கரண்டியும், கவிதையும் போதும் கலக்க!
அமெரிக்க விஜயத்துக்காகப் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, அத்தை மகன் முத்து மூக்கை நுழைத்தான். மதனோட 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' கேரக்டருக்கு முத்தான உதாரணம் இவன்தான்.

என்ன...அமெரிக்கா போயிடப் போறே போலிருக்கே! ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு குரலில் கவலை தொனிக்க அவன் கேட்ட போது எனக்குள் என்னவோ செய்தது.

ஆமாம்... இதில் கவலைப்பட என்ன இருக் கிறது என்றேன். ஜாக்கிரதை! உன்னை அங்கே யாருமே மதிக்கமாட்டார்கள் என்றான் முத்து. கிராதகன், வாயைத் திறந்தாலே பயமுறுத் தல்தான். என்ன...சொல்றே? திக்கித் திணறி கேட்டேன்.

அங்கே எல்லாமே கம்ப்யூட்டர் மயம்! நீயோ ஞான சூனியம்! என்றவன் பக்கத்து வீட்டுப் ப்ரியா டைனிங் டேபிளில் விட்டுச் சென்றிருந்த புத்தகத்தைப் புரட்டியபடியே கேட்டான்,

அட லோட்டஸ் தெரியுமா உனக்கு?

''நன்றாகக் கேட்டாய் போ...அது பிஜேபியின் தேர்தல் சின்னம்தானே''என்றேன்.

பைத்தியமே! நான் கேட்டது கம்ப்யூட்டர் லோட்டஸ் 1,2,3!

எனக்கு அதெல்லாம் தெரியாது. சைபர்தான் தெரியும்!

''யெஸ்...யெஸ் cyber உலகத்திற்குள்தான் போகிறாய். அவர்கள் பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தை ஆள்கிறார்கள். உன்னைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்றான் முத்து.

தனது நாரதர் வேலை முடிந்த திருப்தியோடு முத்து கிளம்பி விட்டான். எனக்குள்ளே கலவரம் புகுந்து கொள்ள நிலவரம் மோசமானது. மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை செய்யும் கண்ணனிடம் என் கவலையைச் சொன்னேன்.

''வாஸ்தவம்தான்...இப்போ அமெரிக்காவே ஈ யில்தானே இயங்குகிறது'' என்றான் கண்ணன். அமெரிக்காவிலும் ஈ தொல்லையா? என்றேன் ஆச்சரியமாக.

'' ஐயோ மாமி, e என்றால் எலக்ட்ரானிக்ஸ். பேசாமல் E com படியுங்கள்'' என்று அவன் பங்குக்கு குழப்பிவிட்டுச் சென்றான். E com எல்லாம் உங்களுக்கு ஜாஸ்தி. B to B படியுங்கள் என்கிறாள் ப்ரியா. B to M com தான் மாமி இப்போ ட்ரெண்ட் என்றும் ஒரு அட்வைஸ்.

சிலிகான் வேலியிலிருந்து அடிக்கடி டாலர் அள்ளிக் கொண்டு வரும் சந்துருவோ P to P தான் இப்போ லேட்டஸ்ட் என்று போட்டான் ஒரு போடு. சத்ரு...சத்ரு என்று சபித்துக் கொண்டேன். ''பேசாமல் A,B,C,D...26 எழுத்துக்களையும் படித்து விட்டுப் போ'' என்று என் கணவர் 'கடித்துக்' குதறினார்.

எதையும் படிக்காமலேயே, நெஞ்சில் திகிலோடு அமெரிக்கா வந்திறங்கினால், ''அம்மா தும்கூர் புளி கொண்டுவந்திருக் கிறாயா? கருவேப்பிலை பொடி கொண்டு வந்திருக்கிறாயா? உன் புளியோதரைக்காக இங்கு ஒரு கூட்டமே காத்திருக்கிறது'' என்றாள் என் மகள்.

என் கையிலிருந்த ஆந்திர ஆவக்காய் ஊறுகாய் பாட்டிலைப் பிடுங்க பெரிய அடிதடியே நடந்தது. எல்லோரும் கம்ப்யூட்டர் நிபுணர்கள். மௌஸோடு விளையாடும் அவர்களிடம் எனது கரண்டிக்கு இருந்த மவுசு என்னை வியக்க வைத்தது.

'பனானா லீப்' ரெஸ்டாரெண்டில் அற்புதமான சாப்பாட்டுக்குப் பின்...என் மருமகன், ''அத்தை சாப்பாடு எப்படி? என்றான்.

''ஆஹா... ஆலிவர் கோல்ட்ஸ்மித் சொன்னான் no meat tastes so sweet as the meat for which you have not paid என்று... என்றேன் திருப்தியாக. அவன் நிதானமாகக் கேட்டான், யார் அந்த கோல்ட்ஸ்மித்?. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

அடப்பாவி...கோல்ட்ஸ்மித் யார் என்றா கேட்டாய்? இலக்கியச் சோலையில் இன்னிசை பாடிய குயிலல்லவா அவன்! பாரதியை இரசித்திருக்கிறாயா? பாரதிதாசனைச் சுவைத் திருக்கிறாயா? கம்பனை, காளிதாசனை அறியமாட்டாயா? என்று கேள்விக் கணை களைத் தொடுத்தேன்.

எனைச் சுற்றி அமர்ந்திருந்த அத்தனை கம்ப்யூட்டர் பிரகஸ்பதிகளும் சோகமாய்த் தலையை ஆட்டினார்கள். எனக்குள் உற்சாகம் பொங்கியது. கவிதையையும், கரண்டியையும் வைத்துக் கொண்டே இவர்களை ஆட்டி வைத்து விட முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் பெருக்கெடுத்தது. அடேய்...முத்து என்னையா மிரட்டினாய், இப்போது பாரடா என்று மனதுக்குள் கொக்கரித்தேன்.

அதே சமயம் வாழ்க்கையில் எத்தனை நல்ல விஷயங்களை, ரசனைமிக்க இன்பங்களை இவர்கள் 'மிஸ்' பண்ணுகிறார்கள் என்பதை நினைத்தபோது வருத்தமாக இருந்தது. இலக் கியத் தென்றலின் சுகத்தை இவர்களுக்கும் அளிக்க, அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க நான் ரெடி, நீங்க ரெடியா?.

அகிலா கிருஷ்ணன்,
சான் ஜோஸ், கலிபோர்னியா

© TamilOnline.com