நட்பின் ஈர்ப்பு
அன்புள்ள சிநேகிதியே,

இது கொஞ்சம் குழப்பமான விஷயம். நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். என் பெற்றோர் தந்த ஊக்கத்தாலும் கடவுள் அருளாலும் மிக உயர்ந்த பட்டங்களுடன் ஒரு உலகளாவிய பல்கலைக் கழகத்தில் நல்ல பதவியில் உள்ளேன். என் தாயாருக்கு வயது 65. அவர் ஓர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. அவர் பணியிலிருக்கும் போதும், பிறகும் அவருடைய சீனியருடன் மிக்க நன்றியுடனும் நட்போடும் பழகி வந்தார். 20-30 வருடத் தொடர்பு. இந்த சீனியர் சீமாட்டி கடந்த 12 வருடங்களாகத் தன் உறவினருடன் அமெரிக்காவில் குடியேறி நிறைய பிசினஸ் செய்கிறார்.

என்னைக் கண்கலங்க வைக்கும் பிரச்சினை இதுதான்: இந்த மாது இங்கு சில நாட்களும், இந்தியாவில் சில நாட்களும் கழிக்கிறார். இங்கோ அங்கோ சற்றும் சங்கோஜமே படாமல் என் அம்மாவை, ஒரு 'எர்ரான்ட் பெர்சன்' ஆக உபயோகிக்கிறார். அரசு உத்யோகத்தில் இருக்கும்போது காண்பித்த அதே கடினத்துடன் 'அந்த ஆபீசுக்குப் போய் இந்த சர்டிபிகேட் வாங்கி அனுப்பு', 'பேங்குக்குப் போய் பணம் டெபாஸிட் பண்ணு, வித்ட்ரா செய்து என் டிரைவருக்குக் கொடு', 'வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் இன்னாருக்கு நாடி ஜோசியம் பார்த்து வா' இன்னும் பல. சம்பளத்துக்கு வைத்திருக்கும் வேலையாளைவிட மோசமாக, விசுவாசியாயிருக்கும் என் அம்மாவை நச்சரிக்கிறார்.

இந்தியாவுக்குச் செல்லும் போது என் அம்மாவுக்கு சாதாரண ஹோட்டலில் 'ட்ரீட்' கொடுத்து மேலும் 'இல்ட்ரீட்' செய்கிறார். என் தாய்க்கோ இந்த அவமரியாதை புரியவில்லை. என் அம்மா இதை நட்பு என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் இராமன் ஆணை பெற்ற ஆஞ்சநேயரைப் போலச் செய்து முடிக்கிறார்.

'அவரைத் தப்பா பேசினா நீ என்னேடா பேசாதே' என்று சென்றமுறை நான் சென்னை சென்றிருந்த போது சொன்னதால் என் அம்மாவுக்கும், அவர் பெற்ற ஒரே மகனான எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை. என் ஒரே மகளைப் பார்க்கக்கூட வரவில்லை. சீனியரோ காரியமாகக் காஞ்சிபுரம் சென்றுவிட்டார். அந்தச் சீமாட்டியிடம் பேசியும் பிரயோஜனம் இல்லை. 'உன் அம்மாவாதான் இஷ்டப்பட்டு செய்யறா. நீ அவளையே கேட்டுக்கோ. பை த வே என் மருமகன் கரீபியன்லே மெடிசின் படிக்கறான், அவனுக்கு உன் ஹாஸ்பிடல்ல ஒரு ரொடேஷன் வாங்கித்தா' என்கிறார்! 70 வயது. அவரை மரியாதை பிறழாமல் கடிந்து கொள்ளவும் மனதில்லை. சென்ற முறை கொடிபோல ஒடிசலான என் அம்மா 70 கிலோவுக்குப் புடவை, நகை எல்லாம் இந்த மூதாட்டியின் பிசினசுக்காக அவர் 'ஆணையிட்டு' தூக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்து நானும் என் மனைவியும் கலங்கி விட்டோம்.

இதை எப்படி யாருக்கு எடுத்துச் சொல்லுவது?

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதரே...

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். உங்கள் தாயின் உதவி செய்யும் நோக்கத்தை உங்களால் மாற்ற முடியாது. நட்பு என்பது ஒரு விசித்திரமான, அந்தரங்கமான உறவு. வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து நட்புக் கொண்ட இருவரின் உள் உணர்ச்சிகள் மாறுபட்டு இருக்க வாய்ப்புண்டு. ஒரு வயதான தாய் பிறர் சுமையை ஏற்கும்போது, பெற்ற மகனின் மனம் துடிக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர் தன்னுடைய சிநேகிதிக்காக எந்தக் காரணத்துக்காக இதைச் செய்தாலும், தன் உடலில் சிறிது சக்தி இருக்கும்வரை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார். அவருக்கே தோன்றி முடியாமல் போகும் போதுதான் நிறுத்துவார்.

சிறு வயதில் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்டிப்பார்கள். 'அந்தப் பெண்ணுடன் பழகாதே. அவள் வீட்டில் அம்மா, அப்பா கண்டிப்பதில்லை. நீயும் அவளோடு ஊர் சுற்றாதே' என்று பெண்ணைப் பெற்றவர்கள் சொல்வார்கள். 'அந்தப் பையனுடன் விளையாடதே. நீயும் அவனைப் போல் பொறுப்பில்லாமல் படிப்பைக் கோட்டை விடுவாய்' என்பார்கள் பையனைப் பெற்றவர்கள். பெற்றோர் கண்டிக்கக் கண்டிக்க அந்தக் குழந்தைகளுக்கு அவர்களுடன் தான் சிநேகத்தை வலுப் படுத்தத் தோன்றும்.

நம் கண் எதிரிலேயே நம்மைச் சார்ந்தவர் களைப் பிறர் exploit செய்யும் போது மனதில் வெறுப்புத் தோன்றுவது நியாயமே. உங்களால் முடிந்ததைச் சொல்லி, செய்து பார்த்து விட்டுத்தான் இந்தக் கடிதம் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏதேனும் ஒரு பய உணர்ச்சியால் உங்கள் தாய் தொடர்ந்து செய்யாமல் இருக்க வாய்ப்பு உள்ளது - உடல் நலக்குறைவு, சுங்கப் பரிசோதனையில் வரும் பிரச்னை, பொருட்களை இழப்பது போன்றவை ஒரு மாறுதலைத் தரக்கூடும். ஆனால், அந்த அருமையான தாய்க்கு, சிநேகிதிக்கு அந்தச் சோதனை வரக்கூடாது.

இதை எழுதும் போது, பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தோழிகள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகமிகச் செல்வாக்கான குடும்பம். அவரது 12 வயதுப் பையன் அம்மாவுடன் அழுதுகொண்டே சண்டை போட்டுக் கொண்டு இருந்தான். காரணம், அப்பா பிள்ளைக்காகச் சிங்கப்பூரில் இருந்து டென்னிஸ் ராக்கட் வாங்கி, special coach ஏற்பாடு செய்து வைத்திருந்தார். இவன், அவர்கள் டிரைவர் பையனுடன் அடிக்கடி வெளியே போய் கோலியும், கில்லியும் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் விளையாட்டு, நட்பு (டிரைவர் மகன்) இரண்டுமே பெற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கோ அந்த நண்பனைப் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடுவது போல இருந்திருக்கிறது. அந்த நட்பின் ஈர்ப்புச் சக்தி பற்றி அந்தத் தோழியிடம் பேச அந்த வயதில் எனக்கு பேசுவதற்குப் பக்குவம் இருக்கவில்லை. பயமாகவும் வேறு இருந்தது.

This is just a side story. உங்கள் தாயின் UPS service விரைவில் மாறுதல் ஏற்பட என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com