பி.சுசிலா - அமுதை பொழியும் நிலவே....
தென்னகத்திரைவானில் தன்னுடைய தனித்து வமான குரல்வளத்தால் தித்திக்கும் பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றவர் பின்னணி பாடகி திருமதி பி. சுசிலா.

1952இல் தெலுங்கில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான சுசிலா இன்றுவரை திரைஇசை வரலாற்றில் தனக்கென்று தனித்த முத்திரை பதித்தவர். தனது இனிய குரல்வளத்தால் உணர்ச்சிக்கும் உச்சரிப்புக்கும் உத்தரவாதம் தரும் குரலில் பல்லாயிரக்கணக்கான அமுதப் பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் என்று பல மொழி திரைப்படங்களில் இருபத்தையாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகிக்காக 1969, 1971 , 1977, 1983, 1989 ஆகிய ஆண்டுகளுக்கான தேசிய விருது பெற்றவர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சிறந்த பின்னணிப் பாடகி விருதுகளை பல ஆண்டுகள் பெற்றவர். தமிழக அரசு 1968, 1980, 1981, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

சுசிலா 1935ல் ஆந்திர விஜயநகரத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே இசையார்வம் மிக்கவராக இருந்துள்ளார். இவரது குடும்பமும் இசையார்வம் மிக்க குடும்பமாகவே இருந் துள்ளது. சுசிலாவின் இசையார்வத்தை தக்க வாறு வளர்க்க முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்பதற்கு ஏற்பாடாயிற்று.

பள்ளியில், விஜயநகரத்தில் எங்கு பாட்டுப் போட்டி நடந்தாலும் கலந்து கொண்டு முதற்பரிசு பெற்றுவந்தார். வானொலி சிறுவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அடிக்கடி பாடி வந்தார். விஜயநகர இசைக் கல்லூரியில் டிப்ளமா படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். தொடர்ந்து இவரது இசை ஆர்வமும், இசை பயிற்சியும், இனிமையான குரல்வளம் மிக்க பாடகியாக அதன் நுட்பங்களை அறிந்தவராக சுசிலாவின் ஆளுமை புடமிடப்பட்டது.

1950களில் இசை அமைப்பாளர் பெண்டியாலா நாகேஸ்வரராவ் நல்ல பின்னணிப் பாடகிகளைத் தேடிக் கொண்டிருந்தார். வானொலி நிலையத் தாரிடம் ''உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நன்றாகப் பாடுபவர்களில் சினிமாவில் யாருக்காவது பாட ஆர்வம் இருப்பின் அவர்களை என்னிடம் அனுப்புங்கள்'' என பெண்டியாலா கூறியிருந்தார்.

வானொலி நிலையத்தார் ஐந்து பேரை அனுப்பியிருந்தார்கள். அதில் ஒருவர் சுசிலா. ஐவருக்கும் குரல்வள பரிசோதனை நடத்தினர். முடிவில் சுசிலா தேர்தெடுக்கப்பட்டார்.

1953இல் ஜி. வரலட்சுமி, ஏ. நாகேஸ்வரராவ் ஆகியோரை கதாநாயகர்களாகக் கொண்டு 'பெற்றதாய்' (தெலுங்கில் கன்னதல்லி) இருமொழிப் படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ஏ.எம். ராஜாவுடன் பி.சுசீலா இணைந்து பாடினார். 'ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு' என்பது பல்லவியின் முதல்வரி.

பின்னணிப் பாடகியாக அறிமுகமான பின்னர் ஒரு சில ஆண்டுகள் ஏ.வி.எம். ஸ்டூடியோடிவில் சுசீலா மாதச் சம்பளம் பெற்று பின்னணிப் பாடகியாக இருந்தார். இந்தக் காலத்தில் தமிழில் பாடும் போது தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டுமென்பதற்காக மெய்யப்பச் செட்டியார் அவர் நிறுவனத்திலிருந்த தமிழ் தெரிந்த ஒருவரைக் கொண்டு தமிழ் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இந்தப் பயிற்சி தமிழில் சரியான உச்சரிப்புடன் பாட உதவியது.

1955 இல் வெளிவந்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சுசீலாவை இனங்காட்டின.

'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ, கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ',

'உன்னைக் கண் தேடுதே - உன் எழில் காணவே உளம் நாடுதே' - போன்ற பாடல்கள் சுசீலாவின் குரல்வளத்தை நன்கு வெளிப்படுத்தின.

இதே ஆண்டில் வெளியான 'மிஸ்ஸியம்மா' படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சுசீலாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.

'பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வம் அன்றோ' ,

'அறியா பருவமடா' எனும் பாடல் சுத்தமான கரஹரப்பிரியா ராகத்தில் அமைந்த பாடல்.

மேற்குறித்த இந்த பாடல்கள் எல்லாம் சுசீலாவின் பெயரை சாதாரண பாமர மக்களிடமும் கொண்டு செல்லக் கூடியன வையாக இருந்தன.

சுசீலாவின் புகழொளி-குரல்வளம் மெல்ல மெல்ல திரை இசை வரலாற்றில் ஆழமாக வேர்விட்டுச் செல்லத் தொடங்கிற்று. சுசீலா அறிமுகமாவதற்கு முன்னரே திரைஇசையில் பல்வேறு பெண்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். 1948 லேயே முதல்பாடல் பாடிய பி. லீலா கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். ஜிக்கியோ தன் துள்ளல் குரலுடன் அசத்திக் கொண்டிருந்தார். கர்நாடக இசைமேதை எம்.எல். வசந்தகுமாரி, பழம்பெரும் நடிகை பின்னணிப் பாடகி பி.ஏ. பெரியநாயகி, ஜமுனா ராணி, ஏ.பி. கோமளா, ஆர். பாலசரஸ்வதி, சூலமங்களம் ராஜலட்சுமி, கே. ராணி, ஏ. ரத்னமாலா, எஸ்.ஜே. காந்தா என பல்வேறுபட்ட ஆனால் வெவ்றோன தனித்தன்மை வாய்ந்த குரலினிமை கொண்டவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.

இக்காலத்தில்தான் பி.சுசீலா அறிமுகமாகி தனது கணீரென்ற குரல்வளத்தால் இனிமையான உச்சரிப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருந் தார். 1955க்கு பின்னர் சுசீலாவின் குரல்வளம் ஒலிக்காத படங்கள் இல்லை யென்றே கூறலாம்.

'விழிபேசுதே விளையாடுதே',
‘தூக்கம் உன் கண்களை’,
'விண்ணோடும் முகிலோடும் விளையாடும்
வெண்ணிலவே',
'வருவேன் நான் உனது மாளிகையின்
வாசலுக்கே',
'நீலவண்ணக் கண்ணா வாடா',
'அமுதை பொழியும் நிலவே'

இவ்வாறான பாடல்கள் மூலம் சுசீலாவின் குரல்வளத்தின் இனிமை பல்வேறு படிநிலை களில் உணர்ச்சி நிலைகளில் வெளிப்படக்கூடிய வாய்ப்பு பெருகியது. வெகுஜனங்களிடையே திரைஇசை ஆர்வம் மேலிடவும் சுசீலாவிற்கான ரசிகர் குழாம் வளரவும் வாய்ப்பான சூழல் உருவாகி வந்தது.

1960களில் திரைஇசை வரலாற்றில் சுசீலா தன்னிகரற்ற தனது குரல்வளம் பெருகும் காலகட்டத்தில் இருந்தார். எவருடன் இணைந்து பாடினாலும், எவரது இசை யமைப்பில் பாடினாலும், யாருடைய பாடல் வரிகளை பாடினாலும் சுசீலாவின் 'பேரும் புகழும்' உச்சம் பெற்றது.

இந்த வளர்ச்சியின் ஒரு திருப்பமாக கல்யாணப் பரிசு படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சுசீலாவுக்கு தனிக்கவனத்தைக் கொடுத்தது. இப்படத்தின் இசை திரை இசையில் ஒரு புதிய மெலடி பரிணாமத்தை ஏற்படுத்தியது. ஏ.எம். ராஜா இந்தப் பணியை மேற்கொள்வதற்கு சுசீலாவினுடைய குரல் வளம் நன்கு உதவி யுள்ளது.

'உன்னை கண்டு நானாட'
'வாடிக்கை மறந்ததும் ஏனோ'
'ஆசையினாலே மனம்'
'காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி'

திரைப்படத்தில் 'பாட்டு' எத்தகைய இடத்தைப் பெறும் என்பதற்கு ஓர் புதிய பரிமாணம் தமிழ்சினிமாவில் உருவாகியது. கதையோடு காட்சியோடு நகர்த்தும் சம அளவில் பாடல் இடம் பெறும் ஒரு போக்கு வளர்ந்து வந்தது. இந்த வளர்ச்சியில் சுசீலாவின் குரல் தன்னி கரற்று இருந்தது, ஒலித்தது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்து உச்சத்தில் இருந்த பொழுது இவர்களது இசையில் பல்வேறு இசைமுத்துக்களை சுசீலா வெளிப்படுத்தியுள்ளார். வாணிஜெயராம் போன்ற பாடகிகள் வரும் வரை சுசீலா திரைஇசையில் கோலேச்சிக் கொண்டிருந்தார். பின்னர் புதியவர்களின் வருகை சாத்தியப்பட்டு புதிய வார்ப்புகள் உருவான பொழுது கூட சுசீலாவின் பாட்டு தமிழ்த் திரை இசையில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக திரைஇசையில் சுசீலா தன்னிகரற்று விளங்கிய மைக்கு அவரது தனித்த குரல்வளம் என்றால் மிகையாகாது.

திரைவானில் நீண்ட இசைப் பயணத்தை தொடர்ந்த சுசீலா இனிமேல் சினிமாவில் பாடமாட்டேன் என்ற அறிவிப்பை சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் இனிமேல் சினிமாவில் பாடாது இருந்தாலும் இதுவரை அவர் பாடிய பாடல்கள், இன்னும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். சுசீலாவின் ஆளுமையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்.

மது

© TamilOnline.com