சிறுநீரகக் கற்கள்
பிரசவ வேதனைக்கு ஈடாக வலி தரும் ஓர் உபாதை உண்டென்றால் அது சிறுநீரக, நீர்ப்பாதைக் கற்களால் (kidney and urinary stones) ஏற்படும் வலியே ஆகும். எழுபது வயதுக்கு உட்பட்டவர்களில் கிட்டத்தட்ட பத்து சதவிகிதத்தினர் இதை அனுபவித் துள்ளனர் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

சிறுநீரகக் கல் என்றால் என்ன?

எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்பின் கீழ் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களையும் தேவைக்கு அதிகமான நீரையும் வடிகட்டிச் சிறுநீராக மாற்றுகின்றன. இது நுண்குழல்கள் வழியாக சிறுநீரகத் தொட்டிக்குச் (pelvis of the kidney) சென்று அங்கிருந்து சிறுநீரகக் குழல் (ureter) மூலம் சிறுநீரகப்பையை (urinary bladder) சென்று அடைகிறது. சிறுநீர் வெளியேறும் வரை அது சிறுநீரகப்பையில் தங்குகிறது.

கால்சியம் ஆக்சலேட்டு, யூரிக் அமிலம் போன்ற பொருட்களின் அளவு சிறுநீரில் அதிகமானால் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகமாகிறது. இப்பொருட்கள் படிக உருவம் பெற்று சிறுநீரகத்தைச் சார்ந்து விடும். அதன்பின் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி சிறுநீரகக் கல்லாகி விடுகிறது. பொதுவாக, கற்கள் சிறுநீரகப் பாதை வழியாக நகர்ந்து சென்று வெளியேறிவிடும். பெரிதாகிவிட்ட கற்கள் சிறுநீரகப் பாதையை அடைத்து சிறுநீர் வெளியேறத் தடங்கல் ஏற்படுத்தும். சில சமயங்களில், இவை மிகப் பெரிதாகி சிறுநீரகத் தொட்டியை அடைத்துக் கொண்டு, தொற்று மற்றும் தடை ஏற்படுத்தலாம்.

ஏற்படக் காரணம்

பெரும்பான்மையான கற்கள் கால்சியம் ஆக்சலேட்டு அல்லது கால்சியம் ·பாஸ்பேட்டு வகையைச் சேர்ந்தவை; மேற்கூறியது போல் யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட், சிஸ்டீன் கொண்ட கற்களும் சிலரில் உருவாகலாம். கற்களின் இரசாயனக் கூட்டமைப்பைப் பொறுத்து சிகிச்சை மாறுபடலாம். கற்கள் உருவாகக் காரணங்களை உணவுப் பழக்கம் சார்ந்தவை என்றும், மருத்துவம் சார்ந்தவை என்றும் பிரித்துக் கொள்வதுண்டு. உணவு சார்ந்த காரணங்களில், திரவங்கள் அருந்தும் அளவு குறிப்பிடத்தக்கது. குறைவாக திரவம் உட்கொள்பவர்களுக்கு சிறுநீர் குறைவாக உற்பத்தி ஆகி, கல் உருவாக்கும் பொருட் களின் செறிவு அதிகமாகிறது. தாராளமாக திரவங்கள், குறிப்பாகத் தண்ணீர், உட்கொண்டால் (குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர்) கல் உருவாகும் வாய்ப்பு குறைந்து விடுகிறது. மதுவகைகள், காப்பி, தேனீர் போன்றவை அருந்துவதால் கல் உருவாகும் வாய்ப்பு அதிகமாவதில்லை.

உணவு மற்றும் திரவங்களிலுள்ள கால்சியத்தை அதிகமாக உட்கொள்ளுவதால் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமில்லை. பால், தயிர் போன்ற உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பதால் கற்கள் அதிகம் உருவாகலாம். எனினும், கால்சியம் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக, அதிலும் வெறும் வயிற்றில், உட்கொண்டால் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம்.

மருத்துவக் காரணங்களில் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தக்கவை: நீடித்த வயிற்றுப்போக்கு உடையவர்கள், குடல் அறுவை சிகிச்சை ஆனவர்கள், சிறுநீரகக் கூற்றில் பிரச்சினை உடையவர்கள், சர்க்கரை நோய் உடையவர்கள், கவுட் எனப்படும் கீல் வாதம் உடையவர்கள், இணைத் தைராய்டு சுரப்பியின் மிகப்பு உடையவர்கள், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வகை மருந்து வகைகளை அதிகமாக உட்கொள்வோர் ஆகியோர்.

நோய்க்குறிகள்

சிறுநீரகக் கற்களுக்கான அறிகுறிகள் பல வகைப்படும். சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக் குழல்களுக்கு கற்கள் நகரும்போது இந்த அறிகுறிகள் மிகைப்படுகின்றன. குறிப்பாக - துடிக்க வைக்கும் வலி, கூடிக் குறையும் தன்மை கொண்டது. இருபது முதல் அறுபது நிமிடங்கள் வரை நீடிக்கும் அலைகளாக இவை தாக்கும். கல் இருக்கும் பக்கத்திலேயே வலி இருக்கும். கல் நகருவதைப் பொறுத்து வலி முதுகின் ஒரு பக்கமாகவோ, விலா எலும்புகளின் நடுவிலோ, வயிற்றுப் பகுதியின் கீழோ, பிறப்புறுப்புகளின் பக்கமாகவோ வலி இருக்கலாம். சிறுநீரில் இரத்தம் கழிதல், சிறிய கற்கள் சிறுநீருடன் வெளியேறுதல் ஆகியவை ஏற்படக்கூடும். வலி தீவிரமானால், வாந்தி, தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் வரலாம். சிலருக்கு நோய்க்குறிகள் ஏதுமில்லாமல் வேறு காரணங்களுக்காகச் சோதனைகள் செய்யும் போது சிறுநீர்ப் பாதையில் கற்கள் இருப்பது தெரிய வரலாம்.

கற்கள் இருப்பதை உறுதி செய்ய உங்கள் மருத்துவர் CT ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்டு சோதனைக்கு அனுப்பலாம். வயிற்றுப் பகுதியை சாதாரண எக்ஸ்ரே அல்லது ஐவிபி எனப்படும் விசேட எக்ஸ்ரே மூலமாகவும் பெரும்பான்மையான கற்கள் தென்படும். இன்றைய தேதியில் சிடி ஸ்கேன் சோதனையே சிறந்தது. எனினும், வேறு சோதனைகள் மூலமாகக் கற்கள் இருப்பது உறுதியானால் சிடி ஸ்கேன் எடுப்பது அவசியமில்லை.

சிகிச்சை

ஆரம்ப சிகிச்சை ஏறக்குறைய அனை வருக்கும் பொதுவானதே. வலி நிவாரண மருந்துகள் (Ibuprofen அல்லது Naproxen) போன்றவை முதல் நிலை சிகிச்சையாக வழங்கப்படுகின்றன. தண்ணீர் அல்லது இதர திரவங்களை தாராளமாக உட்கொண்டால் சிறுநீரின் அளவு அதிகமாகி கற்களை வெளியேற்றும் வாய்ப்பு அதிகரிக்கும். குமட்டல் அல்லது வாந்தி காரணமாக எதுவும் குடிக்க முடியாதவர்கள் மருத்துவமனைக்குச் செல்லுவது உசிதம்; அவர்களுக்கு இரத்த நாளம் வழியாக திரவங்கள் செலுத்தத் தேவைப்படலாம். வழக்கமாக மருத்துவர்கள் வடிகட்டியின் வழியே சிறுநீரை பாய்ச்சச் சொல்வார்கள். வடிகட்டியில் பிடிபட்ட கற்களை இரசாயன சோதனைக்கு அனுப்பி எந்த வகையைச் சேர்ந்தவை என்று தெரிந்து கொள்வது தடுப்புமுறை சிகிச்சைக்கு முக்கியம். 5 - 9 மி.மீ. அளவான கற்கள் வேறு சிகிச்சை ஏதுமின்றி வெளியேறிவிடும். ஆனாலும், 10 மி.மீ.க்கு மேலான கற்களை சிறுநீர்க்குழல் மூலம் வெளியேறுவது கடினம். அப்படிப்பட்டவர்களுக்கு மின் அலைகளைச் செலுத்திக் கல் நொறுக்குதல் (shock-wave lithotripsy) பரிந்துரைக்கப் படலாம். வேறு சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். வெகு சிலருக்கு நீர்க்குழல் உட்காட்டிச் (ureteroscope) என்ற செயல்முறை மூலம் கற்களை வெளியே எடுக்க வேண்டி வரலாம்.

தடுப்புமுறைகள்

தண்ணீர் மற்றும் திரவங்களை தாராளமாக உட்கொண்டால் (குறிப்பாக வெயில் காலத்திலும், வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் வாழ்பவர்களும்) எவ்வகைக் கற்கள் உருவாவதையும் குறைத்து விடலாம். ஒருமுறை கற்களை வெளியேற்றியவர்கள், கற்களின் ராசாயன மூலத்தை சோதித்து அறிந்து கொள்வது அவசியம். மேற்கூறியது போல், ரசாயன அடிப்படையில் சிகிச்சை மாறுபடும். இரத்த மற்றும் சிறுநீர் பரி சோதனைகளின் மூலம் மருத்துவக் காரணங்கள் புலப்படலாம். இவற்றை அறிந்து சிகிச்சை செய்வது மூலம், பின்னாளில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

கற்களின் இரசாயன மூலத்தைப் பொருத்து, உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை மாற்ற மருத்துவர் பரிந்துரைக்கக் கூடும். அடிக்கடி கற்கள் வெளியேற்றுபவர்கள் அல்லது குடும்பத்தினர் பலருக்கு இந்த உபாதை உடையவர்களுக்கு விரிவான பல பரிசோதனைகள் தேவைப்படக் கூடும்.

மேலும் விவரங்களுக்கு:
www.nlm.nih.gov/medlineplus/healthtopics.html
www.kidney.org
www.niddk.nih.gov

மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்,
சிறுநீரக சிகிச்சை நிபுணர்

© TamilOnline.com