வரலட்சுமி விரத வழிமுறைகள்
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் பொருட்¡க வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தாழம்பூ. குடுமியுடன் தேங்காய் போன்று பலவகைப் பொருட்கள் கிடைக்காத அமெரிக்காவிலும், இருப்பதைக் கொண்டு மந்திரங்கள் பதிந்த ஒலிநாடாவைப் போட்டு மிகம் பக்தி சிரத்தையுடன் இந்தப் பூசை செய்து வருவது போற்றத்தக்கது.

முதல் நாள் செய்ய வேண்டியவை :

முதல் நாள் காலை தலைக்கு குளித்துவிட்டு பச்சரிசி இட்லிக்கு அரைக்க வேண்டும். வெல்லக் கொழுக்கட்டைக்குப் பூர்ணம், அப்பம், இழை கோலம் போட மாவு முதலியவற்றைத் தயார் செய்து கொள்ளலாம்.

அம்மன் அழைக்க வாசல் அருகில் இருக்கும் அறையிலும், அம்மனை வைத்துப் பூசை செய்யப்போகும் இடத்திலும் இழைகோலம் போட வேண்டும். கலசச் செம்பின் அடியின் சுண்ணாம்பு பூசி, கலசச் செம்பிலேயே அம்மன் முகத்தை வரையலாம். மாலையில் வாசலுக்குப் பொடிக்கோலம் போட வேண்டும்.

பூசைக்குத் தேவையானவற்றுடன் கறுப்பு நூல் கலக்காத ஜாக்கெட் துணி, கருகமணி ஆகியவை அவசியமானது.

பூசையன்று செய்ய வேண்டியவை:

வாசல் அருகில் போடப்பட்டுள்ள கோலத்தில் அம்மனை வைத்துப் பூசை செய்து ஆரத்தி எடுத்து மனமுருகப் பிரார்த்தனை செய்து வரலட்சுமி அம்மனை உள்ளே அழைக்கும் பாடலை பாடிக்கொண்டே இரண்டு சுமங்கலிப் பெண்கள் அம்மனைப் பலகையில் வைத்து மெதுவாக உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

நம்முடைய சொந்தத் தாயார் நம் வீட்டிற்கு வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ அந்த அளவு மகிழ்ச்சியுடன் அம்மனை வரவேற்க வேண்டும்.

அன்று மாலை கொண்டைக்கடலை சுண்டல், பழம், பாக்கு, வெற்றிலையுடன் நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுக்கவும். இரவு ஆரத்தி சுற்றவும். (சிறிது சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை தண்ணீரில் கரைக்கவும். இதுவே ஆரத்தி எனப்படும்.)

மறுநாள் செய்ய வேண்டியவை:

புனர்பூசைக்கு பருப்பு, பாயசம், தயிர்சாதம், எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அன்று மாலையும் பழம், பாக்கு, வெற்றிலை நிவேதனம் செய்து சுமங்கலிகளுக்கு கொடுக்கவும். இரவு கலசத்துடன் அம்மனை எடுத்து அரிசிப் பாத்திரத்தில் வைத்து மூடிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ கலசத்தையும், அம்மன் முகத்தையும் பாதுகாப்பாக வைத்துவிடலாம்.

அன்று செய்ய வேண்டிய நிவேதனங்கள் :

பாயசம், வடை, அப்பம், பச்சரிசி இட்லி. பூசை செய்த பெண்கள் பலகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com