கொழுக்கட்டை வகைகள்
தேங்காய்க் கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்

அரிசிமாவு - 2 கிண்ணம்
வெல்லம் - 1 1/2 கிண்ணம்
தேங்காய் மூடி - 1 (பெரியது)
ஏலக்காய் - 6
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

அரிசி மாவின் அளவுக்கே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு சிறிது போட்டு, நல்லெண்ணெய் விட்டுக் கொதிக்கும் போது மாவைச் சிறிது சிறிதாய் போட்டுக் கட்டி இல்லாமல் கிளறி ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து மாவை அதில் போட்டு மூடி வைக்கவும்.

தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அடுப்பில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கும் போதே தேங்காய்த் துருவலைப் போட்டு நன்றாகக் கிளறி, கைக்குப் பிசுக்காகச் சுருண்டு வரும் போது ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கிக் கொள்ளவும்.

அரிசி மாவில் ஒரு சிறு எலுமிச்சை பழம் அளவு எடுத்து, விரலில் எண்ணெய் தொட்டுக் கொண்டு மெல்லியதாகக் கிண்ணம் போல் செப்பு செய்து அதற்குள் பூரணம் வைத்து மூடிக் கொழுக்கட்டை செய்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி அல்லது வாழையிலை போட்டு ஆவியில் கொழுக்கட்டைகளை வேக விடவும். சிலர் பூரணத்திற்குக் கடலைப் பருப்பை சிவக்க வாணலியில் வறுத்துப் பொடி செய்து சேர்த்துப் போட்டுச் செய்வார்கள். இதுவும் மிகச் சுவையாக இருக்கும்.


தங்கம் ராமசாமி

© TamilOnline.com