புகாரி கவிதைகள்
கனடாவில் வசிக்கும் புகாரியின் கவிதைகளை மின்னிதழ்கள், மடற்குழுக்கள் என்று இணையமெங்கும் பரவலாகக் காணலாம். நா.பா. தனது 'தீபம்' இதழில் தொடர்ந்து இவரது பல கவிதைகளைப் பிரசுரித்துள்ளார். 1986-ல் அதில் வெளிவந்த இவரது 'உலகம்' கவிதையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை தனது ஆண்டு மலரான 'வார்ஷிகி-86'- இல் ஆங்கிலத்தில் பிரசுரித்தது.

தொகுப்புகள் :

வெளிச்ச அழைப்புகள் (2002), அன்புடன் இதயம் (2003), சரணமென்றேன் (2004), பச்சை மிளகாய் இளவரசி (அச்சில்). இதில் 'அன்புடன் இதயம்' தொகுப்பு தமிழ் உலகம் மடற்குழுவின் மூலம் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் வெளியிட்டது ஒரு புதுமை. தனிக் கவிதைகளுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

"தென்னங்கீற்றுக்களைப் போல வாரி வகிடெடுத்த" ஊரான ஒரத்தநாட்டைச் சேர்ந்த புகாரி, கனடாவில் வானொலிச் சேவைகள் மூலமும் தமிழ்மணம் பரப்புகிறார்.

வருகின்றான்

வானம் உடைக்கும் உளியோடு - இந்த
வையம் பிளக்கும் வாளோடு
யாரோ ஒருவன் வருகின்றான் - அவன்
எழுதும் போதே வாழ்கின்றான்.

*****


கவிதைகள்

மரபுக் கவிதைகள்
மடிசார்ப் புடவைகள்
அச்சு மாறாமல்
கட்டுதல் வேண்டும்

புதுக் கவிதைகள்
நவீன ஆடைகள்
விருப்பம்போல
இட்டுக் கொள்ளலாம்

துளிக் கவிதைகள்
நீச்சலுடைகள்
இயன்றவரைக்கும்
வெட்டுதல் வேண்டும்

அனைத்தும் அழகுதான்
அனைத்துக் குள்ளும்
பொம்மைகள் இன்றி
உயிர்கள் இருப்பின்

*****


பதட்டமாய் இருக்கிறது

நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தனர்
பிள்ளையாக

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கதிரவன் பிறக்கிறான்
எப்போதும்

செத்தே
பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது
*****


கும்பகோணத்தில்.....

ஒருபிஞ்சா இருபிஞ்சா
ஒருநூறு பிஞ்சன்றோ
அம்மம்மா.....
ஒருநூறு பிஞ்சன்றோ

ஒரு நாளில் ஒரு பொழுதில்
உயிரெங்கே உறவெங்கே
அம்மம்மா.....
உயிரெங்கே உறவெங்கே

உதிரத்தில் உறவுநெய்து
உயிர்விட்டு உயிர்வளர்த்துப்
பறிகொடுத்த ....
உயிர்க்கெல்லாம் பதிலுண்டோ

கல்விதேடும் பிள்ளைகளைக்
காசுதேடும் பள்ளிகளே
கண்மூடிக்...
கொளுத்திவிட்டீர் பாவிகளே

பார்த்தமனம் துடிக்கிறதே
பெத்தமன நிலையென்ன
ஐயகோ...
பாசத்தின் வலியுமென்ன

அதற்கும்முன் அஞ்சலியாய்
அமைதிகாத்துச் சிலநிமிடம்
மெளனத்தில்....
ஆழ்ந்திருப்போம் வாருங்கள்.

*****


கல்·ப் ஏர்வேஸ்

© TamilOnline.com