ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
ஃப்ரீமாண்ட் (கலிபோர்னியா) வில் இயங்கி வரும் ஹிந்து ஆலயத்தில் சென்ற மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை புதிய விக்ரகங்கள் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதிய விக்ரகங்கள் ஸ்தாபனம் செய்யும் போது கும்பாபிஷேகம் என்ற புனித சடங்கு பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். கற்களில் வடிவமைக்கப்படும் கடவுள் சிலைகளுக்கு 'ப்ராணன்' அதாவது 'உயிர் ஓட்டம்' கொடுப்பதுதான் 'ப்ராண பிரதிஷ்டை' ஆகும். இவைகளை செய்து முடித்த பிறகுதான் கற்சிலை கடவுளாக மாறுகிறது என்பது ஆன்மீகர்களின் திடமான நம்பிக்கை.

ஏற்கனவே உள்ள ஆலய மண்டபத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ராமர், சீதை. லட்சுமணர் ஆகிய தெய்வங்களின் பளிங்கு கற்களான விக்ரகங்கள் வைக்கப்பட்டு, பக்தர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்கள்.

இப்போது நிர்மாணம் செய்யப்பட்ட விநாயகர், சிவலிங்கம், வெங்கடேஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தபதிகளால் தென்னிந்திய பாணியில் வடிவமைக்கப்ட்டுள்ளது.

ஆயலத்தின் மண்டபத்தையொட்டி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் நடுவில் ஸ்ரீவெங்கடாசலபதி சிலை அமைந்துள்ளது. வெங்கடாசலபதியின் வலதுபக்கம் பத்மாவதி தாயாரும், இடது பக்கம் சிவலிங்கமும் கம்பீரமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இவர்களுக்கு அருகில் வடக்கு நோக்கி, வெள்ளைநிற பளிங்கு கற்களினால் செதுக்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் எழிலுடன் காட்சியளிக்கின்றனர்.

புதிய மண்டபத்திற்கு வெளியே மரத்தடியில் விநாயகர் கிழக்கு நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார். அவருக்கு அருகில் ஓர் உயரமான மேடையில் நவகிரக விக்ரகங்கள் ஒன்பதும் வைக்கப்பட்டு, இவர்களை வலம் வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் நான்கு நாட்களாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திருவாளர்கள் கோவிந்த சீனிவாசன், வெங்கடேஷ் ஐயங்கார், ஜோனன் ஜோஷி, ராம்கிஷோர் மற்றும் தேவேந்திர திரிவேதி முதலிய வேத விற்பன்னர்கள் ஆகம விதிகளின்படி மூர்த்தி ஸ்தாபனமும் அதற்குரிய பூஜைகளும் செய்து வைத்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்து இறுதி நாளன்று அனைத்து சிலைகளும் ஆபரணங்களாலும், புஷ்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து கடவுளின் அருளை வேண்டினர்.

இதைதொடர்ந்து 40 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. தினமும் எல்லா விக்ரகங்களுக்கும் விசேஷ ஹோமங்களும், பூஜை வழிபாடுகளும் நடைபெற்று, கடந்த மே மாதம் 14 தேதி முடிவடைந்தது.

இந்த ஆலயம் ஃப்ரீமாண்டில், 3676, டிலாவேர் ட்ரைவ், CA, 94538 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 510.659.0855

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com