ஒளிவீச நீங்கள் தயாரா?
டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்

"உங்கள் முன் பேச அளித்த வாய்ப்புக்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பேச்சாளர் அமர்ந்தார். அரங்கமே எழுந்து நின்று உரத்த கரவொலி செய்தது. தனது பளிச்சிடும் உரையினால் பேச்சாளர் அவர்களை மந்திரத்தால் கட்டுண்டது போலாக்கிவிட்டார்.

அந்தப் பேச்சாளராக நீங்கள் இருந்தால்! ஒரு தனி நபராகவோ அல்லது தொழில்ரீதியிலே நல்ல பேச்சுத் திறன் உங்களுக்கு மிக முக்கியமானதா? ஒரு குழு அல்லது கூட்டத்தின் முன் பேசுகையில் ஏற்படும் நடுக்கத்தையும், தயக்கத்தையும் நீங்கள் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் விரும்புகிறீர்களா? உங்களது பேச்சின் தாக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா? கவர்ந்திழுக்கும் பேச்சாளராக இருப்பதில் வரும் கவுரவமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு விருப்பமா? இந்த கேள்விகளில் எதற்கேனும் 'ஆமாம்' என்று நீங்கள் சொல்லியிருந்தால், உங்களுக்குத் தேவைப்படுவது 'டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்' (Toastmasters Club).

என்ன அது?

தனது எண்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் 'பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ்', பேச்சுக்கலைக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்பாகும். பேச்சுத் திறன், கிரகிக்கும் திறன் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றைத் தனது கிளைகளின் மூலம் பலருக்கும் கற்பித்து, அவர்களது தலைமைப் பண்புகளையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும் வளர்த்து மானுடகுலத்தின் உயர்வுக்குத் துணைபுரிகிறது.

1924-இல் தொடங்கிய இச்சங்கம் புகழிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இன்றைக்குச் சுமார் 170,000 உறுப்பினர்கள் 50 நாடுகளில் 8,000 சங்கங்களில் செயலாற்றி வருகின்றனர். கனவுகளை நனவாக்க ஆற்றல் தரும் இச்சங்கம் மனிதர்கள் தமது இலக்கை அடைய வழிகாட்டுகிறது.

சங்கக் கூட்டத்தில் என்ன நடக்கும்?

டோஸ்ட்மாஸ்டர்ஸ் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆதரவான குழுக்களில் பேசுவதன் மூலம் கற்கிறார்கள். சாதாரணமாக ஒரு சங்கத்தில் 15 முதல் 20 பேர்கள் வாரம் ஒருமுறை ஒருமணிநேரம் கூடுவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பேச வாய்ப்புக் கிட்டும்.

கூட்டம் நடத்துதல் - ஒரு கூட்டத்தை நடத்தும் விதம் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஒவ்வொரு முறையும் துவங்கும்.

தயாரிப்பின்றிப் பேசுதல் - ஒவ்வொருவரும் 2 நிமிடங்களுக்குத் தயாரிப்பின்றி, தரப்பட்ட தலைப்பில் பேசுவர்.

தயாரித்த சொற்பொழிவை வழங்குதல் - மூன்று அல்லது அதிக உறுப்பினர்கள் சேர்ந்து சங்கத்தின் பேச்சுக்கலை மற்றும் தலைமைப் பண்புகள் பயிற்சிக் கையேட்டிலிருக்கும் செயல்பயிற்சிகளை வழங்குவர். இது பொதுவாக பேச்சை ஒழுங்கு செய்தல், குரல்வளம், மொழிவளம், சைகைகள் மற்றும் தாக்கம் ஏற்படுத்தல் ஆகியவை குறித்ததாக இருக்கும்.

ஆக்கபூர்வமான மதிப்பீடு செய்தல் - ஒவ்வொரு பேச்சாளருக்கும் ஒரு மதிப்பீட்டாளர் இருப்பார். அவர் சொற்பொழிவின் குறைநிறைகள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைச் சொல்வார்.

இச்சங்கம் ஒரு நிரூபணமான கல்வித் திட்டம் கொண்டது. சங்கத்தில் சேர்ந்தவுடன் அவருக்குக் கையேடுகள் வழங்கப்படும். புத்தகங்கள், விழிம நாடாக்கள் மற்றும் ஒளிநாடாக்களும் அவர் இங்கிருந்து பயன்படுத்தலாம். பயிற்சியின் மூலமும், பரஸ்பர ஊக்குவிப்பு மூலமும் அங்கத்தினர்கள் தத்தம் தலைமைப் பண்புகளை படிப்படியாய் வளர்த்துக் கொள்கின்றனர்.

எந்தக் கூட்டத்துக்கும் விருந்தினர் வரலாம். அவர்களுக்கு அது இனிய வரவாக இருக்கும். மேடைப் பேச்சு என்பது அச்சம் தருவது என்பதையும், முதன்முறை மேடையேறத் துணிச்சலை வருவித்தல் மிகச் சிரமமான முதல் கட்டம் என்பதையும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தக் கட்டத்தைத் தாண்டியே வரவேண்டியிருக்கிறது. நீங்களும் பல சங்கங்களின் கூட்டங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். எந்தவிதக் கட்டாயமோ, எதிர்பார்ப்போ இல்லை.

சங்கங்கள் அளவிலும், வழக்கங்களிலும், இடவசதியிலும், கூடும் நேரங்களிலும், உணவு ஏற்பாடுகளிலும் மாறுபட்டவையாய் இருக்கின்றன. எனவே, உங்களுக்கு எது பொருந்தும் என்பதை அறிய 'வேவு பார்த்தல்' நல்லது தான்.

இந்தச் சங்கத்தில் நான் சேர்ந்தது எனக்கு நான் கொடுத்துக் கொண்ட மிக அற்புதமான பரிசாகும். நல்ல பேச்சாளராகவும், செவிமடுப்பவராகவும் ஆனதுடன், எனது தன்னம்பிக்கையை வளர்த்து, ஏராளமான நண்பர்களையும் தந்திருக்கிறதே இந்த அமைப்பு! எப்படி மறக்க முடியும்?

இன்னும் அறிய வேண்டுமா:http://www.toastmasters.org

ஆரிஸன் எஸ். மார்டனின் ஒரு பொன்மொழியை நினைபடுத்திக் கொள்வோம். "கச்சா வைரத்துக்குப் பட்டை தீட்டுவது எப்படியோ, அப்படித்தான் ஒரு மனிதனுக்குப் பேச்சுத் திறமையும். தீட்டுவதனால் வைரத்தில் எந்தப் பொருளும் சேர்வதில்லை. அதனுள்ளிருக்கும் விலைமதிப்பை அது வெளிக் கொண்ர்கிறது."

என்ன, பட்டை தீட்டப்பட நீங்கள் தயாரா?

ஆங்கிலத்தில் ஜெயஸ்ரீ ரங்கராஜன், (Advanced Toastmaster - Bronze Level, Xilinx Xpressionists Toastmasters Club)

தமிழில் :மதுரபாரதி

© TamilOnline.com