கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை
எழிலான பட்டுச் சேலைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற ஆரெம்கேவி (RMKV) நிறுவனம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை முன்னமேயே பெற்றுள்ளது. அத்துடன் நில்லாது சமீபத்தில் உலகச் சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

நாமெல்லாம் ஆறு கஜம் புடவை அன்றாடம் பார்க்கிறோம். ஒன்பது கஜம் புடவை விசேட நாட்களில் வெளியே வரும். யாராவது பெரியவர்கள் கட்டி விட்டால் சற்றுச் சிரமத்துடன் பூஜைநேரம் முடியும் வரை பெண்கள் இதில் வளைய வருவர்.

ஆனால் ஆரெம்கேவி படைத்துள்ளதோ, மூச்சைப் பிடித்துகூ கொள்ளுங்கள், 124 மீட்டர் (704 அடி) நீளமுள்ள பட்டுப்புடவை! Statue of Liberty-யின் உயரத்தை இரண்டு பங்காக்கினால் இதன் நீளம் கிடைக்கும். எடை 30 கிலோ. இதன் மதிப்பும் கனமானதுதான். யூகித்துப் பாருங்கள். சரி, நாங்களே சொல்லி விடுகிறோம். 15 லட்சம் ரூபாய் மட்டுமே.

மகாபலிபுரத்தில் அலைவீசும் கடல், அர்ச்சுனன் தபசு, ரதங்கள், அங்கே சிற்பங்களில் காணப்படும் யானைகள், சிங்கங்கள், மான்கள், குரங்குகள் என்று அழகுக் களஞ்சியமாக விளங்குகிறது இச்சேலை. கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே நெய்யப்பட்டது இந்த அரக்கு வண்ணத்தில் கண்ணைப் பறிக்கும் சேலை என்கிறார் ஆரெம்கேவி நிறுவனத்தின் பங்குதாரர் கே. விஸ்வநாதன்.

ஆறு நெசவாளர்கள் 16 கைவினைக் கலைஞர்களின் உதவியோடு 10000 மனிதமணிகள் நேரம் (manhours) உழைத்ததில் உருவானது இஆந்த உலக அதிசயம்.

ஆனால் இது ஒரு திடீர் துவக்கமல்ல. முன்பே ராஜா ரவிவர்மாவின் அமர ஓவியமான ஹம்சதமயந்தி, பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே, பத்மநாபபுரம் கோட்டையிலுள்ள அலங்காரம் என்று பலவித அழகுகளைப் பட்டுக் காவியமாக நெய்து மத்திய அரசின் பல பரிசுகளை வென்றுள்ளது ஆரெம்கேவி. நீங்கள் http://www.rmkv.com என்ற தளத்தில் போய்ப்பாருங்கள். சொக்கிவிடுவீர்கள்.

இதன் தொடர்ச்சி தான் மகாபலிபுரத்தின் புராதனப் பெருமையைச் சுமக்கும் இந்தப் பெருங்காவியம். கின்னஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே அங்கீகாரம் வரும் என்ற ஆவலோடு இருக்கிறது. இது இந்தியாவின் பட்டு நெசவு நேர்த்திக்கான அங்கீகாரமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

கேடிஸ்ரீ

© TamilOnline.com