட்டி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.

'டேய் ரகு நான் திருடலை. எப்படி இதுன்னு தெரியல்லை. அந்த புத்தகத்தை ரொம்ப நேரமாக காணவில்லை. என்னை நம்புடா' என்று அழுதாள்.

'திருடிவிட்டுப் பொய் வேறே. சொல்லும்மா... ஏன் திருடினாய்?' என்று கத்தினான். லதாவுக்கு சந்தோஷம். பிரியாவுக்கு பயம்.

அம்மா மெளனமாக இருந்தாள். அழுதாள். திரும்பத் திரும்பத் தான் திருடவில்லை என்று மட்டும் கூறினாள்.

ரகுவுக்கு கோபம் தலைக்கேறியது.

உடனே லதா 'ஏங்க உங்க அம்மா ஒத்துக்கலேன்னா அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்திடுங்க. ஒரு தடவை திருடினா மறுபடியும் மறுபடியும் திருடத் தோணும். அதனாலே எப்படியும் அவங்க இங்க இருக்கக்கூடாது' என்று ஆவேசமாகக் கூறினாள்.

பிரியா திகைத்து நின்றாள்.

உடனே ரகு, 'ஏம்மா, ஒத்துக்கம்மா. இல்லேன்னா இந்த வீட்ல நீ இருக்க முடியாது' என்று ஆவேசமாகக் கூறினான்.

லதாவும் பிரியாவும் பாட்டியைப் பார்த்தார்கள்.

'கொஞ்ச நேரம் கழித்து பதில் சொல்லு' என்று ரகு சொல்லிவிட்டு ஹாலில் வந்து சேரில் சாய்ந்தான். அவன் கூடவே லதாவும்.

பிரியா பாட்டியிடம் சென்றாள். பாட்டி என்ன சொல்லப் போகிறாள் என்று பாட்டியைப் பார்த்தாள்.

'பாட்டி நிஜம்மா சொல்லு பாட்டி. நீ எடுத்தியா?' என்று பாட்டியைக் கேட்டாள்.

பாட்டி தான் எடுக்கவில்லை என்று இராமாயண புத்தகத்தின் மேல் சத்தியம் செய்தாள்.

பிரியா, 'நான் உன்னை நம்பறேன் பாட்டி' என்று சொன்னாள்.

உடனே பிரியா அப்பாவிடம் சென்று 'பாட்டி எடுக்கலையாம்பா...' என்று மெதுவாகக் கூறினாள்.

லதாவுக்கு மிக சந்தோஷம். எங்கே நான்தான் எடுத்தேன் என்று சொல்லி இங்கேயே தங்கிவிடுவாளோ என்ற பயம்.

'ஏங்க இனிமேலே உங்க அம்மா இங்க இருக்கக்கூடாது. திருட்டும் பொய்யும் உள்ள உங்க அம்மாவை உடனே எங்கேயாவது விட்டுட்டு வாங்க. நாளைக்கு அவங்க இங்கே இருக்கக்கூடாது' என்று சொல்லிவிட்டு போய் படுத்துக் கொண்டாள்.

அன்றிரவு யாரும் தூங்கவில்லை.

பிரியா மட்டும் பாட்டியின் மடியில் தூங்கினாள்.

மறுநாள் காலை விடிந்தது.

ரகுவும், லதாவும் அம்மாவை எங்கே கொண்டு சேர்ப்பது என்பதை விவாதித்தார்கள்.

பாட்டியும், பிரியாவும் குளித்தார்கள். ரகு ஆபீஸ் போகவில்லை. மணி 8.30. லதா பாட்டியின் ரூமில் எட்டிப் பார்த்தாள். உடனே ரகுவிடம் வந்து, 'ஏங்க போய் உங்க அம்மாவின் துணிமணியை எடுத்து பெட்டியிலே அடுக்குங்க. அவங்களையும் தயாரா இருக்கச் சொல்லுங்க. டயமாயிடிச்சி. கிளம்பணும் இல்லையா. நான் போய் சமைக்கிறேன்' என்று எழுந்தாள்.

அப்போது வாசலில் ஆட்டோ சத்தம்.

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

ரகுவின் தங்கை சாவித்திரியும் அவள் கணவர் ரமேஷ¤ம் உள்ளே வந்தனர். ரகுவுக்கும் லதாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. இவர்கள் இந்த சமயத்தில் ஏன் வந்தார்கள் என்று அவர்களை மனதுக்குள்ளேயே திட்டினாள். எங்கே ரகுவின் மனதை மாற்றி காரியத்தைக் கெடுத்து விடுவார்களோ என்று பயந்தாள்.

ரமேஷ¤ம் சாவித்திரியும் நேராகப் பாட்டியின் ரூமுக்கு உள்ளே சென்றார்கள். பாட்டியை வெளியே அழைத்து வந்தார்கள். 'அண்ணா அம்மாவை நான் எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் வைத்துக் கொள்ளப் போகிறேன். ரமேஷ¤க்கும் இதில் சம்மதம்' என்று சொன்னாள்.

ரகுவுக்கும் லதாவுக்கும் ஒரே திகைப்பு.

என்னடா இது என்று வியந்தார்கள். எப்படி இவர்களுக்கு இதெல்லாம் தெரியும் என்று புரியாமல் விழித்தார்கள்.

அப்பொழுது சாவித்திரி, 'அண்ணா, நேற்று நடந்ததைக் கேள்விப்பட்டோம். மனசு மிகவும் ஒடிந்துவிட்டது. நீங்களே உங்கள் பணத்தைத் திருடி அம்மா மேல் பழியைப் போட்டு... சே மனிதர்களா நீங்கள்! பணத்தைத் திருடவில்லை என்று உண்மையைச் சொன்னாலும், திருடினேன் என்று பொய் சொன்னாலும் அம்மாவை வீட்டைவிட்டு விரட்ட நீங்கள் இருவரும் நாடகமாடியது பேஷ்! அடிக்கடி நான் இங்கு வந்து அம்மாவிடம் கொடுக்கும் பணம் காணாமல் போனது பற்றி என்றைக்காவது அம்மா வாய் விட்டு வெளியில் சொன்னாளா? யார் திருடர் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும். அம்மா எங்கே, நீங்கள் எங்கே! காலமெல்லாம் நமக்காகக் கஷ்டப்பட்ட அம்மாவைச் சிறிது காலமாவது நிம்மதியாக இருக்க நாங்கள் எங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறோம். வாம்மா போகலாம்' என்று அம்மாவை அழைத்தாள்.

அம்மா கட்டின புடவையோடு, எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் கிளம்பத் தயாரானாள்.

அப்பொழுது பிரியா, 'இரு பாட்டி' என்று சொல்லிவிட்டு அப்பாவிடம் வந்தாள். 'அப்பா, பாட்டி ராத்திரி என்னிடம் நான் திருடவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். உண்மையை அறிய உங்கள் ரூமுக்கு வந்து கதவைத் திறந்தேன். அப்போது அம்மா டேபிளில் பணத்தை வைத்தது. பின்னர் அதைத் தானே திருடி இராமாயணப் புத்தகத்தில் பாட்டியின் ரூமில் ஒளித்து வைத்தது பற்றி உங்களிடம் சொன்னதைக் கேட்டேன். பாட்டியை விரட்ட அம்மா செய்த காரியம் எல்லாம் தெரிந்தும் நீங்கள் ஒரு நல்ல மகனாகச் செயல்படாமல் போனது உங்கள் மேல் எனக்கு வெறுப்பை ஏற்றியது. எல்லாத்தையும் போன் பண்ணி நான் அத்தையிடம் சொன்னேன். அவர்களும் உடனே பாட்டியை அழைத்துப் போக நான் சொல்லித்தான் வந்துள்ளார்கள். எனக்கும் உங்களிடம் இருக்கப் பிடிக்கவில்லை. நானும் அத்தை வீட்டிற்கே போகிறேன். என்றைக்காவது நீங்கள் மனம் மாறி உங்கள் தவறை உணர்ந்த நல்ல அப்பா அம்மாவாக இருக்க விரும்புகிறீர்களோ அன்றைக்குப் பாட்டியிடம் வந்து மன்னிப்பு கேட்டு என்னைத் திரும்ப அழைத்து வாருங்கள். அப்போது பாட்டி உங்களுடன் திரும்ப வருவாளா அல்லது இருப்பாளா என்பது...' வாக்கியத்தை முடிக்காமல் அழுதாள்.

அழுது கொண்டே பாட்டியின் கையைப் பிடித்தாள். நால்வரும் ஆட்டோவில் கிளம்பிப் போய்விட்டனர்.

பாலசுப்பிரமணியம்,நியூஜெர்சி

© TamilOnline.com