'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை
நான் 17 வயது இளைஞன் அல்ல. தற்போதைக்கு 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. என்னைப் பற்றி எழும் விமர்சனங்களுக்கு எனது பேட்டிங் மூலம் பதிலடி தருவேன். கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் என்னிடம் சற்றும் குறையவில்லை. அதை மிகவும் நேசிப்பதால் தான் மீண்டும் களமிறங்க துடிக்கிறேன். ஆபரேஷன் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம் பெற வேண்டும் என கடுமையாக முயற்சிகள் செய்தேன். மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அறிவுரையின் பெயரில் எனது முடிவை மாற்றிக் கொண்டேன்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பத்திரிகையாளர்களிடையே அளித்த பேட்டியிலிருந்து...

பிரதர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய மூவரும் வெளிநாட்டில் படித்தவர்கள். பொருளாதார மேதைகள். அதனால்தான் நம் நாட்டு பொருளாதாரம் அவர்களுக்கு புரியவில்லை. அன்றாடம் மக்கள்படும் கஷ்டங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை.

அ.தி.மு.க பொதுசெயலரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதிலிருந்து...

எல்லோருக்கும் ஒரே மாதிரியான மூளைதான் அமைந்துள்ளது. எல்லோரும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட வேண்டும். வெற்றி தோல்வி என்பதை நமது செயல்களுக்குக் கிடைத்த பதிலாகவே நாம் கொள்ள வேண்டும். அந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன் பேசியதிலிருந்து...

இன்றைய கல்விமுறை மாணவரின் மதிப்பெண் தகுதி, விருது அடிப்படையில் எடை போடப்படுகிறது. ஆனால் எப்படிச் சிந்திக்க வேண்டும். எப்படி நுணுகி ஆராய்வது என்பதைக் கற்பிக்கும் வகையில் நமது கல்வி முறை இருக்க வேண்டும். எனவே, இந்தியாவின் நன்னெறிகள், பண்பாடு, மதிப்பீடு ஆகியவற்றை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். இப்பாடங்கள் இருந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் கற்றுக் கொள்வர். தற்கொலை துயரம் இருக்காது.

தமிழக ஆளுநர் பர்னாலா மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதிலிருந்து...

நடிகர்கள் ஊழலில்லாத ஆட்சியை அமைப்பேன் என்கின்றனர். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை முதலில் யோசிக்க வேண்டும். நடிப்பதற்காக தாங்கள் வாங்கும் சம்பளத்தையே எல்லாப் பணத்தையும் வெள்ளைப் பணமாக வாங்காமல், ஒரு பகுதியை ஏன் கறுப்பு பணமாக வாங்குகின்றனர்? அதற்கு என்ன அர்த்தம்! வெள்ளைப் பணமாக வாங்கினால் அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும். கறுப்பு பணமாக வாங்கினால் வரி ஏய்ப்பு செய்து விடலாம் என்பதற்காகவே வாங்குகின்றனர். ஆக, தங்கள் சம்பளத்திலேயே அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் எப்படி ஊழலில்லாத ஆட்சியைத் தரமுடியும்...?

நடிகர் நாசர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியிலிருந்து...

மத்திய அரசும், தமிழக அரசும், 'ஓட்டு' முறையால் ஏற்பட்டவை அல்ல; அவை கூட்டணி என்ற 'ஒட்டு' முறையால் ஏற்பட்டவை. அஸ்திவாரமில்லா கட்டடம் போல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உள்ளது. தனிநபர் வருமானம் மேம்படும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட மாணிக்கக் கல்லை விட்டுவிட்டோம். தி.மு.க ஆட்சியை அகற்ற கூட்டு அதிரடிப்படை போல அ.தி.மு.க தொடர்ந்து போராட வேண்டும்.

அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியதிலிருந்து...

கேடிஸ்ரீ

© TamilOnline.com