தமிழக அரசியலில் - Re'play'
எடுத்த எடுப்பிலேயே செண்டிமென்ட்டாகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. முதலமைச்சராக ஆனதையடுத்து ஜெயலலிதா பெரியார் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தப் போயிருக்கிறார். அப்போது தனது காலில் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்ற முயன்றிருக்கிறார். உடனே அங்கு நின்ற திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, "அண்ணா சமாதிக்குச் செல்லும் போது செருப்புகளைக் கழற்ற வேண்டாமென்று பத்திரிகைகளில் எழுதச் சொன்னவர் பெரியார்.

எனவே செருப்புகளைக் கழற்ற வேண்டாம்" என்று சொன்ன பிறகே மறுபடி செருப்புகளை அணிந்து கொண்டார் ஜெயலலிதா.

இந்தக் காட்சியை சுட்டெரிக்கும் வெயிலில் வெற்றுக் கால்களுடன் நின்றபடி ரத்தத்தின் ரத்தங்கள் பார்த்து மெய்சிலிர்த்திருக்கின்றனர்.

"நான் கடந்த சில தினங்களாகக் கருணாநிதியுடன் இருந்தேன். அவர் இயல் பாகவே உள்ளார். சிறு சலனமும் இல்லாமல் தெளிவாகவே உள்ளார். அவரைப் பார்க்க வந்தவர்கள் கண் கலங்கினார்கள். ஒரே ஆளாக நான் வந்த போதே சோர்வு அடையவில்லை எனச் சொல்லி பார்க்க வந்தவர்களுக்குத் தெம்பூட்டினார்" என்று சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் திருமாவளவன் தி.மு.க தொண்டர்களிடையே பேசி தெம்பூட்டியுள்ளார்.

பதவியேற்றவுடன் ஜெயலலிதா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றிலிருந்து...

கேள்வி: கருணாநிதி, ஸ்டாலின், மாறன் ஆகியோர் 5 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டதாகவும், பதவிக்கு வந்தவுடன் நடவடிக் கை எடுப்பதாகவும் சொன்னீர்கள். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

பதில்: போகப் போக என்ன நடவடிக்கை என்று தெரியும். எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது.

"எங்களின் ஐந்தாண்டு கால அடுக்கடுக்கான சாதனைகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பரிசாக இந்தத் தேர்தல் முடிவு களைக் கருதுகிறேன். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் சட்டத்தின் படி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்ற பொய்ப் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் கில் அவர்களே வேட்பு மனு தள்ளுபடி என்பது சட்டப்படியாகச் செய்யப்பட்டது என்று அறிவித்த பிறகும் பொய்ப் பிரச்சாரம்தான் வெற்றி பெற்றிருக்கிறது"

"இந்தத் தோல்வி எதையும் உணர்த்தி விடவில்லை. அண்ணா அவர்களே தோற்றிருக் கிறார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களே தோற்றிருக்கிறார். அதெல்லாம் எதை உணர்த் துகிறது என்று கேட்க முடியுமா? தி.மு.க ஆட்சியின் தவறுகளால் தோற்று விட்டார்கள் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் காமராஜர் தோற்றதற்கு என்ன காரணம்?"
- மு.கருணாநிதி

"தமிழ்நாட்டில் 1996-இல் லஞ்சம் தலை விரித்தாடிய அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்து வதற்காக மக்கள் தி.மு.கவுக்கு ஆணை யிட்டார்கள். பின்னர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரும் முன்பு, பெண் மீது வழக்குப் போட வேண்டுமா என கருணாநிதி யோசித்தார்.

அப்போது ஜெயலலிதாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டீர்களா? பணம் வாங்கிக் கொண் டீர்களா? என த.மா.காவினர் கேட்டனர். மக்களின் ஆணைப்படி வழக்குப் போட்டோம்"

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் முரசொலி மாறன் பேசியது.

சரவணன்

© TamilOnline.com