பெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழா
கலி·போர்னியாவில் உள்ள பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் தமிழைக் கற்பித்தும், ஆய்வு செய்தும் பெரும் தொண்டாற்றி வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழை நிரந்தரமாகக் கற்பிப் பதற்காக நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் பத்து ஆண்டுகளாகச் சீரிய முறையில் செயல் பட்டு வருகிறது. 'தமிழ் இலக்கிய ஆராய்ச்சியுடன், தமிழ் கற்பிப்பதும், தமிழ் செம்மொழியாக மட்டும் நின்று விடாமல், வாழும் உயிர் மொழியாக என்றும் அமைய கணினி ஆராய்ச்சிகள் போன்றவையும் தொடர்ந்து நடக்கத் தமிழ்ப் பீடம் வழிகாட்டி வருகிறது' என்று கூறுகிறார் தமிழ்ப் பீடத்தின் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள்.

பத்தாண்டு நிறைவு விழாவை தமிழ்ப் பீடத்துடன் இணைந்து சான் ·பிரான் சிஸ்கோ தமிழ் மன்றம், கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், 'தென்றல்', வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கொண்டாட உள்ளன. 'இந்த நூற்றாண்டில் தமிழுக்குச் சீரிய சேவைகள் பல செய்துள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழாவாக இதை நடத்த விரும்புகின்றோம். கலைஞர் அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு அளித் திருக்கும் படைப்புகளையும், தமிழ் என்றும் வாழும் செம்மொழியாக அமைய அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டினையும் பாராட்டும் வகையில் இவ்விழாவை அமைக்க விரும்புகிறோம்' என்கிறார் பேரா. ஹார்ட்.

தமிழ்ப் பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழாவை ஒட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தமிழ்த் தொண்டைப் பாராட்டும் வகையில் அவரது படைப்புகளின் சிறப்புத் தொகுப்பு ஒன்றை பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடம் வெளியிட உள்ளது. இது தொடர்பாக அக்டோபர் 13, 2007 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு (PDT) ஒரு விழிம மாநாட்டில் (விடியோ கான்·பரன்ஸ்) பங்கேற்கக் கலைஞர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பெர்க்கலி தமிழ்ப் பீடத்தின் சேவைகள்

தமிழ் செம்மொழியாக இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டதில் பெர்க்கலி பல்கலைக் கழகம் பெரும்பங்கு வகித்திருக்கிறது. பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் 'தமிழ் ஏன் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டும்' என்று எழுதிய கருத்துக் குறிப்பு பலராலும் இணையத்திலும், மற்ற ஊடகங்களிலும் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது.

'தமிழ் கற்பிப்பதோடு மட்டுமின்றி தமிழைப் பரப்ப வருடாந்திர மாநாடு நடத்துவது, தமிழில் மேல்படிப்பைத் தொடர உதவித் தொகை அளிப்பது, வெளிநாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்களை வரவழைத்துப் பல்கலைக் கழகத்தில் போதிக்க வைப்பது போன்ற சேவைகளையும், பெர்க்கலி தமிழ்ப் பீடம் செய்து வருகிறது' என்று குறிப்பிடுகிறார் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் கௌசல்யா ஹார்ட். 2002-ல் வளைகுடாப் பகுதியில் நடந்த தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்ப் பீடம் 10,000 டாலர்கள் வழங்கி அதன் வெற்றிக்கு உதவியதையும் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வந்த தமிழ் அறிஞர்களில் பேரா. மறைமலை, எழுத்தாளர் திலீப் குமார், மதுரைப் பல்கலைக் கழகத்தின் பேரா. பாரதி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பேரா. முத்துசிதம்பரம் போன்றோரைக் குறிப்பிடுகிறார்.

பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் முதலாண்டுப் பட்டப் படிப்பில் 10 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 10 மாணவர் களும் இருக்கிறார்கள். முனைவர் பட்ட ஆராய்ச்சியில் 10 மாணவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். பெர்க்கலியின் தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் சுமதி ராமசுவாமி, ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன் மோனியஸ், லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன், நியூயார்க்கின் செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் அர்ச்சனா வெங்கடேசன், சான் ·பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகப் பேராசிரியர் விஜயா நாகராஜன் ஆகியோர். இவர்கள் தமிழ்த் துறை மட்டுமன்றி மதம், சரித்திரம் போன்ற துறைகளிலும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழிலும், தமிழ் பற்றியும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

பெர்க்கலி பல்கலைக் கழக நூலகத்தில் ஏறக்குறைய 10,000 தமிழ் நூல்கள் உள்ளன என்கிறார் பேரா. கௌசல்யா. தமிழ் குறித்த ஆங்கில நூல்களையும் சேர்த்தால் இன்னும் அதிகம் என்கிறார் அவர்.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள:

Dr. M.N. தமிழன், மின்னஞ்சல்: manny.tamilan@sbcglobal.net

Dr. பாலா பாலகிருஷ்ணன், மின்னஞ்சல்: bala_mcat@yahoo.com

சிவா சேஷப்பன்

© TamilOnline.com