ஆகஸ்டு 2004: வாசகர் கடிதம்
தென்றல் பத்திரிகையை இங்கு வந்த நாட்களாகத்தான் பார்க்கிறேன். படிக்கிறேன். அக்கம்பக்கம் பழக முடியாத சூழ்நிலையில் தமிழை மறக்காமல் அனைவரும் படிக்கக்கூடிய அருமையான பத்திரிகை. என்னதான் அமெரிக்காவின் வசதிகளை நாம் அனுபவித்தாலும் சிறு வயது முதல் நாம் பயின்ற தமிழை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் தாய்மொழி, தமிழ் மொழியை மறப்பது தாயை மறப்பதற்குச் சமம். தெ. மதுசூதனன் அவர்கள் கல்கியைப் பற்றி எழுதியதைப் படித்ததும் என் மனதில் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் பற்றிய நினைவுகள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன.

ஜெயலட்சுமி சேஷாத்திரி.

*****


தென்றலில் வரும் குறுக்கெழுத்துப் புதிரை நான் மிகவும் ரசித்து நிரப்புகிறேன். வெவ்வேறு வயதினருக்கான நல்ல, தரமான குறுக்கெழுத்துப் புதிர்களும், நொடிகளும் (puzzles) தமிழில் உள்ளனவா? எனக்கு அந்த விவரங்களைத் தரமுடியுமா? இந்தியாவில் கிடைக்குமொன்றாலும் சொல்லுங்கள். நான் நண்பர்கள் மூலம் தருவித்துக் கொள்வேன். நேர்த்தியான உங்கள் புதிர்களைத் தென்றலில் தொடர்ந்து வெளியிடுங்கள்.

டாக்டர் ராமநாதன் முருகநாதன், டல்லஹாசி, ·ப்ளோரிடா.

*****


ஜூலை மாதத் தென்றலில் பிரசுரமான மாயாபஜார் பகுதி மிகவும் அருமை. தெரியாத சாத வகைகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். சமையல் கலையில் கற்றது கை மண்ணளவு என்றால் கல்லாதது கடல் அளவு என்ற உண்மையைப் புரிய வைத்த தென்றல் என்ற ஆசானுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

உஷா முத்துராமன், நியூ ஜெர்சி

*****


தென்றல் ஜூன், 2004, இதழ் படித்தோம். ரசித்தோம். பி. லீலாவின் பேட்டி பிரமாதமாக இருந்தது. தமிழ்நாட்டில் பிரசுரமாகும் வார பத்திரிகைகளில் வரும் பேட்டிகளை விடவும் இன்னும் உயர்தரமாக இருந்தது. இந்த பேட்டியில் 'எம்.எல். வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், எம்.எஸ். அம்மா என்ற மூன்று ஜம்பாவான்கள்' என்ற ஒரு தொடர் கண்டதும் இனிமையான பழச்சாறு பருகும்போது திடீரென்று நாக்கில் புளிப்பு ருசி வந்தது போல் ஆகிவிட்டது. முதலில் 'ஜாம்பவான்' என்பது சொற்பிழை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். ராமாயணத்தில் வரும் ஜாம்பவான் ஒரு கரடி. உடல் முழுவதும் உரோமத்துடன் காட்சி அளிப்பார். மென்மையான இசைக் குயில்களை இவ்வாறு ஜாம்பவான் என்று குறிப்பிட்டதை நினைத்துப் பார்த்தால் ஒரே 'இது'வாக இருந்தது.

மற்றபடி ஜூன் இதழ் வழக்கம் போல் மணம் கமழ்ந்தது.

லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் [இத்தகைய இடங்களில் 'ஜாம்பவான்' என்பது உருவத்தைக் குறிப்பது அல்ல. 'ஒரு துறையில் ஆழங்கால் பட்ட மேதை' என்று பொருள்படும்.]

*****


சபாஷ், அம்பா ராகவன் கட்டுரை, புஷ்பவனம் குப்புசாமி நேர்காணல் மிக கவர்ச்சியாக உள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காஞ்சி சுவாமிகளின் குறிப்புகளை மனதார வரவேற்கிறேன். தவிரப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களின் கண்ணியமான அழைப்பைத் தமிழ்நாட்டு அரசு நல்லமுறையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருதி ஒத்துழைப்புத் தரவேண்டும்.

இரண்டு பிரதானக் கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று மோதி மாறிமாறி ஆட்சிக்கு வந்ததை மக்கள் விரும்பவில்லை. இனியாவது இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசி நல்லதொரு முடிவுக்கு வந்து தமிழ்நாட்டு மக்கள் கட்சி என்ற பெயரில் துவங்கி தமிழ்நாட்டுக்கு மிக தேவையான திட்டங்களை தீவிரமாக அமுல்படுத்த இது முக்கியமான சந்தர்ப்பம்.

ஏனெனில், மத்தியில் தற்சமயம் 23 தமிழ்நாட்டு மந்திரிகள் இருக்கிறார்கள். பாரத தேசத்திலலேயே நம் தமிழ்நாடு முதல் ஸ்தானம் வகிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக நாம் வைக்க வேண்டும். காற்று உள்ள பொழுதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பழமொழியை மறக்கலாகாது.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com