Mostly Tamil - 100வது நாள் நிகழ்ச்சி
மார்ச் 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. வசந்த காலத்தில் இன்னொரு பொன்மாலை பொழுது. அரங்கமே விழாக்கோலம் கொண்டிருக்க... பரபரப்பாய் கார்கள் வந்து கொண்டேயிருக்க... மக்கள் கூட்டம் நிரம்பி வழிய.... இருங்கள்.... இருங்கள்.... இது ஆஸ்கர் விழாவின் வர்ணனை இல்லை.... சரசரக்கும் பட்டுப்புடவைகள், பளபளக்கும் ஆபரணங்களுடன் கூடிய கூட்டம், சென்னை மியூசிக் அகாடமியின் நிகழ்ச்சியும் இல்லை....பின்னே?

சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாபகுதியின், 'Mostly Tamil' வானொலி நிகழ்ச்சியின் 100வது வார நிறைவை ஒட்டி நடந்த குதூகல விழா அது.

ஸ்டான்·போர்டு பல்கலைக்கழகம் நடத்தும் KZSU வானொலி நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமைதோறும் காலை 6 மணி முதல் 9 மணி வரை 90-1 பண்பலை வரிசையில் ஒளிபரப் பாகும் தமிழ் நிகழ்ச்சிதான். 'Mostly Tamil' 1999ம் வருடத்து மார்ச் மாதத்தில் சுதகாரன் சிவசுப்பிரமணியன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி இன்று Bay Area வாழ் தமிழர்களிடம் மட்டு மல்ல, ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகத்திலும் கூட மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 வாரம் ஒலிபரப்பானதை கொண்டாடும் வகையில் அமைந்ததுதான். Santo Clara Mayor உணவகத்தில் நடந்த குதூகலம்.

கிட்டதட்ட 300க்கும் மேல் கூடியிருந்த 'வானொலி நேயர்கள்' அனைவரும் 'Mostly Tamil Family' ஆக ஒன்று கூடியிருந்தது நமது ஊர் திருமண நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது... வரவேற்க வாசலில் வேறு சந்தனம், சர்க்கரை, பன்னீர்!

கே.எஸ். ஸ்ரீகாந்தும், மாலதி கண்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது நிகழ்ச்சி. சிறுவர் கள் மேடையை ஆக்கிரமிக்க அடுத்து வந்தது பல்சுவை விருந்து, செல்வி கிருத்திகா குமார் வழங்கிய மேஜிக் நிகழ்ச்சி, மீரா ஸ்ரீனிவாசன், காயத்தி மற்றும் குழுவினர் நடித்த ஓரங்க நாடகம் என்று மேன்மேலும் பரவசமான குவியல்கள்.

அடுத்து வந்தது பாட்டுக்குப் பாட்டு போட்டி நிகழ்ச்சி. சேகரும், உமா அவர்களும் சேர்ந்து நடத்திய இந்த போட்டியில் நான்கு அணிகள் கடுமையான போட்டியில் நேயர்கள் கைத்தட்டி ஆரவாரம் எழுப்பி அரங்கை அதிரவைத்தனர்.

Tech Music குழு வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கையில் காது குளிர கேட்ட மக்கள் வயிறு நிறைய சுவையான உணவு அங்கே.

அது முடிந்ததும் Best Family போட்டி. Mostly Tamil Family யில் Best Family யை தேர்ந்தெடுக்க வந்தவர்கள் ஸ்ரீ ராமனும் உமாவும். நகைச்சுவையும் நடைமுறையும் ஒத்த கேள்விகளுக்கு குடும்பத்தினர் குழம்பி பதில் கூற, கூட்டம் கொண்டாட்டம்தான்....!

இடையிடையே அங்கே வந்திருந்த சிலர் வாரந்தோறும் இந்த வானொலி நிகழ்ச்சியை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று சுவையான கருத்துப் பரிமாற்றம் வேறு. ''இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் நிறைய பண்ணனும். ஒரே ஒரு விஷயம். It will be good if everyone speaks only in Tamil என்று Mostly Tamil ல், Mostly Tamil பற்றி விமர்சித்தார் சரஸ்வதி அவர்கள். நேயர்கள் அழைத்துப் பேசும்போது தொடர்ந்து கேட்டு, முகம் தெரியாமல் அவர்கள் நெருங்கி நட்பாகி விட்டனர் என்று கூறினார் இன்னொருவர்.

அடுத்து வந்தது அரசியல் நெடியுடன் கலைமகள் கிரியேஷன்ஸ் நடத்திய நாடகம். தமிழ்நாட்டு அரசியல் தெரிந்தவர்கள் ரசிக்கும் படியாக அமைந்திருந்தது.

விழாவை தொகுத்தும், மற்றைய நிகழ்ச்சி களை நடத்தியதும் வாரந்தோறும் சுதாவுடன் கைகோர்த்து நிகழ்ச்சி படைக்கும் Cohosts நண்பர்கள். முகமறியாமல் கேட்டுப் பழக்கப்பட்ட குரல்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு நிகழ்ச்சி படைக்க, உற்சாகத்தில் திளைத்தனர் வந்திருந் தோர் அனைவரும்.

சிலோனில் பிறந்து ஆப்பிரிக்காவில் வளர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சுதா சொன்னார். ''மேலும் மேலும் புதுவிதமான தமிழ் நிகழ்ச்சிகளை தயாரிக்க பல வழிகளில் முயன்று வருகிறேன்'' என்று நிகழ்ச்சியின் நடப்புகளை யும், விழா கொண்டாட்டங்களையும் முன்னின்று உருவாக்கியதில் ஸ்ரீகாந்த் ராமபத்திரனுக்கு பெரும் பங்கு உண்டு. ''ரசிகர் நெஞ்சங்களை நேரில் கண்டு அவர்கள் விருப்பு வெறுப்பை கேட்க இது நல்லதொரு சந்தர்ப்பம்'' என்று அவர் சொன்னது சாலப் பொருந்தும்.

வைர மோதிரப் பரிசை ஏலம் விட்டு வந்த பணத்தை KZSU விற்கு வழங்கியது நேயர் நெஞ்சம்.

Bay Area வாழ் தமிழர்கள் ஒட்டுமொத்தமாய் கேட்ட ஒன்று 'செவ்வாய் தோறும் என்பது மாறி தினந்தோறும் என்று தோன்றும் Mostly Tamil?'

ஸ்ரீராமன் சபேசன்,
ஃபெரேமான்ட், கலிபோர்னியா

© TamilOnline.com