வாழ்த்துங்கள், வாழுங்கள்!
'வாழ்க வளமுடன்' - இந்த .ரண்டு சொற்களை நம் நாபிக் கமலத்திலிருந்து அனுபவித்துச் சொல்லும்போது நம்மிடமிருந்து வாழ்த்துப் பெறுபவருக்கும், நமக்கும் ஒரு பாலமாக அமைந்து எண்ணற்ற பலன்களைத் தருகின்றது. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒவ்வொரு தவத்தின் முடிவிலும் சுற்றத்தை நண்பர்களை உலகத்தை நீர்நிலைகளை, எல்லாவிதமான பொருட்களையும் வாழ்த்த வேண்டும் என்று தவமுறைகளை வைத்திருக்கிறார். தவமுடிவில் நம் மனமானது நிர்மலமாக எந்தவிதமான ஆசாபாசமும் இல்லாமல் இருப்பதால் அந்த வாழ்த்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உங்களிடம் விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கும் சினேகிதரோ அல்லது அலுகலக நண்பர்களோ இருக்கிறார்களா? தவம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, கண்களை மூடி அவர்கள் உருவத்தை மனதால் நினைத்தும் வாழ்த்தலாம்; அல்லது அவர்களை நேருக்கு நேராகச் சந்திக்கும் போது அவர்களைப் பார்த்து மனதால் அவர் பெயரை உச்சரித்து 'வாழ்க வளமுடன்' என்று மனதிற்குள் கூறிக் கொள்ளலாம். அவர் எதிரில் வாய் அசைத்துக் கூறினால் அவர் திட்டுவதாக நினைக்கப் போகிறார்!

ஒரு சமயம் அடுத்த வீட்டாருடன் சுற்றுச்சுவர் பற்றி ஒரு கேஸ் நடந்தது. நாங்கள் வாங்கியதற்கு ஆதாரம் இருந்தும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதுபற்றி நான் மகரிஷியிடம் விளக்கம் கேட்டேன். அவர் "உனக்குச் சேர வேண்டிய நிலமாக அது இருந்தால் உனக்குக் கண்டிப்பாக கிடைக்கும். சூரியத்தில் நின்று வாழ்த்துப் போட்டுக் கொண்டு வா" என்று கூறினார். அதுபோல் கிழக்கில் இருந்த பாகத்தில் கிடைக்க வேண்டிய அளவுக்கே எங்களுக்கு மேற்குபூ பக்கத்தில் கிடைத்தது. வழக்கு நடந்ததே என்று எங்கள் நட்பு உடையவில்லை. இப்போதும் நாங்கள் நண்பர்களாக, பக்கத்து வீட்டு சுகதுக்கங்களில் கலந்து கொண்டும் எதையும் பாராட்டாமல் நடந்து கொள்கிறோம்.

என் மகனை RECயில் சேர்த்த சமயம், புதியவர் சீண்டல் (ragging) பற்றி வித விதமாகக் கேள்விப்பட்டு மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம். "நான் உனக்கு வாழ்த்துக் கோருகிறேன்" என்று கூறி ஒவ்வொரு நாளும் தவம் செய்யும் போது அவனை வாழ்த்திக் கொண்டே இருந்தேன். அத்துடன் அங்கு சீண்டும் மாணர்களில் முதன்மையானவனின் பெயரை அறிந்து அவனை வாழ்த்திக் கொண்டே இருந்தேன். என் மகனிடம் அந்தப் பையனைப் பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் வாழ்த்துச் சொன்னேன். அதனால் பெரியதாக எந்தக் கஷ்டத்திலும் மாட்டிக் கொள்ளாததோடு, போய்ச் சேர்ந்த உடனே என் மகன் வளாக நேர்காணல் நடத்தும் செயற்குழுவுக்குத் தலைவனாகவும் இருந்ததால் அந்தப் பையனுக்கும் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் நல்ல வேலைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தை அனைவரும் உச்சரித்து வாழ்க்கையில் உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம்.

வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

ஜெயலக்ஷ்மி சேஷாத்திரி

© TamilOnline.com